சென்னை: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், கூட்டணி கட்சியினர் சரிவர தேர்தல் வேலை செய்யவில்லை என்ற தகவல், ஆளும் கட்சிக்கு தெரிய வந்துள்ளது.
கூட்டணி கட்சிகளில், எது தீவிரமாக தேர்தல் பணியாற்றுகிறது; பெயரளவுக்கு வேலை செய்வது யார் என, அ.தி.மு.க., தலைமை ரகசிய ஆய்வு நடத்தியுள்ளது. பா.ஜ.,வினர் மட்டுமே, ஒவ்வொரு தொகுதியிலும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரம் செய்து வருவது தெரிய வந்துள்ளது. ஆட்சியின் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வதுடன், சமூக வலைதளங்களிலும், தி.மு.க.,வுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்கின்றனர். இது, அ.தி.மு.க.,வுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
மற்ற கூட்டணி கட்சியினர், தங்கள் வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே வேலை பார்ப்பதும், கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பெயரளவுக்கு மட்டுமே பிரசாரம் செய்வதும் தெரிய வந்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க., தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, 100 சதவீத வெற்றியை பெற, தங்கள் கட்சி தொண்டர்களை தீவிரமாக களப் பணியாற்ற அறிவுறுத்துமாறு, கூட்டணி கட்சிகளின் தலைமையிடம், அ.தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.