தமிழகம், கேரளா, புதுச்சேரியில், ஒரே கட்டமாக, ஏப்ரல், 6லும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாகவும், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்க உள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில், பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதன்பின் நடைபெறும் மிகப்பெரிய தேர்தல் இது. தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது, சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதால், அதைத் தடுக்க, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் அமைத்து கண்காணித்து வருகிறது. அந்தப் படையினரின் அதிரடி சோதனையில், ஐந்து மாநிலங்களிலும், 16ம் தேதி வரை, 331 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மதுபானங்கள் மற்றும் பரிசு பொருட்கள பறிமுதலாகி உள்ளன. அதேநேரத்தில், தமிழகத்தில், 19ம் தேதி வரை, பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் பறிமுதல் செய்த தங்கம், வெள்ளி, பணம், மதுபானங்களின் மதிப்பு, 217 கோடியே, 35 லட்சம் ரூபாய். இவற்றில், பணம் மட்டும், 80.88 கோடி ரூபாய்.
இப்படி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதலில், தமிழகம் முதலிடத்தில் இருப்பது மட்டுமின்றி, ஐந்து மாநிலங்களில் பறிமுதலான பணம், பொருட்களின் மதிப்பு, 2016ம் ஆண்டை விட அதிகமாகும். தேர்தல் நேரத்தில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது, தமிழகத்தைப் பொறுத்தமட்டில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின் தான் பிரபலமானது. அதுவரை நடத்திருந்தாலும், அது பெரிய அளவில் பேசப்படவில்லை.அந்த இடைத்தேர்தலுக்கு பின், எப்போது தேர்தல் வந்தாலும், எந்தக கட்சி வேட்பாளர் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, பெரும்பாலான வாக்காளர்களிடம் உருவாகி உள்ளது.
அதனால், கட்சிகள் சார்பில், ஒவ்வொரு ஓட்டுக்கும் கொடுக்கப்படும் பணத்தின் அளவும், தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது.சில தொகுதிகளில் வாக்காளர்களிடம் சென்று, இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிக்கப் போகிறீர்கள் என்று கேட்டால், 'இன்னும், 'கவனிக்க' வேண்டியவர்கள் வரவில்லை; அவர்கள் வந்து எப்படி கவனிக்கின்றனரோ, அதன் பிறகே, யாருக்கு ஓட்டு என்பதை முடிவு செய்வேன்' என, சொல்பவர்களே அதிகம்.
ஓட்டுக்கு துட்டு தரும் வழக்கத்தை தடுக்க, தேர்தல் ஆணையம் என்ன தான் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்டுப்பாடுகள் விதித்தாலும், தினம் தினம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலும், அது பெரிய அளவில் பலன் தருவதாக தெரியவில்லை. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வேட்பாளர்களும், வாக்காளர்களும், அவற்றை மதிப்பதும் இல்லை.
தேர்தல் ஆணையமும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க, நுாற்றுக்கணக்கில் தேர்தல் பார்வையாளர்களை நியமித்தாலும், அவர்களை எளிதாக ஏமாற்றி, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் தருவது தடையின்றி தொடர்கிறது. பணப் பட்டுவாடா காரணமாக, வேலுார் லோக்சபா தொகுதி மற்றும் ஆ.கே.நகர் சட்டசபை தொகுதிகளில், தேர்தலை சில மாதங்கள் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்து, பின், மீண்டும் நடத்தியும், வருமான வரித் துறையினர், தேர்தல் நேரங்களில் அதிரடி சோதனைகள் நடத்தியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதிலிருந்தே, வாக்காளர்கள் தங்களின் விலை மதிப்பற்ற ஓட்டுகளை விற்கும் முட்டாள்தனத்தை தொடர்ந்து செய்வதை அறியலாம்.தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, அரசே தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் நடைமுறையை அமலாக்கலாம் என்ற யோசனை முன்னர் கூறப்பட்டாலும், அதற்கு தேர்தல் ஆணையமே எதிர்ப்பு தெரிவித்து விட்டது. இருந்தாலும், அந்த முறையை அமல்படுத்தலாமா என, மீண்டும் ஒரு முறை ஆலோசிப்பது அவசியம்.
அப்போது தான், பணம் படைத்தவர்களே அதிக அளவில் தேர்தலில் நிற்பது தடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றக் கூடிய, தகுதியான வேட்பாளர்கள் நிற்கும் சூழ்நிலை உருவாகும். மேலும், பிரபல நிறுவனங்களிடம், அரசியல் கட்சிகள் பெரிய அளவில் நன்கொடை பெறுவதற்கும், தடை விதிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.'கிரிமினல்' வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் நிற்பதற்கும் தடை அவசியம். இது தவிர, வேறு பல கடுமையான விதிமுறைகளையும் அமல்படுத்த வேண்டும்.
இதற்காக, மத்திய அரசு ஒரு குழுவை நியமித்து பரிந்துரைகள் பெறலாம். அப்போது தான், நல்லவர்கள் அரசியலுக்கு வர முடியும். அரசின் செயல்பாடுகளிலும் நேர்மை இருக்கும். மேலும், வாக்காளர்களும், ஓட்டுக்கு துட்டு வாங்கும் தங்களின் மனநிலையை மாற்ற வேண்டும்.இல்லையெனில், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது போன்ற நிலைமையே தொடரும். மாற்றம் ஒன்றே நிரந்தம்; அந்த மாற்றத்தை இந்த விஷயத்தில் ஏற்படுத்தினால் நல்லதே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE