வெளியில் வரலாமே, ஓட்டு போட!
ஒரு காலத்தில், தேர்தல் வந்தாலே, ஊரே, விழாக்கோலம் பூண்டு விடும். 80 சதவீதம் வரை, ஓட்டுகள் பதிவாகும். தேர்தல் திருவிழாவை, வீட்டு விசேஷம் போல் கருதி, ஓட்டளித்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள், இப்போது ஏனோ, நத்தை போல் வீட்டிற்குள் சுருண்டு விட்டனர்.இத்தனைக்கும் ஓட்டுப்பதிவு நாளன்று, பொது விடுமுறை அளிக்கப்படுகிறது; வெளியூரில் தங்கியிருப்பவர்கள், தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது.
அனுமதி
இப்போது நடக்க இருக்கும் தேர்தலில், 80 வயதிற்கு மேற்பட்டோருக்காக, தபால் ஓட்டு போட அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.தங்கள் சொந்த ஊர்களுக்கு, மக்கள் சென்று, ஓட்டு போட்டு திரும்பி வர, சிறப்பு பஸ்கள் கூட இயக்கப்படுகின்றன.எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும், அதிகபட்சம், 50 - 70 சதவீத ஓட்டுகள் தான் பதிவாவது நிதர்சனம். இதற்கென்ன காரணம்?நான் ஒருவன் ஓட்டு போடாவிட்டால் ஒன்றும் குடிமுழுகி போகாது வெயிலில் கால் கடுக்க நின்று, ஓட்டு போடுவது அவசியமா? எவனும் சரியில்லை... யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை
எவன் வந்தாலும், நமக்கொன்றும் செய்யப் போவதில்லை. அவனவன் பணம் சம்பாதிக்க பார்ப்பான் வெளியூரில் இருக்கும் நான், பணம் செலவழித்து ஓட்டு போட போக வேண்டுமா?- இப்படிப்பட்ட எண்ணமே ஓட்டு சதவீதத்தை குறைக்கிறது. 'நாம் கஷ்டப்பட்டு படித்து, வேலைக்கு போய் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம்.
அரசை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை...' என்ற மனப்போக்கு வளர்ந்து விட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.என்ன தான் தன்னிச்சையாக வாழ நினைத்தாலும், அரசின் துணை இல்லாமல், ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியாது என்பது தான் நிஜம்.இது, ஜனநாயக நாடு. அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டியது, நம் கடமை. அதே சமயம், நம்மை ஆள வேண்டியவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அந்த மாபெரும் சக்தி, நம்மிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. நல்ல அரசு அமைய, நமக்குள்ள அந்த உரிமையை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?நம்மிடம் இருக்கும் இந்த துருப்புச் சீட்டை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளத் தானே ஒவ்வொரு கட்சியும் பணம், இலவச பொருட்கள் மற்றும் கவர்ச்சி திட்டங்கள் என, அள்ளி வீசுகின்றன. இந்த துருப்புச் சீட்டை வீணாக்கி விட்டு, பிறகு, அரசை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இலவச பொருள்
எப்படியும், தன்னை சார்ந்தவர்கள் மற்றும் ஏமாந்த மக்களிடம் இருந்து, 45 - 50 சதவீத ஓட்டுகளை பெற்று, யாரோ ஒருவர், ஆட்சி அமைக்கத் தான் போகிறார். அப்போது, நம் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி அவரை அணுகினால், வேலை நடக்குமா?'நீ என்ன, எனக்கு ஓட்டு போட்டாயா... உனக்கெதற்கு நான் செய்ய வேண்டும்? உங்கள் பகுதி எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்பர் அல்லது 'பணத்தையும், இலவச பொருட்களையும் வாங்கிக் கொண்டு தானே ஓட்டு போட்டீர்கள். உங்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை; கொடுக்கல் - வாங்கல் வியாபாரம் முடிந்து விட்டது...' என்று, எடுத்தெறிந்து பேச மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுள்ளோம். சாதாரண வார்டு கவுன்சிலர் கூட, சிற்றரசர் போல் பந்தா காட்டி உலா வருகிறார். அவருக்கு தெரியாமல், அப்பகுதியில் உங்களால் வீடு கட்டி விட முடியுமா? அவருக்கு கப்பம் கட்டினால் தானே, வீடு முழுமை பெறும்.
அது மட்டுமில்லாமல், தெரு விளக்கு எரியவில்லை; குடிநீர் வசதி செய்யப்படவில்லை; சாக்கடை அடைத்துக் கொள்கிறது; குப்பை அகற்றவில்லை என்று, எந்த புகாராவது கொடுக்க முடியுமா? 'சம்திங்' கொடுத்து தான் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும்.இதெல்லாம் எதனால்... உங்கள் துருப்புச் சீட்டை சரியாக பயன்படுத்தாதது தான்; லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் நாமே வழி வகுக்கிறோம்.ஓட்டு போடுவதை தவிர்க்கும் வாக்காளர்கள் ஓட்டளித்தால் தான், ஆட்சி மாற்றம் ஏற்படும். இல்லாவிட்டால், இரண்டே கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்கும். ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளிக்காதவர்கள் என கருதப்படும், இந்த மேல்தட்டு வர்க்கத்தினரே. இவர்களின் ஓட்டு, தங்களுக்கு விழாது என்ற நம்பிக்கையில், எளியவர்களின் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதும் அடங்கிவிடும்.
அலட்சியம்
எனவே, வீட்டிற்குள் இருந்து வேடிக்கை பார்க்கும், குறிப்பிட்ட சதவீதத்தினர் ஓட்டுச் சாவடிக்கு சென்று, ஓட்டை பதிவு செய்து, மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஓட்டளிப்பதால், சாதாரண நபர் கூட, ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கேள்வி கேட்க முடியும். இந்த தகுதியை நமக்கு தருகிறது, ஓட்டுரிமை என்ற மஹா சக்தி. காலம் காலமாகத் தான், காலையில் விழித்தெழுகிறோம், சாப்பிடுகிறோம், வேலைக்கு சென்று சம்பாதிக்கிறோம், 'டிவி' பார்த்து, துாங்குகிறோம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, அரைமணி நேரம் செலவழித்து ஓட்டளிக்க செல்ல முடியாதா நம்மால்? சம்பளத்துடன் விடுமுறை அளித்தும், அலட்சியப்படுத்துவது தர்மமா?பெற்றவர்களை, பிள்ளைகளை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு நாடும் மிக மிக முக்கியம். ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு, ஓட்டுரிமை. எதிர்கால சந்ததியினருக்கு எதை பரிசாக விட்டு செல்லப் போகிறீர்கள்? இயற்கை வளங்கள் சுரண்டப்பட்ட, வறண்ட பாலைவனத்தையா...நம்மை ஆண்ட அரசர்களும், முன்னோரும் அப்படி நினைத்திருந்தால், இன்று நாம் நிம்மதியாக வாழ முடியுமா?
இடி அமீன், கொமேனி போன்ற சர்வாதிகாரிகளிடம் அகப்பட்டு விழி பிதுங்கி இருப்போம்.
அரசர்கள் கட்டிய பல அதிசயங்கள் உள்ளடக்கிய கோவில்களும், முன்னோர் வகுத்தளித்த சாஸ்திரங்களும், தர்மங்களும், அரிய கண்டுபிடிப்புகளும் இல்லை என்றால், உலகத்தின் முன் தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியுமா? 'இந்தியா போல் உண்டா...' என்று, உலகோர் மெச்சத் தான் முடியுமா!நம் சந்ததியினருக்கு சொத்து, சுகம் சேர்த்து வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, 'அரசியல் ஒரு சாக்கடை' என்ற இழிபெயரை மாற்ற, நாம் அவசியம், ஜனநாயக நடைமுறையில் பங்கு பெற வேண்டிய காலம் இது.செங்கோல் தாழும் போது, தட்டிக் கேட்கவும் நாம் மறக்கக் கூடாது. வில்லனுடன், 'ஹீரோ' நேருக்கு நேர் மோதுவது போல், சண்டை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உள்ளன. ஆட்சியாளர்களின் தவறுகள் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து விடுகின்றன.அது தவிர, கணினி, மொபைல் போன் இருக்கிறதே... சமூக வலைதளங்களில் தவறு செய்யும் ஆட்சியாளர்களை, 'கிழி கிழி'யென்று கிழித்து விட மாட்டோமா... சும்மாவே, 'மீம்ஸ்' போட்டு கலாய்ப்பவர்கள், ஓட்டை பதிவு செய்து விட்டு, உரிமையோடு இதை செய்யலாமே!கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள இச்சமயம், தக்க பாதுகாப்புடன் சென்று ஓட்டளித்து வாருங்கள்.'வரப்புயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோல் உயரும். கோல் உயரக் கோன் உயர்வான்...' என்று அவ்வை பாட்டி சொன்னது, அக்கால அரசர்களுக்கு மட்டுமல்ல, இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கும் தான்.அரசியல் - பணம் சம்பாதிக்கும் தொழில் என்ற மனநிலையை மாற்றுவோம். மக்களுக்காகத் தான் அரசியல் என்பதை, அழுத்தமாக பதிவு செய்வோம். நாளை மறுநாள், 100 சதவீதம்ஓட்டளித்து கடமையை செய்வோம்; கை மேல் பலன் பெறுவோம்!தொடர்புக்கு: ந.செல்வி பத்திரிகையாளர்இ - மெயில்: sel.dharam@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE