கட்சிக்கு பொருளாளர், தொழிலுக்கு பங்குதாரர்! வரி ஏய்ப்பு தெரிந்தும், கப்சிப் ஆன கமல் | Dinamalar

கட்சிக்கு பொருளாளர், தொழிலுக்கு பங்குதாரர்! வரி ஏய்ப்பு தெரிந்தும், 'கப்சிப்' ஆன கமல்

Added : மார் 24, 2021 | கருத்துகள் (2) | |
வரி ஏய்ப்பு செய்வது உறுதியான பின்னும், தன்னுடைய கட்சியின் பொருளாளர் மீது கமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகரனுக்குச் சொந்தமான, திருப்பூர், 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனத்துக்கு சொந்தமான, எட்டு இடங்களில், கடந்த 17ம் தேதி, வருமானவரித்துறையினர் விடிய, விடிய 'ரெய்டு' நடத்தினர்.

வரி ஏய்ப்பு செய்வது உறுதியான பின்னும், தன்னுடைய கட்சியின் பொருளாளர் மீது கமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகரனுக்குச் சொந்தமான, திருப்பூர், 'அனிதா டெக்ஸ்காட்' நிறுவனத்துக்கு சொந்தமான, எட்டு இடங்களில், கடந்த 17ம் தேதி, வருமானவரித்துறையினர் விடிய, விடிய 'ரெய்டு' நடத்தினர். அதில் ரொக்கமாக, 11.5 கோடி ரூபாய் சிக்கியது; ரூ.80 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு உறுதியானது.

இவருடைய நிறுவனத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.451 கோடி மதிப்பில் அம்மா பேபி கிட், கொரோனா கவச உடைகள், முகக் கவசங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளது. மொத்தமாக, 1,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனம், 80 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வரி ஏய்ப்பு செய்திருக்குமா என்ற சந்தேகத்தையும் பலரும் எழுப்பி வருகின்றனர்.

இதனால், சந்திரசேகரன் இயக்குநராகவுள்ள மற்ற நிறுவனங்களின் ஆவணங்களையும் சரி பார்க்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.தொழிலுக்கு 'பார்ட்னர்'கடந்த பிப்.,19ல் கமலும், சந்திரசேகரனும் பங்குதாரராக இணைந்து, 'ராஜ்கமல் பிரண்டையர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைப் புதிதாக துவக்கியுள்ளனர். கமலின் வீட்டு முகவரியிலேயே, இந்த நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தி, வேளாண் பொருட்கள், இரும்பு வர்த்தகம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ளுமென்றும் கம்பெனிகள் பதிவுத்துறைக்குத் தரப்பட்டுள்ள ஆவணத்தில் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலின் கட்சிப் பொருளாளராகவுள்ள சந்திரசேகரன் மீது வரி ஏய்ப்பு புகார் வந்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு, இந்த நிறுவனமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏற்கனவே, ஐந்து மாநில அரசுகளுக்கு பல்வேறு பொருட்களையும் சந்திரசேகரனின் நிறுவனம் வினியோகம் செய்துவரும் நிலையில், கமல் பங்குதாரராகச் சேர்ந்த இந்த நிறுவனமும் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காகத் துவக்கப்பட்டதா என்ற சந்தேகமும் கிளம்பியிருக்கிறது.

ஆனால், இந்த நிறுவனம் பற்றி கமலிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்தத் தெளிவான பதிலையும் தரவில்லை. 'வரி ஏய்ப்புப் புகார் உறுதியானால் கட்சியின் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா' என்று கேட்டதற்கும், 'ஊடகங்கள் கேள்வி கேட்பதற்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என்று கூறினார். தொடர்ந்து, 'கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்; சட்டம் தன் கடமையைச் செய்யும்' என, குழப்பமான 'டயலாக்' கமல் விட்டார்.

அதற்குப் பின்னும் சந்திரசேகரனை கட்சிப் பொறுப்பிலிருந்து கமல் நீக்கவில்லை. கமல் கட்சி நடத்துவதற்காக சந்திரசேகரனும், அவருடன் இணைந்து தொழில் செய்யும் சிலரும் பெரிய அளவில் நிதியுதவி செய்திருப்பதாகவும், அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், கமல் தவிப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.


'பிஸினஸ் அரசியல்'

கடந்த வாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய கமல், ''நீங்க போடுற அநியாய ஜி.எஸ்.டி., வரியையும் நான் சேர்த்துக்கட்டியிருக்கிறேன். நேர்மையா வரி கட்டுற என்னைப் பார்த்து கேள்வி கேக்குறீங்களா' என்று பா.ஜ., கட்சியினரை மறைமுகமாகச் சாடினார். அவ்வளவு நியாயமாக எல்லா வரியையும் செலுத்தும் கமல், வரி ஏய்ப்பு செய்த தன் கட்சியின் பொருளாளர் மீதே நடவடிக்கை எடுக்கத் தயங்குவது, அவருடைய அரசியல் நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கமல் அரசியலுக்கு வந்ததன் நோக்கமே, பல்வேறு அரசுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, இத்தகைய நிறுவனங்கள் மூலமாக வர்த்தகம் செய்வதற்குத்தானா என்ற சந்தேகத்தையும் நடுநிலையாளர்கள் எழுப்பத் துவங்கியுள்ளனர். கமலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X