மும்பை:'மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர், அனிஷ் தேஷ்முக்குக்கு எதிரான வழக்கில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல், எப்படி விசாரிக்க முடியும்' என, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர், பரம்வீர் சிங்கிடம், மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்., மூத்த தலைவரும், மாநில உள்துறை அமைச்சருமான, அனில் தேஷ்முக்கிற்கு எதிராக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர், பரம்வீர் சிங் பல புகார்களை கூறியிருந்தார். மாதம், 100 கோடி ரூபாய் வசூலித்து தரும்படி, அனில் தேஷ்முக் கூறியதாக அவர் தெரிவித்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்தப் பிரச்னை, மஹாராஷ்டிரா அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தான் கூறிய புகார்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, பரம்வீர் சிங் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றத்தை நாடும்படி, உச்ச நீதிமன்றம் கூறியது.அதன்படி, பரம்வீர் சிங் தாக்கல் செய்த பொது நலன் மனுவை, தலைமை நீதிபதி, தீபாங்கர் தத்தா தலைமையிலான, மும்பை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
'எந்த ஒரு வழக்கிலும், எப்.ஐ.ஆர்., இல்லாமல் விசாரணை துவங்காது. அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., தாக்கல் செய்யப்பட்டுள்ளதா. அவ்வாறு இல்லாத நிலையில், வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.'சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியும்' என, அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE