மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வன்முறை: முதல்வர் மம்தா புகார் | Dinamalar

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வன்முறை: முதல்வர் மம்தா புகார்

Updated : ஏப் 03, 2021 | Added : ஏப் 01, 2021 | கருத்துகள் (6)
Share
கோல்கட்டா : மேற்கு வங்க சட்டசபைக்கு நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில், சில இடங்களில் வன்முறை வெடித்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டார். ''வன்முறையை தடுக்க, தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்... வன்முறை!  முதல்வர் மம்தா பானர்ஜி புகார்

கோல்கட்டா : மேற்கு வங்க சட்டசபைக்கு நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில், சில இடங்களில் வன்முறை வெடித்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டார். ''வன்முறையை தடுக்க, தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இடதுசாரிகளும், காங்கிரசும், கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முதல் கட்டமாக, 30 தொகுதிகளில், கடந்த, 27ல் நடந்த முதல் கட்ட தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

இரண்டாம் கட்டமாக, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உட்பட, 30 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நீண்ட வரிசையில் நின்று, மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.நந்திகிராம் தொகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நந்திகிராம் உட்பட, சில இடங்களில் ஓட்டுப் பதிவின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தன. மேலும் சில இடங்களில், பா.ஜ., - திரிணமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.நந்திகிராம் தொகுதியில், பாயல் பகுதியில் உள்ள வாக்காளர்கள் சிலர், தங்களை ஓட்டளிக்கவிடாமல், பா.ஜ.,வினர் தடுப்பதாக புகார் செய்தனர். இதையறிந்த மம்தா பானர்ஜி, அப்பகுதிக்கு விரைந்து சென்றார். அவரை, 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷமிட்டு, பா.ஜ.,வினர் வரவேற்றதால் பதற்றம் ஏற்பட்டது.

திரிணமுல் - பா.ஜ., தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசாக தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.இந்த வன்முறை குறித்து, கவர்னர் ஜக்தீப் தன்கரை, அங்கிருந்தபடியே மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மம்தா புகார் செய்தார்.
பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் கார் மீது, திரிணமுல் தொண்டர்கள் சிலர், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம், கேஷ்பூர் பகுதியில் நடந்த வன்முறையில், திரிணமுல் காங்., தொண்டர் ஒருவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். மற்றபடி, பெரிய அளவிலான வன்முறை இன்றி, ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்தது. இதில், 80 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று கூறியதாவது:நந்திகிராம் உட்பட பல தொகுதிகளில், பா.ஜ.,வினர் முறைகேடுகளில் ஈடுபட்டனர். பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்திலிருந்து ஆட்களை வரவழைத்து, முறைகேடுகளை செய்கின்றனர்.


புகார்காலை முதல், 60-க்கும் மேற்பட்ட புகார்களை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளேன். தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னரிடம் புகார் செய்தும், பலனில்லை.நீதிமன்றத்தை நாடப் போகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படியே, தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நந்திகிராமின் பாயல் ஓட்டுச்சாவடியில், மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, நந்திகிராம் தொகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


மம்தா மீது வழக்குபீஹார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபடவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடவும், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்திலிருந்து ரவுடிகளை, பா.ஜ., அழைத்து வந்துள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதன் வாயிலாக, பீஹார் மக்களை, மம்தா அவமானப்படுத்தியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


அசாமில் 74 சதவீதம் ஓட்டுப்பதிவுவடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தல் மூன்று கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக, 47 தொகுதிகளில், கடந்த, 27ல் ஓட்டுப்பதிவு நடந்தது.இரண்டாம் கட்டமாக, 39 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும், காலை முதலே விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 74 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X