கோவை: தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பெண்களை இழிவுபடுத்துவதாகவும், பெண்களை அவமதிக்கும் திமுக ஆட்சிக்கு வர தகுதியற்றது எனவும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், பிரசாரம் செய்ய கோவை வந்தார். கோவையிலுள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், புலியகுளம் ஐந்து சாலை சந்திப்பில் இருந்து தேர்நிலை திடலில் உள்ள பொதுக்கூட்ட மேடை வரையில் வாகன பேரணி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் 'கோவை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' என உரையை துவங்கிய யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

கோவை மண்ணில் இருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார். ராமரின் புண்ணிய பூமி உத்தரபிரதேசம். உத்தரபிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. அதற்காக 130 கோடி மக்கள் சார்பாக தமிழக மண்ணிற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். சுயசார்பு பாரதத்தை பறைசாற்றும்படி இருக்கும் பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகத்தின் மீது இருக்கிறது. தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைத்து முடிக்கும்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும்.

இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில், அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் நிச்சயம் ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். வளர்ச்சி ஒன்றே நமது தாராக மந்திரமாக கொண்ட ஒரே நோக்கத்தின் அடிப்படையில் பா.ஜ., செயல்படுகின்றது. தமிழகத்தில் அதிமுக-பா.ஜ., கூட்டணி மட்டுமே புதிய விடியலை ஏற்படுத்தும். இந்தியாவில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு, சிலிண்டர், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திற்கு 54 லட்சம் கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது மத்திய அரசு. வரும் தேர்தலில் பா.ஜ.,-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதிகபடியாக நிதி மற்றும் திட்டங்கள் தமிழகத்தை வந்து சேரும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையும் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண்களை அவமதிக்கும் தி.மு.க ஆட்சிக்கு வர தகுதியற்றது. அதிமுக-பா.ஜ., கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான். இவ்வாறு அவர் பேசினார்.