குறிஞ்சிப்பாடியில், அ.தி.மு.க., - தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் நேரடி மோதலில் உள்ளதால், வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குறிஞ்சிப்பாடி தொகுதி. வடலுார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள், கடலுார் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் என, 71 ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது.தொகுதியில் வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றவை. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி உள்ளன. முந்திரி, வாழை விவசாயம், நெசவு மற்றும் மீன்பிடி தொழில் பிரதானம்.
தொகுதியில் அரசு கலைக் கல்லுாரி தேவை. நலிவடைந்து வரும் நெசவு தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை தேவை, குறிஞ்சிப்பாடி பகுதியில் மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, என்.எல்.சி.,யில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வெள்ளத்தால், இப்பகுதி கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண்பதாக தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதோடு சரி. தேர்தல் முடிந்ததும் அதனை கண்டு கொள்வதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிஞ்சிப்பாடி தொகுதி 1962ல் உருவாக்கப்பட்டது. தொகுதியில் இதுவரை தி.மு.க., 9 முறையும், அ.தி.மு.க., 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.தொகுதியில் தற்போது தி.மு.க.,வில் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வில் செல்வி ராமஜெயம், அ.ம.மு.க.,வில் வசந்தகுமார், நாம் தமிழர் கட்சியில் சுமதி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஜனதா தளம் சந்திரமவுலி உட்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.
தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., தி.மு.க.,வை சேர்ந்த பன்னீர்செல்வம் இத்தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். இருமுறை அமைச்சராக இருந்துள்ளார். தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகிறார்.கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியது, வி.சி., - ம.தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் இவருக்கு சாதகமாக உள்ளதால், உதயசூரியன் உதிக்க வாய்ப்பு உள்ளது.தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக ஏற்கனவே தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி அறிவித்த நிலையில், திடீரென செல்வி ராமஜெயம் மாற்றப்பட்டார்.
இவர், இரண்டு முறை புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., ஒரு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இருப்பினும், குறிஞ்சிப்பாடிக்கு புதியவர். தொகுதியில் முதல் பெண் வேட்பாளரும் கூட. கூட்டணியில் பா.ம.க., இருப்பது இவருக்கு கூடுதல் பலம். அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் பா.ம.க.,வினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டால் தொகுதியில் இரட்டை இலை ஜொலிக்கும்.