பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரம் எடுபடாது!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரம் எடுபடாது!'

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (46)
Share
திரைப்பட நடிகர், வர்த்தகர், அரசியல்வாதி என, தன் இளம் வயதில், பன்முக தன்மையுடன் திகழ்கிறார், மறைந்த தமிழக காங்., செயல் தலைவர் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த். கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய்வசந்த், நம் நாளிதழின் தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: அப்பா வசந்தகுமார் இறந்த நிலையில், உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு
Vijay Vasanth, Congress, Kanyakumari Lok Sabha byelection

திரைப்பட நடிகர், வர்த்தகர், அரசியல்வாதி என, தன் இளம் வயதில், பன்முக தன்மையுடன் திகழ்கிறார், மறைந்த தமிழக காங்., செயல் தலைவர் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த். கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய்வசந்த், நம் நாளிதழின் தேர்தல் களத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:


அப்பா வசந்தகுமார் இறந்த நிலையில், உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதை, வாரிசு அரசியலாக எடுத்துக் கொள்ளலாமா?


அப்பா இறப்பதற்கு முன்னரே, நான் அரசியல் பிரவேசம் செய்து விட்டேன். அகில இந்திய காங்., உறுப்பினராக, 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்டேன். டாக்டர் மகன் டாக்டர், வழக்கறிஞர் மகன் வழக்கறிஞர் என்கிற போது, அதை வாரிசாக பார்ப்பதில்லை; தொழிலாக பார்க்கப்படுகிறது. ஆனால், அரசியல்வாதி மகன் மட்டும், அரசியலுக்கு வந்தால், வாரிசு அரசியல் என, விமர்சிக்கப்படுவது சரியல்ல. கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இளைஞர் என்ற தகுதியுடன், எனக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டு உள்ளதாகவே, நான் கருதுகிறேன்.


கொரோனா பாதிப்பால் தான், உங்கள் அப்பா வசந்தகுமார் இறந்தார். அவர் இறந்ததுமே, நீங்கள் தான் வேட்பாளர் என முடிவெடுத்து, தொகுதியில் அவர் பார்த்த வேலைகளை பார்க்க துவங்கி விட்டீர்களே?


கொரோனா பாதிப்பில் இருந்து, அப்பா முற்றிலுமாக குணமடைந்து விட்டார். ஆனாலும், நிமோனியா பாதிப்பால் அவர் இறந்ததும், நான் தான் வேட்பாளர் என்ற, முடிவெல்லாம் எடுக்கவில்லை. மூத்த மகன் என்ற முறையில், தொகுதியில் அவர் விட்டு சென்ற அரசியல் பணி, வியாபாரம், சமூக சேவை பணிகளை, நான் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, வசந்த் பவுண்டேஷன் வாயிலாக, ஏழை, எளிய மாணவ - மாணவியரின் கல்விக்கு உதவித்தொகை வழங்குவது; காங்கிரசில் நலிவடைந்த பேச்சாளர்கள் மற்றும் கட்சியினரின் குடும்பத்திற்கு, மாதம்தோறும் நிதியுதவி வழங்குவது; விதவை பெண்கள் சொந்தக்காலில் நிற்கும் வகையில், தொழில் துவங்க உதவுவது போன்ற, சமூக பணிகளை அப்பா செய்து வந்தார். அவர் விட்டு சென்ற பணிகளை நிறைவேற்றி, அதை தொடர வேண்டியது என் கடமை. அந்த அடிப்படையில் தான், தொகுதியில் மக்கள் நலப் பணிகளை பார்க்க துவங்கினேன்.


உங்களை எதிர்த்து போட்டியிடும், பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த போது, வணங்கி, வாழ்த்து சொன்னீர்கள். பின், டுவிட்டரிலும், பாராட்டினீர்கள். இந்த அணுகுமுறை, தமிழகத்தில் புதிதாக இருக்கிறதே?


கிரிக்கெட் விளையாட்டில், எதிரணி பலசாலியாக இருந்தாலும், பலவீனமாக இருந்தாலும், எதிரியாக கருதி விளையாடக் கூடாது. போட்டியாளாராக கருதியே விளையாட வேண்டும் என்பர். போட்டியாளரை எதிரியாக சித்தரித்து நீயா, நானா என்ற, மனோபாவத்துடன் செயல்படாமல், புதிய வித்தியாசமான அரசியல் நாகரீகத்துடன், போட்டியாளரை களத்தில் சந்திக்க வேண்டும் என, விரும்புகிறேன்.

விரோதம், குரோதம், சூழ்ச்சி, வஞ்சகம், சதி, வெறுப்பு அரசியல் என்று இல்லாமல், ஆரோக்கியமான அரசியலை, இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும்; அதற்கு நான், ஒரு உதாரண அரசியல்வாதியாக இருக்க விரும்புகிறேன்.


நேற்று நடிகர்; இன்று அரசியல்வாதி; இதை எப்படி பார்க்கிறீர்கள்?


கலைத்துறை மீது இருந்த ஆர்வத்தால் நடிகரானேன். இயக்குனர் சொல்லி கொடுத்ததை நடித்தேன். நடிப்பும், ஒரு தொழில் தான். அரசியல் அப்படி அல்ல. மக்களின் நல்லது, கெட்டது தெரிந்து, அறிந்து செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மை, முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மை தேடி வருபவர்களுக்கு, ஓடிச்சென்று உதவி புரிய வேண்டும் என்ற, உணர்வு மேலோங்குகிறது.

மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன் வாயிலாக, அவர்கள் அடைகிற மகிழ்ச்சியில், நானும் திருப்தி அடைகிறேன். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வு உள்ளதாகவே கருதுகிறேன்.


அப்பா இருந்த வரையில், சத்தியமூர்த்தி பவனில், உங்கள் தலை தென்பட்டதே இல்லை என்கிறார்களே?


அப்படியெல்லாம் இல்லை. அப்பாவுடனும் வந்திருக்கிறேன்; அப்பா இல்லாமலும், நிறைய முறை வந்திருக்கிறேன். கட்சி நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளேன்.


பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் அமைச்சராவார். விஜய்வசந்த் வெற்றி பெற்றால் வெறும், எம்.பி.,யாகவே இருப்பார். யாருக்கு ஓட்டு அளிப்பது என முடிவெடுங்கள் என, பா.ஜ., பிரசாரம் செய்கிறதே?


இதை, பா.ஜ.,வின் மிரட்டல் பிரசாரத்தில், ஒன்றாகவே பார்க்கிறேன்; அது மக்களிடம் எடுபடாது. பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்த போது, எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பதால் தான், கடந்த தேர்தலில், அப்பாவிடம் தோல்வி அடைந்தார்.

மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு, எம்.பி., யாக இருந்தாலே போதும், அமைச்சராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ௩௯ தொகுதிகளுக்கும், மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டுமே. குமரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், எந்த ஒரு திட்டத்தையும், தொகுதிக்கு கொண்டு வர மாட்டேன். குமரி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலிப்பேன்.


ராகுலுடன் நெருக்கம் உள்ளதா; உங்களுக்காக பிரசாரம் செய்ய வருவாரா?


அந்த திருமுகத்திடம் நல்ல அறிமுகம் உண்டு. ஆனால், நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. குமரி மக்கள் ஆதரவுடன் லோக்சபாவிற்கு சென்றதும், ராகுலுடன் நெருக்கமான நட்பு கிடைக்கும் என, நம்புகிறேன். சமீபத்தில், கன்னியாகுமரி தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் பங்கேற்றார். அவருடன் நானும் பங்கேற்றேன். அவர் தேர்தல் பிரசாரமும் செய்தார்.


பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, பெரும் நடிகர் பட்டாளமே பிரசாரத்திற்கு வரவிருக்கிறது. நடிகரான உங்களுக்கு, திரை துறையை சேர்ந்த, உங்கள் நண்பர்கள் பிரசாரத்துக்கு வருவார்களா?


வருவார்களா என, தெரியாது. அவர்களை அழைப்பதற்கு, எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர்களின் வாழ்த்துக்களும், ஆதரவும் எப்போதும் எனக்கு உண்டு.


கன்னியாகுமரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விரும்பினாரா?


எனக்கு தெரியவில்லை.


latest tamil newsஉங்கள் அப்பாவிடம் இல்லாத, திட்டம் என்ன வைத்துள்ளீர்கள்?


தொகுதியில் படித்தவர்கள் அதிகம். பல்கலைகள், சட்டக் கல்லுாரி கொண்டு வருவேன். இயற்கை வளம், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும், தொழிற்சாலைகளை உருவாக்குவேன். பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட, சுய உதவி தொழிற்கூடங்கள் அமைக்க முயற்சி செய்வேன். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகள் எழுதுவதற்கு, சிறந்த பயிற்சி தரும் அகாடமிக்களை, சட்டசபை தொகுதி வாரியாக அமைத்து கொடுப்பேன். கன்னியாகுமரியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவேன்.


தமிழக காங்கிரசில், ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. அவர்களின் ஒத்துழைப்பு எப்படி?


காங்கிரஸ் என்ற தேன் கூட்டில், அனைவரும் தேனீக்களை விட சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். எனக்கு யாரும், எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்; அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.


கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி, தனி நபர் செல்வாக்கு சார்ந்ததா; சித்தாந்தம் சார்ந்ததா?


பாரம்பரியமான காங்கிரஸ் வெற்றிக்கு, மேலிடம் சார்ந்தது தான்.


தமிழகத்தில், பெரிய அளவில், பா.ஜ., வளர்ந்து விட்டதாக சொல்கிறார்களே?


அது, தேர்தல் முடிவில் தெரிய வரும்.


உங்கள் சகோதரி தமிழிசை, நீங்கள் வேட்பாளரானதும், வாழ்த்து சொன்னார்களாமே?


இல்லை.


கேரள காங்கிரஸ் தலைவர்கள், அடிக்கடி உங்கள் பிரசாரத்துக்காக வருகிறார்களா?


கட்சி மேலிடத்தில் இருந்து, நிறைய தலைவர்கள் வர உள்ளனர்.


உங்கள் அப்பா பெற்ற அளவுக்கு, ஹிந்து நாடார் ஓட்டுக்கள் உங்களுக்கு கிடைக்குமா?


குமரி மாவட்டத்தில் வசிக்கிற, அனைத்து தரப்பு மக்களின் ஓட்டுகளும், பெருவாரியாக எனக்கு தான் கிடைக்கும்.


நாங்குநேரி தொகுதியின், எம்.எல்.ஏ., பதவியை உங்கள் அப்பா ராஜினாமா செய்திருக்க வேண்டாம் என, நினைத்தது உண்டா?


அது, கட்சி மேலிடம் எடுத்த முடிவு. அந்த முடிவுக்கு அப்பா கட்டுப்பட்டார்.


கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?


ஒரு குடையின் கீழ், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, தேர்தல் பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், எனக்கு மகத்தான வெற்றியை தேடித்தரும்.


சர்சுகளில், பாதிரியார்களை சந்தித்து, உங்களுக்கு ஓட்டு கேட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டீர்களா?


பிரசாரத்தின் போது, அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறேன்.


வசந்தகுமார் பெற்ற அளவு ஓட்டுக்களை, உங்களால் பெற முடியுமா?


அப்பாவை போலவே, அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.


எம்.பி.,யாகி விட்டால், சினிமா வாய்ப்பு வந்தாலும், தவிர்ப்பீர்களா; முழு நேர அரசியல் தானா?


இனி, முழு நேர அரசியல் தான்.


நிச்சய வெற்றிக்காக, தொகுதியில் நிறைய பணத்தை கொட்டி, மக்களை உங்களுக்கு ஆதரவாக திருப்பி இருக்கிறீர்கள் என, எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனரே?


வெற்றி நிச்சயம் என்பது, 100 சதவீதம் உண்மை. ஆனால், பணத்தை கொட்டி, மக்களை திருப்பினேன் என்பது, 200 சதவீதம் பொய். கொரோனா பரவல் காலத்தில், தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், என் அப்பா நிவாரண உதவிகளை ஓடோடிச் சென்று செய்தார். தன் உயிரையும் துச்சமாக கருதி உதவி புரிந்தார். அவரது மனிதாபிமானம், மனித நேயத்தின் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கும் குமரி மக்கள், எனக்கு ஆதரவாக உள்ளனர்.


எம்.பி.,யானால், கன்னியாகுமரி தொகுதிக்கு செய்து கொடுப்பேன் என, எதை பிரதானமாக சொல்லி இருக்கிறீர்கள்?


முதல்கட்டமாக, தொகுதி முழுதும் பழுதடைந்த சாலைகளை செப்பனிட்டு, புதிதாக நல்ல சாலைகள் அமைத்து தருவதையும், குடிநீர் வசதியும், வேலை வாய்ப்பை பெருக்கி தருவதையும் முக்கியமாக சொல்லியுள்ளேன்.


அய்யா வழி தொண்டர்கள் ஆதரவை பெற, நீங்கள் முயற்சித்தீர்களா?


ஆம், அவர்களின் ஆதரவும் எனக்கு உண்டு.


கடந்த, 2019ல் பிரதமர் மோடிக்கு, எதிரான அலையில், வசந்தகுமார் வெற்றி பெற்றார். இப்போது, அப்படியில்லை என, காங்கிரஸ் கட்சியினரே சொல்கிறார்களே?


மோடிக்கு எதிரான அலை, தற்போதும் வீசுகிறது. எனவே, என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.


அப்பாவோடு தேர்தல் வேலை பார்த்தவர் என்பதால், கட்சியினரின் யோசனைகளை, நீங்கள் புறக்கணிப்பதாக புலம்பல் இருக்கிறதே?


யாருடைய யோசனையையும், நான் அலட்சியப்படுத்த மாட்டேன். அப்படியொரு எண்ணமும் எனக்கு கிடையாது. கட்சியினரின் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து, அதற்கு செயல்வடிவம் கொடுத்து செயல்பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X