Enjoye எஞ்சாமி... வாங்கோ வாங்கோ ஒன்னாகி...! குக்கூ... குக்கூ... ஓட்டுக்கு பத்தாயிரமா; அதுவும் பத்தலையாமா?| Dinamalar

'Enjoye எஞ்சாமி... வாங்கோ வாங்கோ ஒன்னாகி...!' குக்கூ... குக்கூ... ஓட்டுக்கு பத்தாயிரமா; அதுவும் பத்தலையாமா?

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021
கருமத்தம்பட்டி செல்வதற்காக, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திருந்த சித்ராவும், மித்ராவும், கடைசி பிளாட்பாரத்தில் உள்ள 'பார்க்கிங்' ஏரியாவில், ஸ்கூட்டரை நிறுத்தினர்.''போன வாரம் நாம ரெண்டு பேரும் பேசின மேட்டர், டில்லி வரைக்கும் போயிருக்கு, பார்த்தீங்களா,''''கலெக்டரையும், போலீஸ் கமிஷனரையும் டிரான்ஸ்பர் செஞ்சத சொல்றீயா. தி.மு.க., தரப்புல ஏகப்பட்ட
 'Enjoye எஞ்சாமி... வாங்கோ வாங்கோ ஒன்னாகி...!' குக்கூ... குக்கூ... ஓட்டுக்கு பத்தாயிரமா; அதுவும் பத்தலையாமா?

கருமத்தம்பட்டி செல்வதற்காக, காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திருந்த சித்ராவும், மித்ராவும், கடைசி பிளாட்பாரத்தில் உள்ள 'பார்க்கிங்' ஏரியாவில், ஸ்கூட்டரை நிறுத்தினர்.

''போன வாரம் நாம ரெண்டு பேரும் பேசின மேட்டர், டில்லி வரைக்கும் போயிருக்கு, பார்த்தீங்களா,''''கலெக்டரையும், போலீஸ் கமிஷனரையும் டிரான்ஸ்பர் செஞ்சத சொல்றீயா. தி.மு.க., தரப்புல ஏகப்பட்ட அதிகாரிகள் மீது, தேர்தல் ஆணையத்துல புகார் சொல்லியிருக்காங்க. இருந்தாலும், நடவடிக்கை எடுக்கலை. 'கிளப் மிட்நைட் மீட்டிங்' விவகாரம் சம்பந்தமா உளவுத்துறை ரிப்போர்ட், டில்லிக்கு பறந்திருக்கு. உண்மைன்னு தெரிஞ்சதும், டிரான்ஸ்பர் ஆர்டரை தட்டி விட்டுட்டாங்களாம்,''''கலெக்டரையே மாத்துனதுனால, சக அதிகாரிகள் பயந்து நடுங்குறாங்களாமே,''

''யெஸ், மித்து! தேர்தல் பணியில, வெவ்வேறு பொறுப்புல இருக்குற அதிகாரிங்க நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கு. தி.மு.க.,வினரை பார்த்தால் எந்திரிச்சு நின்னு கும்பிடு போடுற நிலைமைக்கு வந்துட்டாங்க,''''புதுசா வந்திருக்குற கலெக்டரும், தேர்தல் ஆணையத்தால நேரடியா நியமிக்கப்பட்டவருங்கிறதுனால, அவர்கிட்ட நெருங்குறதுக்கு, ஆளும்கட்சிக்காரங்க ரொம்பவே தயக்கம் காட்டுறாங்க,''

''புதுசா வந்திருக்கிற அதிகாரியும், வேகம் காட்டுறாரு போலிருக்கே,''''அவரு, ஜெ., முதல்வரா இருந்தப்பவே, நாலு வருஷம் கலெக்டரா வேற மாவட்டத்துல பணியாற்றியவராம்.'வடவள்ளிக்காரர்' மீது வழக்கு பதிவு செஞ்சிருக்கறதும், நேர்மையா தேர்தல் நடக்கும்னு காட்டிக்கறதுக்காக செய்ற, வேலைன்னு பேசிக்கிறாங்க,''''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''வடக்கு தொகுதி கிடைக்காததுனால, ஆளுங்கட்சி வி.ஐ.பி., மேல, 'வடவள்ளிக்காரர்' அதிருப்தியில் சுத்திக்கிட்டு இருக்காராம். நம்ப வச்சு கடைசி நேரத்துல கவுத்துட்டாருன்னு புலம்புறாராம். கட்சிக்காரங்க, 'சப்போர்ட்' எதிர்பார்த்த அளவு இல்லாம, ஆளுங்கட்சி வேட்பாளர் தடுமாற்றத்துல இருக்காராம்''

''ஆமாப்பா, நிலைதடுமாறி கீழே விழுந்து, காலில் கட்டுப்போட்டு, ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடக்காரு. தெற்கு தொகுதி கிடைக்கலைன்னு ரொம்பவே ஆதங்கத்துல இருந்தாரு; இப்ப, கமல் போட்டி போடுறதுனால, 'நல்லவேளை, தப்பிச்சிட்டோம்'னு, மனசை தேத்திக்கிட்டாராம்,''''தொண்டாமுத்துார் தொகுதி எப்படியிருக்கு; அமைச்சர் வேலுமணி குடும்பமே பிரசார களத்துல இறங்கிடுச்சாமே,''இருவரும் பேசிக்கொண்டே, பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர்.ரவா ரோஸ்ட் ஆர்டர் செய்த சித்ரா,

''யெஸ், மித்து! இரு சகோதரர்களும் களத்துல நேரடியா இறங்கி, கட்சிக்காரர்களுடன் இணைஞ்சு வேலை பார்க்குறாங்க. அமைச்சரின் தாயார், மனைவி, குடும்ப உறவினர்கள் பலரும் கிராமம், கிராமமா பிரசாரம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சுண்டக்காமுத்துார், ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட சில ஊர்களுக்கு போயி, கிராம பெரியவங்களை சந்திச்சு, ஆதரவு கோரியிருக்காங்க. அமைச்சரின் மகனும், சகோதரர்களின் மகன்களும் தனி கூட்டணி அமைச்சு, தனி ரூட்டுல போறாங்க,''''என்னக்கா, அந்தளவுக்கு கள நிலவரம் ரொம்ப 'டப்'பா இருக்கா, என்ன,''

''தி.மு.க.,வின் முதல், 'டார்கெட்'டே அமைச்சர் வேலுமணிதானே! அவருக்கு, 21 தொகுதி பொறுப்பு இருக்கு. மத்த தொகுதிக்கு போக முடியாத அளவுக்கு, தி.மு.க.,காரங்க 'லாக்' செய்றாங்க. இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களை களத்துல இறக்கி விட்டுட்டு, பக்கத்து மாவட்டத்துக்கு, சூறாவளி சுற்றுப்பயணம் போயிட்டு வர்றாரு, அமைச்சர்,''

''லியோனி பேசுனதும், ராசா பேசுனதும் தி.மு.க.,வுக்கு எதிரா திரும்பும் போலிருக்கே,''ரவா ரோஸ்ட்டை சாப்பிட்டபடி பேசிய சித்ரா, ''உண்மைதான்! கொங்கு மண்டலத்தை சேர்ந்த கவுண்டர் சமூகத்த சேர்ந்தவங்க ரொம்பவே கொதிப்புல இருக்காங்க. இன்னும் எலக்சனே நடக்கலை; இப்பவே ஒரிஜினல் முகத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

அதுவும் கொங்கு மண்ணுல வந்து, சீண்டி பார்க்குறாங்கன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. கருத்து திணிப்புகளை தலைகீழா மாத்துற மாதிரி, ரெண்டு நாளா, கள நிலவரம் மாறிட்டு வருது,'' என்றாள்.''இதுதான் நேரம்னு, தனது மகனை விகாைஷயும் அரசியல் களத்துல அமைச்சர் இறக்கி விட்டுட்டாரே,''''ஆமாப்பா, சுகுணாபுரத்துல நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை, அவருதான் தலைமை வகிச்சு நடத்துனாரு. கருணாநிதி குடும்பத்தை பத்தி விமர்சனம் செஞ்சது மட்டுமல்லாம, ராசாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விட்டாரு.

இதை பார்த்து, ரத்தத்தின் ரத்தங்களே ஆச்சரியப்பட்டாங்க,''பில்டர் காபியை உறிஞ்சிய மித்ரா, ''தொண்டாமுத்துார் மாதிரியே, தெற்கு தொகுதியும் ரொம்பவும் 'டப்'பா மாறிடுச்சு. அதனாலதான், கமல் கோட்டைமேட்டுக்கும் போனாரு; பேரூருக்கும் போயிட்டு வந்திருக்காரு,''''அப்படியா,'' என்றபடி, ஓட்டலில் இருந்து வெளியே வந்த மித்ரா, ''புதுசா வந்திருக்கிற, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை அதிகாரிகளை 'லெப்ட் ரைட்' வாங்கிட்டாராமே,'' என, இழுத்தாள்.

''ஆமாக்கா, உளவுத்துறை ரொம்பவே 'வீக்'கா இருக்கறதையும், அரசியல்வாதிகளுடன் உறவாடி, 'வசதி'யா இருக்கறதையும் தெரிஞ்சு வச்சிருக்காரு. உளவு பார்க்குறதுக்கு 'பிட்' இல்லாதவர்கள், வசூலில் குறியா இருப்பவர்களுக்கு 'வார்னிங்' செஞ்சிருக்காரு. யார், யார் என்னென்ன பண்றீங்கனு தெரியும். அதையெல்லாம் விட்டுட்டு வேலையை பாருங்கனு சொல்லிருக்காரு,''''இருந்தாலும், இன்னும் சில அதிகாரிகளை 'டிரான்ஸ்பர்' செய்யாம இருக்காங்களாமே,''''மித்து, அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சிலர் மீது, ஒரு குரூப் வஞ்சம் தீர்க்கறதுக்கு 'மூவ்' பண்ணிட்டு இருக்கு.

தி.மு.க., போர்வையில, எலக்சன் கமிஷனுக்கு பெட்டிசன் அனுப்பிட்டு இருக்கு. ஆணைய அதிகாரிகள் ரொம்பவே உஷாரா இருக்காங்க. தி.மு.க., தரப்புல சொல்ற புகாரை முழுமையா நம்புறதில்லை; உண்மை இருந்தா மட்டுமே நடவடிக்கை எடுக்குறாங்க,''''தி.மு.க.,விலும் உள்குத்து வேலை நடக்குதாமே,'' என்றபடி, பஸ்சில் ஏறி அமர்ந்தாள் மித்ரா.''ஆமாப்பா, கிணத்துக்கடவு தொகுதியிலதான், அந்த கூத்து நடக்குது.

தொகுதி கிடைக்கும்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புல இருந்த, 'மருதமலை'யை, கடைசி நேரத்துல கட்சி தலைமை காலை வாரிடுச்சு. புதிய நிர்வாகிகளுக்கும், பழைய நிர்வாகிகளுக்கும் இடையே முட்டல் மோதல் ஆரம்பிச்சிடுச்சு. போத்தனுாரில் ஆரம்பித்த பிரச்னை, மாச்சம்பாளையம் வரைக்கும் நீண்டிருக்கு,''

''நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்தா, எல்லா தொகுதியுமே சிக்கலாவே இருக்கும் போலிருக்கே; ஈஸியா ஜெயிக்கிற தொகுதியே இருக்காது போல,''

''நீ சொல்றதும் சரிதான்! ஓட்டுக்கு பணம் கொடுத்தே ஜெயிக்கிறதுக்கு கட்சிக்காரங்க பிளான் வச்சிருக்காங்க. தி.மு.க., தரப்புல எவ்வளவு கொடுக்குறாங்கன்னு பார்த்துட்டு, ஒரு மடங்கு அதிகமா பட்டுவாடா செய்வாங்களாம்.

அதாவது, தி.மு.க., 1,000 ரூபாய் கொடுத்தா, அ.தி.மு.க., தரப்புல ரூ.2,000, தி.மு.க., ரூ.2,000 கொடுத்தா, அ.தி.மு.க., ரூ.4,000 கொடுக்கப் போகுதாம். இதக்கேட்டா... நம்ம ஜனங்கள பார்த்து, 'அறிவோட' ஹிட்டான பாட்டு, அதான், 'Enjoye எஞ்சாமி... வாங்கோ வாங்கோ ஒன்னாகி!'ன்னு பாடத்தோனுது...,''''அக்கா, அஞ்சாயிரம் கொடுக்கப் போறதா சொன்னாங்களே,''

''அது, வி.ஐ.பி., தொகுதியிலப்பா! எவ்ளோ வேணும்னாலும் கொடுக்குறதுக்கு தயாரா இருக்காங்களாம். இதை கேள்விப்பட்ட உடன்பிறப்புகள், அ.தி.மு.க., தொண்டர்கள் பேசுற மாதிரி, ஒரு ஆடியோ தயாரிச்சு, சமூக வலைதளத்துல பரப்பி விட்டுருக்காங்க. அதுல, ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போறதா, கிளப்பி விட்டுருக்காங்க. இதே மாதிரி, தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு, ஆளுங்கட்சி வட்டாரத்தை பிரசாரம் செய்ய விடாம, முடக்கற வேலையில ஈடுபட்டுட்டு இருக்காங்க,''

''பூத் கமிட்டி பணத்தை அமுக்கிட்டதா சொல்றாங்களே, உண்மையா,'' என, நோண்டினாள் மித்ரா.''அதுவா, மேட்டுப்பாளையத்துல நடந்த விஷயம்,'' என்றபடி பஸ் ஏறினர் இருவரும். கருமத்தம்பட்டிக்கு இரண்டு டிக்கெட் வாங்கிய சித்ரா, ''காரமடை ஏரியா பூத் கமிட்டி செலவுக்கு நிர்வாகிகளிடம் பணம் கொடுத்திருக்காங்க; எலக்சனுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு. கட்சிக்காரங்களுக்கு கரன்சி போயி சேராததால, பிரசாரம் சூடுபிடிக்காம இருக்குதாம்,'' என்றாள்.

'இருந்தாலும், கட்சிக்காரங்க செலவழிக்க முடியாம, திணறுறாங்களாமே,''''அது வந்து, கொரோனா பரவாம முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கறதா சொல்லி, ஓட்டுச்சாவடி எண்ணிக்கையை அதிகப்படுத்திட்டாங்க. ஒவ்வொரு சாவடிக்கும் கட்சிக்காரங்க பூத் கமிட்டி போடணும். ஒவ்வொரு கமிட்டிக்கும் செலவுக்கு பணம் கொடுக்கணும்,''''சூலுார் தொகுதியில, 463 ஓட்டுச்சாவடி இருக்கு. ஒரு சாவடிக்கு, 5,000 ரூபாய் கொடுத்தாலே, ரூ.23.15 லட்சம் தேவைப்படுது. ''கணக்கு போட்டு பார்க்கும் கட்சிக்காரங்க விழி பிதுங்கி இருக்காங்க. கரன்சி வெட்டுனாதான், சொந்தக்கட்சி தொண்டர்களே வேலை செய்வாங்க. இல்லேன்னா, 'விலை' போயிடுவாங்களேன்னு புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை பார்க்க ஆரம்பித்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X