மதுரை மாவட்டத்தில், ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு, சில கிராமங்களில் எதிர்ப்பு எழுந்ததால், ஊருக்குள் செல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர். மேலுார், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் ஓட்டு கேட்டு சேந்தலைப்பட்டி சென்ற போது, 'போன தடவ சொன்னபடி ரோடு போடாம விட்டுட்டு, எந்த முகத்தோட திரும்ப ஓட்டு கேட்டு வரீங்க?' என, கூட்டமாக மக்கள் மறித்து கேட்டுள்ளனர். இதனால், 'அப்செட்'டான பெரியபுள்ளான் அப்படியே திரும்பி விட்டாராம்.
அடுத்து அவர் சொக்கலிங்கபுரம் சென்ற போதும் பிரச்னையானது. 'பள்ளிவாசல் உள்ளே சென்று எப்படி ஓட்டு கேட்கலாம்?' என, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கும் நின்று பதில் சொல்லாமல், அவர் திரும்பி போய்விட்டார். ஆனால், முஸ்லிம்கள் தான் தன்னை அழைத்து சென்றனர் என்று, ஆதரவாளர்களிடம் மட்டும் கூறினார். அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, கேள்வி கேட்டு திருப்பி அனுப்பும் வேலைக்கு பின்னணியில், அ.ம.மு.க., இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்காரர்களுக்கு பயிற்சி கொடுத்து, பொதுமக்கள் போல கூட்டத்தோடு கூட்டமாக நின்று, அ.ம.மு.க.,வினர் இவ்வாறு செய்கிறார்களாம்.
மதுரை கிழக்கு தொகுதியில், ஆண்டார் கொட்டாரம் என்ற கிராமத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஓட்டு வேட்டைக்கு சென்றபோது, கிராமத்தினர் இதே போல அவர்களை சூழ்ந்து கொண்டு, கேள்விகள் கேட்டுள்ளனர். இந்த தகவல் பின்னால் வந்து கொண்டிருந்த வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், ஆண்டார்கொட்டாரத்துக்கு வராமல் அப்படியே திரும்பி விட்டார்.
ஊர் பிரச்னையை தீர்க்கவில்லை என்பதற்காக, எம்.எல்.ஏ., அல்லது அமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்பது புது விஷயம் அல்ல. ஜனநாயக தேர்தல் முறை, அதற்கும் இடம் இருக்கிறது. ஆனால், பொதுமக்கள் என்ற பெயரில், ஒரு கட்சி இன்னொரு கட்சியினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பது, சட்ட விரோதமான செயல் என, பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதனால், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் மோதல்கள் வெடிக்கலாம் என, கவலை தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE