மீண்டும் மாற்றம்?
'தப்பான நபரை தேர்வு செய்து விட்டோமோ...' என, உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பற்றி, கவலையுடன் முணுமுணுக்கின்றனர், பா.ஜ., மேலிட தலைவர்கள். இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது, பா.ஜ., தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால், அவருக்கு பதிலாக, சமீபத்தில் தான், தீரத் சிங் ராவத்தை, முதல்வராக தேர்வு செய்தனர். இவர், உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சராக இருந்தவர். ஆனால், அவர் முதல்வர் பதவியேற்ற சில நாட்களிலேயே, 'இவரை ஏன் தான் தேர்வு செய்தோமோ' என, புலம்பத் துவங்கி விட்டனர், பா.ஜ., தலைவர்கள். பெண்கள், கிழிந்த 'ஜீன்ஸ் பேன்ட்' போடுவது குறித்து, கடுமையாக விமர்சித்தார் தீரத் சிங் ராவத்; இது, பெண்கள் அமைப்பினரிடையே, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக, 'ரேஷனில் அதிக அரிசி பெற வேண்டுமானால், ஒவ்வொரு பெற்றோரும், 20 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்; இதுவும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அணுகுண்டை வீசினார் ராவத். 'நம் நாட்டை, அமெரிக்கர்கள், 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்' என்றார். இதைக்கேட்ட பொதுமக்கள், 'பிரிட்டிஷ்காரர்கள் தானே, நம்மை ஆட்சி செய்தனர். இவர், அமெரிக்கர் என்கிறாரே... இந்த லட்சணத்தில், இவர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்' என, தலையில் அடித்துக் கொண்டனர். பா.ஜ., தலைவர்களோ, 'மீண்டும் முதல்வரை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE