அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 'மேலும் இழிவு தான்!'

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
திருப்பூர் : ''பெண்களை இழிவுபடுத்தி, தி.மு.க., கூட்டணியினர் பேசுகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் நிலை என்னாகும் என, சிந்தியுங்கள். காங்கிரஸ் மற்றும் தி.முக.,வுக்கு சொல்கிறேன்... உங்கள் தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். பெண்களை நீங்கள் இழிவுபடுத்துவதை, மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்,'' என, தாராபுரம் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பகிரங்க
தி.மு.க.,  ஆட்சி,பெண்களுக்கு 'மேலும் இழிவு தான்!'

திருப்பூர் : ''பெண்களை இழிவுபடுத்தி, தி.மு.க., கூட்டணியினர் பேசுகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் நிலை என்னாகும் என, சிந்தியுங்கள். காங்கிரஸ் மற்றும் தி.முக.,வுக்கு சொல்கிறேன்... உங்கள் தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். பெண்களை நீங்கள் இழிவுபடுத்துவதை, மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்,'' என, தாராபுரம் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், ''தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகளை, தமிழில் தர முயற்சி செய்து வருகிறோம்,'' என்றும் உறுதி அளித்தார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும், தமிழக பா.ஜ., தலைவரும், வேட்பாளருமான முருகனை ஆதரித்து, பிரதமர் மோடி பேசியதாவது:

தாராபுரம் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த நகரம். அகஸ்தீஸ்வரர் அருளாசி பெற, உலகம் முழுவதிலிருந்தும் இங்கு மக்கள் வருகின்றனர். இப்பகுதி, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, காளிங்கராயன், தளபதி கொல்லன் போன்ற, சிறந்த மனிதர்கள் வாழ்ந்த இடம்.
தமிழகத்தின் கலாசாரத்தில், இந்தியா பெருமை கொள்கிறது.

ஐ.நா., சபையில் பேசிய போது, சில தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது, என் வாழ்வின் மிகச்சிறந்த நேரமாக கருதுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் குடும்பம், உங்கள் ஆசியை வேண்டி, உங்களுக்கு சேவை செய்ய நிற்கிறது.ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரின் முன்னேற்றுத்துக்கு பாடுபட வாய்ப்பு பெற கேட்கிறோம்.இப்பகுதியில், ரயில் சேவை முக்கிய கோரிக்கையாக உள்ளது; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் மொழி மற்றும் கலாசாரத்தை போற்றுகிறோம். அதனால் தான், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை, தாய்மொழியில் தர முயற்சி செய்கிறோம்.

எங்கள் கூட்டணிக்கு தரும் ஓட்டு, நெடுங்காலம் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் ஓட்டாக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறது. மறுபுறம், தி.மு.க., - காங்., கூட்டணி, குடும்ப வாரிசு அரசியலுக்கு வழி வகுப்பதாகவே உள்ளது. மக்களுக்கான திட்டம் எதுவும், அவர்களிடம் இல்லை. மற்றவர்களை அவமதிக்கும் செயல் மற்றும் பொய் மட்டுமே, அவர்களிடம் உள்ளது.


'2ஜி' ஏவுகணைதற்போது புதிதாக, '2ஜி' என்ற ஏவுகணையை, தி.மு.க., - காங்., கூட்டணி ஏவி விட்டுள்ளது. இது, பெண்களை இழிவுபடுத்த ஏவப்பட்டுள்ளது. அந்த, '2ஜி' ஏவுகணையின் ஒரே நோக்கம், தமிழக பெண்களை இழிவுபடுத்துவதே.சில நாட்களுக்கு முன், தமிழக முதல்வரின் தாயை இழிவாக பேசியுள்ளனர்; பெண் சக்தியை இழிவுபடுத்துகின்றனர். அவர்களது கலாசாரமே இதுதான்.
காங்கிரஸ் மற்றும் தி.முக.,வுக்கு சொல்கிறேன்... உங்கள் தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். பெண்களை நீங்கள் இழிவுபடுத்துவதை, மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். தி.மு.க., பேச்சாளர் திண்டுக்கல் லியோனியும், சமீபத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண்களின் நிலை என்னவாகும்!

கடந்த, 1989 மார்ச், 25ல், ஜெயலலிதாவை, தி.மு.க., தலைவர்கள் எப்படி நடத்தினர் என்பதை, யாரும் மறக்கவில்லை. அவர்கள், பெண் வளர்ச்சிக்கு துணையானவர்கள் அல்ல; எதிரானோர்.
அந்தக் கூட்டணி, பெண்கள் வளர்ச்சிக்கு ஒருபோதும் துணை நிற்காது. அவர்கள் ஆட்சிக் காலத்தில், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளன. மேற்கு வங்கத்தில், சில நாட்களுக்கு முன், திரிணமுல் காங்., கட்சியினர் தாக்கியதில், ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இவர்கள் நட்பு கட்சியும், இப்படித் தான் உள்ளது.


முற்றிலும் வாரிசு
தி.மு.க.,வில், ஒரு குடும்பத்தின் பட்டத்து இளவரசருக்காக, மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். 'முற்றிலும் வாரிசு' என்ற அடிப்படையில், அவரை முன்னிறுத்துகின்றனர். அவரும், பெண்களை தரக்குறைவாக பேசுகிறார்.
தே.ஜ., கூட்டணியின் அனைத்து அங்கத்தினரும், ஆண்டாள் மற்றும் அவ்வையாரை பின்பற்றுகிறோம். பெண் வளர்ச்சி இன்றி, சமூக வளர்ச்சி சாத்தியமாகாது. அதனாலேயே, மத்திய அரசு, பெண் சக்தியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பா.ஜ., அரசு, பெண்கள் நலன் காக்க, இலவச எரிவாயு இணைப்பு, தனி நபர் கழிப்பிடம், அனைவருக்கும் வீடு திட்டம், சுய தொழில் கடன் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பல லட்சம் பேர், இதில் பயனடைந்துள்ளனர்.

பெண்களுக்கான மரியாதை மற்றும் வளர்ச்சியை, இது மேம்படுத்தும். பேறுகால விடுமுறை நீட்டிப்பு, நிதியுதவி போன்ற திட்டங்களும், பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டன.
நாட்டின் சிறு தொழில் வளர்ச்சிக்கு, பா.ஜ., அரசு என்றும் துணை நிற்கிறது. பல லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள், மத்திய அரசிடம் கடனுதவி பெற்றுள்ளன. தமிழகத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம், பெரும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். நாட்டின் பாதுகாப்பில், தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

துாய்மை பாரத திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கழிப்பிடங்கள், பெண்களுக்கு உதவிகரமாக உள்ளன. தமிழகத்தில், உஜ்வாலா திட்டம் மூலம், 32 லட்சம் குடும்பங்களுக்கு, 'காஸ்' இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.'ஆவாஸ் யோஜனா' திட்டத்தில், கிராமப்புறத்தில் 3 லட்சம்; நகர்புறத்தில் 3.8 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளெல்லாம், பெண்கள் பெயரில் இருக்க ஊக்கப்படுத்துகிறோம். பேறுகால உதவி திட்டத்தில், 10 லட்சம் பெண்கள் உதவி பெற்றுள்ளனர். இந்த திட்டங்கள், பெண்கள் வளர்ச்சியை உறுதி செய்கின்றன.


ராணுவ தளவாட உற்பத்தி
ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் திட்டம், தமிழக வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனத்தை, வடகிழக்கு எல்லை பகுதிக்கு, நான் சமீபத்தில் அர்ப்பணித்தேன்.தமிழகத்தில், பொம்மை தயாரிப்பு மையமும் அமைய உள்ளது. இதன்மூலம், உலகுக்கு தரமான பொம்மைகளை வழங்கும் மாநிலமாக, தமிழகம் மாறும்.
மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பு உள்ள நாடுகள் பட்டியலில், உலக வங்கியின் தரத்தில், நம் நாடு சிறப்பிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி ஊக்கப்படுத்தப்படுகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ளன. நிறுவன வரையறையை மாற்றி அமைத்துள்ளதால், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகளவில் உருவாகும். 3.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஒன்றரை லட்சம் மக்கள், வங்கி கடனுக்கான வட்டி தள்ளுபடியால் பயனடைந்துள்ளனர். 8.5 சதவீத குறு, சிறு நிறுவனங்கள், மத்திய அரசின் கடனுதவி பெற்றுள்ளன. வரி சார்ந்த சிக்கல்களில் இருந்து, மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.


ஊழல் கண்கள்

காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வின் ஊழல் கண்கள், தொழில் வளர்ச்சியை ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த காலங்களில் அவர்கள் செய்ததை போலவே, உள்ளூர் ஆட்கள், தொழில் முனைவோரிடமிருந்து பணத்தை பறிப்பர். தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, அபரிமிதமான மின் வெட்டால், தொழில் முடங்கியது.தே.ஜ., கூட்டணியின் முக்கியத்துவம், சிறு, குறு விவசாயிகளை நோக்கியே உள்ளது. விவசாயிகளை, இடைத்தரகர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
விவசாய கடன் திட்டம், விவசாய பொருட்கள் விற்பனைக்கான திட்டங்களெல்லாம், விவசாயிகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. விவசாயிகள் மற்றம் மீனவர்களுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கொடுப்போம் என அறிவித்து, செயல்படுத்தி வருகிறோம்.


கனவை நனவாக்குவோம்விவசாய துறை, நீர் பற்றாக்குறை பிரச்னையை சந்தித்திருக்கிறது. நீராதார மேம்பாட்டுக்காக, இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய பாசன வாய்க்கால்கள், துார்வாரப்பட்டு வருகின்றன. புதிய பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் உயிர்நீர் திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த திட்டம் துவங்கிய பின், தமிழகத்தில் மட்டும், 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை கவனமாக படியுங்கள். இம்மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையில், திட்டங்களை வடிவமைத்துள்ளோம். மக்களின் கனவுகளை, நாங்கள் நனவாக்குவோம். மக்கள் சேவைக்காக, நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


'கேரளாவுக்கு துரோகம் செய்த பினராயி அரசு!'''வெள்ளிக் காசுக்காக இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதாஸ் போன்று, தங்கக் கட்டிகளுக்காக கேரள மக்களுக்கு, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு துரோகம் இழைத்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
கேரளாவில், வரும், 6ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பாலக்காடு தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் போட்டியிடுகிறார். அவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார்.

பாலக்காடு கோட்டை மைதானத்தில் நடந்த பிரமாண்ட பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
கேரளாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என்ற லட்சியத்துடன், பா.ஜ., கூட்டணி இந்த தேர்தலை சந்திக்கிறது.
பா.ஜ.,வின் தொலைநோக்கு திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் பலரும், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
அதற்கு உதாரணம், இங்கு வேட்பாளராக போட்டியிடும் மெட்ரோமேன் ஸ்ரீதரன். 'கர்மயோகி'யான அவர், பா.ஜ.,வின் வளர்ச்சி திட்டங்களை அறிந்து, எங்களுடன் கைகோர்த்துள்ளார்.அவர் சாதனைகள் பல புரிந்தவர்; கேரளாவின் பெருமைக்குரிய மகன். தற்போது கேரளாவின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.


அரசியல் மாற்றம்


கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
காங்., கம்யூ., கட்சிகள் மீது, இளம் வாக்காளர்கள் வெறுப்படைந்துள்ளனர். காரணம், இரண்டு கட்சிகளுமே, ஓட்டு வங்கி அரசியலின், முடிசூடா மன்னர்களாக இருப்பது தான். இரு கட்சியினரும் பல ஆண்டுகளாக, கேரளாவுக்கு துரோகம் இழைத்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவை, வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ் காட்டிக் கொடுத்தார். அதேபோல், தங்கக் கட்டிகளுக்காக, பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூ., அரசு, கேரள மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முந்தைய, காங்., அரசு சூரிய ஒளியை கூட, விட்டு வைக்காமல் அதிலும் ஊழல் செய்துள்ளது. பா.ஜ., நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் கட்சி. அந்த கட்சியை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.


வன்முறை அரசியல்

இங்கு இடதுசாரி கட்சிகள் பல முறை ஆட்சிக்கு வந்துள்ளன. அதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அதன் தலைவர்கள் பலரும், அடிதடி நடத்தும், 'ஜூனியர் நிலை' குண்டர்கள் போல் செயல்படுகின்றனர். பா.ஜ., அரசு அமைந்தால், இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


'வெற்றிவேல்... வீரவேல்...'மேடையில் முழங்கிய மோடி* மதியம், சரியாக 2:01 மணிக்கு பிரதமர் பேச்சை துவங்கி, 2:37 மணிக்கு, நிறைவு செய்தார். 'வெற்றிவேல்... வீரவேல்... வெற்றிவேல்... வீரவேல்...' என தமிழில் முழக்கமிட்டபடி, பேச்சை துவக்கினார் மோடி. இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து, 'வெற்றி... வெற்றி... வெற்றிவேல்,' என பிரதமர் கூற, தொண்டர்கள், 'வீர... வீர... வீரவேல்' என, கோஷமிட்டனர்.
* பிரதமர் மோடி, ஆங்கிலத்தில் பேசியதை, பா.ஜ., கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தமிழில் மொழி பெயர்த்தார்.* தாராபுரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகன், பிரதமருக்கு, வேல் வழங்கினார்.
* மேடையில் வைக்கப்பட்டிருந்த 'போடியத்தில்', மேற்பகுதியில் இரட்டை இலை; இரண்டாவது, தாமரை, கடைசியில், மாம்பழ சின்னங்கள் ஒட்டப்பட்டிருந்தன. மோடி பேசியபோது, இரட்டை இலைக்கும் மேல், தாமரையை ஒட்டவைத்தனர்.

* ஓ.பி.எஸ்., பேசி கொண்டிருக்கும் போது, பா.ஜ., நிர்வாகி ஒருவர், துண்டுச்சீட்டு ஒன்றை அவர் பேசிய 'போடியம்' மீது வைத்தார். அதை படித்து பார்த்து தலையாட்டிய ஓ.பி.எஸ்., அடுத்த இரண்டு நிமிடத்தில் பேச்சை முடித்து கொண்டார்.* பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில், மூன்று மெகா அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பத்துக்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டு, சோதனைக்குப் பின் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

* ஒவ்வொரு அரங்கிலும், இரும்பு தடுப்புகளில், கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேலரியிலும், மக்கள் வசதிக்காக, குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

* கறுப்பு நிற முக கவசம் மற்றும் துணி; பேனா, வாட்டர் கேன் உள்ளிட்ட பொருட்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை; போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர்.

* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது; கைகளை சுத்தம் செய்ய, சானிடைசர் வழங்கப்பட்டது. பெரும்பாலும், காவி நிறத்தில் முக கவசம் வழங்கப்பட்டது.

* பொதுக்கூட்டம் நடந்த இடம் முழுதும், 16 டிஜிட்டல் திரை வைக்கப்பட்டு, நிகழ்ச்சி, ஒளிபரப்பு செய்யப்பட்டது.


5 மாநிலங்களிலும் ஆதரவு அலைபுதுச்சேரியில் மோடி பெருமிதம்

புதுச்சேரியில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோசடி பேசியதாவது:
புதுச்சேரிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. அது, மீண்டும் மீண்டும் புதுச்சேரிக்கு வர என்னை துாண்டுகிறது. ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சில முறை சென்றேன்.கேரளா, தமிழகத்திற்கு சென்றுவிட்டு, தற்போது புதுச்சேரிக்கு வந்துள்ளேன். நான் நேரில் பார்த்த ஐந்து மாநிலங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மிகப் பெரிய அலை உருவாகி உள்ளதை காண முடிந்தது.
பல ஆண்டுகளாக செயல்படாத மக்கள் விரோத காங்., அரசுகளின் பட்டியலில், புதுச்சேரி காங்., அரசுக்கு சிறப்பான இடம் உண்டு. புதுச்சேரி காங்., அரசு, அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து, மக்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது. அனைத்து மட்டத்திலும் ஊழல் மட்டுமே இருந்தது.

எனக்கு அரசியலில் நீண்ட அனுபவம் உண்டு. நேரடி அரசியலில், பல ஆண்டுகளாக இருந்திருக்கிறேன்; பல தேர்தல்களை பார்த்திருக்கிறேன். ஆனால், புதுச்சேரியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் ரொம்ப வித்தியாசமானது.ஏனெனில், ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வருக்கு, 'சீட்' கொடுக்கவில்லை. எத்தனை விசுவாசமாக அவர் இருந்திருப்பார். தன் தலைவரின் செருப்புகளை கூட துாக்கினார். தலைவரை சந்தோஷப்படுத்த, தப்பு தப்பாக மொழிபெயர்த்தார். ஆனால், அவருக்கு சீட் கொடுக்கவில்லை.கடந்த மாதம் நான் இங்கே வந்தபோது, புதுச்சேரியை, 'பெஸ்ட்' புதுச்சேரியாக மாற்ற முடியும் என்ற என் கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டணி கட்சியான, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி உட்பட பலரும் பேசினர்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
31-மார்-202123:33:25 IST Report Abuse
s t rajan கிருஸ்துவ மத போதகர்கள் அரசியல்cheer girls களாக மாறி முடியைப் பற்றி அவதூறுச் செய்திகளை பரப்பி பாமர மக்களை ஏமாற்றும் வீடியோக்களைப் போப் பார்த்தால், தூக்குத் தண்டனையை அளிப்பார். திமுகவுடன், அதன் கொள்கை பரப்பு ராசாவும் இவர்களுக்கு கோடிக் கோடியாக கொடுத்திருப்பார்கள். எல்லா க்ருத்துவ தேவாலயங்களையும் raid செய்யுங்கள். அவர்களின் commercial complex களை சோதனை செய்யுங்கள். எலக்க்ஷன் free ah நடைபெற துற்குணம், லாசர் போன்றோறை முட்டிக்கு முட்டி தட்டி ஜெயிலில் போடுங்கள்.
Rate this:
Cancel
Mdu -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202121:54:37 IST Report Abuse
Mdu சொல்றது யாருப்பா...காந்தி ஓட பெரானா? எங்க ஊரு நிம்மதியா இருக்கு அது இவங்குளுக்கு புடிக்காது
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
31-மார்-202121:36:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி கெடுத்தவன் மேலே குத்தமில்லை.. அவன் கெடுத்துட்டான்னு சொன்னவன் மேலே குத்தம்... நல்லா வருவீங்க.. எப்படியெல்லாம் கோர்த்து விடுறாங்க ?? தடை செய்யப்பட போதை பொருள், குட்கா வித்தவன் கிட்டே கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினான் ஒருத்தன்.. வழக்கு பதிவு செஞ்சும் இன்னமும் அமைச்சராய் இருக்கான்.. அவன் மேலே வழக்கு இல்லை.. ஆனால் சட்டசபையில் அந்த பிரச்சினையை பற்றி விவாதிக்க வேண்டும் என்று குட்கா கொண்டு வந்தால் வழக்கு.. நீதிமன்றம் தூக்கியெறிந்த பிறகும் மேல்முறையீடு.. இது தானே உங்க ஸநாதந கருமம்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X