தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதை விமர்சனம் செய்யும் விதமாக 2002 குஜராத் கலவரம் தெரியாதா என கேட்கும் ஸ்டாலின் 1958 முதல் தி.மு.க., செய்த லீலைகளை திரும்பி பார்க்க வேண்டும்.
அராஜகத்தால் துவக்கப்பட்ட தி.மு.க.,வுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை. நேரு தமிழகம் வந்த போது பேசாததை பேசியதாக கூறி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி காங்., கடைகளை தாக்கினர். 1962ல் விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் வட நாட்டவர் வாழ்ந்த பகுதியில் புகுந்து இவர்கள் செய்த அட்டுழியம் கொஞ்சமல்ல.
இன்று தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூ., கட்சியின் அன்றைய தலைவர் கல்யாண சுந்தரம் ஜனசக்தி பத்திரிக்கையில் '400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 75 போலீசார் விலைவாசி உயர்வு போராட்டத்தில் காயமடைந்தனர்' என தெரிவித்துள்ளார். அன்று வட சென்னை சினிமா தியேட்டரில் படம் பார்த்தவர்களைக்கூட தாக்கியுள்ளனர்.
1965ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருப்பூரில் சப் இன்ஸ்பெக்டரை உயிருடன் கொளுத்தினர். ஒருங்கிணைந்த தமிழ்நாடு ஹிந்தி எதிர்ப்பு மாணவர் அமைப்பு உருவாக்கினர். அதன் பொறுப்பாளர்களான எல்.கணேசன், காளிமுத்து, வே.சீனிவாசன், துரைமுருகன், எஸ்.டி.சோமசுந்தரம், ரஹ்மான் கான், ராஜா முகமது ஆகியோர் மாணவர்களை துாண்டி கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வைத்தனர்.கம்யூ., கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும் 'கீழ் வெண்மணி' துக்க தினம் அனுசரிப்பர். அதற்கு காரணமான குற்றவாளிகளை கருணாநிதி தடுக்காததால் பலர் கலவரத்தில் பலியாகினர்.
தி.மு.க., ஒரு முறை 16 வாக்குறுதிகள் கொடுத்த போது கல்கண்டு பத்திரிக்கையில் 17ம் வாக்குறுதி சேர்க்க வேண்டும் எனக்கூறி, 'கிருபானந்த வாரியார் எங்களுக்கு பிடிக்காத செயல்களை செய்தால் அவர் தாக்கப்பட மாட்டார். அப்படி தாக்கப்பட்டால் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என எழுதப்பட்டது'. அவரை தாக்கும் எண்ணத்தில் தி.மு.க., இருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. அன்று கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகள் நிறுத்தப்பட்டன.
1971 ல் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க அண்ணாமலை பல்கலை முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., மாணவர் உதயகுமார் அடித்து கொல்லப்பட்டார். கணக்கு கேட்டதால் எம்.ஜி.ஆர்.,ரை கட்சியிலிருந்து வெளியேற்றினர். தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வாழ்ந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. மலையாளிகளை அடிக்க மு.க.முத்து தமிழர் பேரவை அமைப்பு ஏற்படுத்தினார். சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், தேனி பகுதி மலையாளிகள் தாக்கப்பட்டனர். இது கருணாநிதி ஆசியுடன் நடந்தது.
2010 ஏப்., 25 இந்திய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, கருணாநிதி ஆகியோர் முன் வழக்கறிஞர்களை தி.மு.க., ரவுடிகள் தாக்கினர்.
2006 மாநகராட்சி தேர்தலில் ஓட்டளிக்க வந்தவர்களை விரட்டி அவர்களே ஓட்டளித்தனர். நீதிமன்றத்தை கம்யூ., நாடிய போது 200 வார்டுகளில் 127 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.பல எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் நில ஆக்கிரமிப்பு செய்தனர். இன்று ஒழுக்க சீலராக பேசும் ஸ்டாலின், மகன் உதயநிதி, ஐயர் குடும்பத்தை மிரட்டி நிலத்தை வாங்கினர். அவர் நீதிமன்றம் சென்றதும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தனர்.ஈரோட்டில் என்.கே.கே.பி., ராஜா தனக்கு நிலம் கொடுக்க மறுத்தவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததோடு அவரது துணைவியாரையும் சேர்த்து அடிக்க வைத்தார். தி.மு.க., அமைச்சர்கள் நன்றி விசுவாசம் இல்லாதவர்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டு உயிருக்கு துடித்த போது அந்த வழி சென்று இரு அமைச்சர்கள் கண்டு கொள்ளாமல் சென்றனர்.
1972ல் மின்கட்டண உயர்வை குறைக்க நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாய சங்க போராட்டத்தில் 15 விவசாயிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை இன்றும் மறக்க முடியவில்லை.
-சரவணன், எழுத்தாளர், ஈரோடு