சென்னை : வேட்பாளர்களில் அடுத்தடுத்து பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அலற துவங்கியுள்ளனர்.
தமிழகம் முழுதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., - தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோர், தீவிரதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்களும், வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று, ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தே.மு.தி.க., துணை செயலர் சுதீஷ், கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![]()
|
இதைத் தொடர்ந்து, சேலம் மேற்கு தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் மோகன்ராஜுக்கு, நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது. இவரும், வடபழநி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளரும், அக்கட்சியின் மாநில துணை செயலருமான பார்த்தசாரதிக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அதிக காய்ச்சல் காரணமாக, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தி கொண்டு, சித்த மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், கொரோனா தொற்று அறிகுறியுடன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரும், அண்ணாநகர் தொகுதி வேட்பாளருமான பொன்ராஜுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது, சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன், வேளச்சேரி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சந்தோஷ் பாபுவுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்தி, சிகிச்சை பெற்று வருகிறார். தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.