என் உறவினரின் நிலத்தை ஆக்கிரமித்து, அதில் குடிசை அமைத்த, தி.மு.க.,வினர், காலி செய்ய முடியாது என, மிரட்டியுள்ளனர். எனக்கே இந்த நிலை என்றால், அப்பாவி மக்களான உங்களின் கதி, தி.மு.க., ஆட்சியில் என்னவாகும் என, எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
- பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
'நில அபகரிப்பு இலாகா என ஒன்றைத் துவக்கி, இஷ்டப்பட்ட நிலங்களை அபகரித்து விடுவரோ...' என, அச்சம் தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்ல, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. ஏனெனில், தி.மு.க.,வின், 13 முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடக்கிறது. ஸ்டாலின் முதல்வர் ஆகாதபடி, நான் தடுத்து வருவதால், என் மீது அவர் கடும் கோபம் கொண்டுள்ளார்.
- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி
'எந்தத் தண்டனையிலும் அவர்கள் சிக்குவதே இல்லையே; விலாங்கு மீன் போல தப்பித்து விடுகின்றனரே; அந்த லட்சணத்தில் தான், வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன...' என, அதிருப்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேட்டி.
சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கே சாதகமாக இருக்கும். தனித்து, 150 - 160 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்களின் கூட்டணி கட்சிகள், இன்னும் அனேக இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக்கு வலு சேர்ப்பர்.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி

'அப்போ, அமையவிருக்கும், தி.மு.க., அரசில், துணை முதல்வர் நீங்கள் தானா...' என, குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி பேட்டி.
இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது, இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இது, பா.ஜ., அரசின் இரட்டை போக்கையும், இரட்டை நாக்கையும் வெளிப்படுத்துகிறது.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி
'ஓட்டளித்தாலும் கண்டனம், ஓட்டளிக்காமல் புறக்கணித்தாலும் எதிர்ப்பா... தமிழர்களுக்காக தன் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ள மத்திய அரசு, இனியும் என்ன தான் செய்யும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.
தமிழக முதல்வர் இ.பி.எஸ்., 16 லட்சம் விவசாயிகளின், 12 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டதாக பெருமிதம் தெரிவிக்கிறார். இதற்காக அவர், ரிசர்வ் வங்கியில் எப்போது அனுமதி பெற்றார் என்ற தகவலை தெரிவிக்க முடியுமா?
- காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்
'ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற்று தான், காங்., ஆட்சியின் போது, தேர்தல் பிரசாரங்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டனவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE