'உதயநிதியை முதல்வராக்க வேண்டுமா? யோசியுங்கள்'

Updated : ஏப் 02, 2021 | Added : ஏப் 02, 2021 | கருத்துகள் (49)
Advertisement
°'தினமலர்' தேர்தல் களத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த சிறப்பு பேட்டி...தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், மோடி தான் காரணம் என்பது போல, தீவிர மோடி எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இதனாலேயே, மோடி மோசமானவர், தமிழர்களுக்கு எதிரி என்ற பிம்பம், தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, பா.ஜ., ஏன் மறுக்கிறது? உங்களுடைய பாராமுகம்,
Amit Shah, BJP, TN elections 2021

°'தினமலர்' தேர்தல் களத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த சிறப்பு பேட்டி...


தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், மோடி தான் காரணம் என்பது போல, தீவிர மோடி எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இதனாலேயே, மோடி மோசமானவர், தமிழர்களுக்கு எதிரி என்ற பிம்பம், தமிழகத்தில் உருவாகி இருக்கிறது. இதை எதிர்கொள்ள, பா.ஜ., ஏன் மறுக்கிறது? உங்களுடைய பாராமுகம், இங்குள்ள பா.ஜ., ஆதரவாளர்களுக்கு சோர்வு அளிப்பதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் மீதும், தமிழக அரசியல் மீதும், பா.ஜ.,விற்கு ஆர்வம் இல்லையா? வட மாநிலங்களோடு உங்கள் அரசியல் ஆர்வம் முடிந்து விடுகிறதா?


நான் இதை ஏற்கவில்லை. மோடி எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் செல்கிறாேரா, அங்கெல்லாம், தமிழ் மொழியை பற்றி பேசுகிறார். சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார். சமீபத்தில், 'மன் கி பாத்' நிகழ்ச்சியிலும், அவர் தன்னால், தமிழ் மொழியில் படிக்க முடியவில்லையே என்ற, வருத்தத்தை தெரிவித்தார். சீன அதிபர் வந்த போதும், தமிழகத்தில் தான் வரவேற்பு தந்தார். தமிழக பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு தான், பேச்சு நடத்தினார். அதன் வாயிலாக, தமிழகத்தையும், தமிழ் கலாசாரத்தையும், சீனர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இலங்கையில் உள்ள, நம் தமிழ் சகோதரர்களின் கஷ்டங்களை வேறு எந்த பிரதமரும், இவ்வளவு கரிசனத்தோடு அணுகியதில்லை. அவர்கள் இழந்த வீடுகளை, மீண்டும் கட்டிக் கொடுப்பதற்கான முன் முயற்சியை, பிரதமர் தான் மேற்கொண்டார். அங்கு இடிந்துள்ள தமிழ் கோவில்களை மீண்டும் கட்டிக் கொடுக்க, இந்திய அரசு தனது நிதியை செலவழித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையிலான பிரச்னை மிகவும் பழமையானது. கடந்த, 8 ஆண்டுகளில் இவர்களிடையே ஏற்பட்ட மோதலை பற்றிய விபரங்களை கொஞ்சம் எடுத்துப் பாருங்கள். மீன்பிடி படகுகளை மீட்பதிலும், மீனவர்களை மீட்பதிலும், மோடி அரசு தான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கருதாதீர்கள். நாங்கள் முன்னுரிமையே கொடுத்து வருகிறோம். உதாரணமாக, 'டிபன்ஸ் காரிடர்' விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள். நாட்டிலேயே இரண்டு இடத்தில் தான், இதை செய்திருக்கிறோம். ஒன்று உ.பி., மற்றொன்று தமிழகம்.

அதேபோல, மகான் எம்.ஜி.ஆரின் பெயரை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சூட்டியுள்ளோம். முன்பெல்லாம், ரயில் நிலையங்களில், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தான், அறிவிப்புகள் இருக்கும். எங்கள் ஆட்சிக் காலத்தில் தான், தமிழிலும் அறிவிப்புகள் வந்தன. நீங்கள் சொல்லும் தோற்றத்தை, மக்கள் நம்பவில்லை. தி.மு.க.,வும் காங்கிரசும் அந்த தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. ஆனால், களத்தில் உள்ள மக்கள் அதை நம்பவில்லை.மற்ற மாநிலங்களில் செய்வதை போலவே, இங்கும் பா.ஜ., அரசியல் செய்கிறதே. தமிழர்கள் மத்தியில், அது எடுபடவில்லை என்று தெரிந்தும், ஏன் இந்தப் போக்கு தொடர்கிறது?


தமிழர்களை புரிந்து கொள்ள ஆர்வம் இல்லையா? தமிழகத்தையும், தமிழக அரசியலையும் பா.ஜ., முக்கியமாக கருதவில்லையா? ஆமாம், நாங்கள் நாடு முழுவதும், என்ன அரசியலை செய்கிறோமோ, அதைத் தான் தமிழகத்திலும் செய்கிறோம். அது, முன்னேற்றத்துக்கான அரசியல்; வெளிப்படையான அரசியல். ஊழலை எதிர்க்கும் அரசியல்; வாரிசு அரசியலை எதிர்க்கும் அரசியல். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, ஊழலின் உச்சம். காங்கிரசும், தி.மு.க.,வும் தான், ஊழல் மிகுந்த கட்சிகள்.

'2ஜி' முறைகேட்டில் இரண்டு கட்சிகளுமே லாபம் அடைந்தன. அவர்கள் இன்றைக்கு, தமிழக மக்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளனர். மூன்று தலைமுறை, நான்கு தலைமுறையாக, அவர்களுடைய குடும்பங்களை முன்னேற்றி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள். இது, என்ன விதமான ஜனநாயகம் என்பது, எனக்குப் புரியவே இல்லை!

காங்கிரஸ் கட்சியில், ஒரே குடும்பம் தான், நான்கு தலைமுறையாக ஆட்சி செலுத்தி வருகிறது. தி.மு.க.,வில் ஒரு குடும்பம் தான், மூன்று தலைமுறையாக ஆட்சி செலுத்தி வருகிறது. மாறன் குடும்பத்தில், இரு தலைமுறைகள். இவர்கள் தான், '2ஜி, 3ஜி, 4ஜி' எல்லாமே! அதனால், எங்களுடைய அரசியல் என்பது, நாடு முழுவதும் ஒன்று தான். நாங்கள் வெளிப்படை தன்மையின் பக்கமும், ஜனநாயகத்தின் பக்கமும், முன்னேற்றத்தின் பக்கமும் நிற்கிறோம். இதை, தமிழக வாக்காளரும் வரவேற்பர் என்பதே, எனது நம்பிக்கை.நீங்கள் ஊழலை பற்றி நிறைய பேசுகிறீர்கள். ஆனால், பா.ஜ., ஆட்சி அமைத்து, 7 ஆண்டுகள் ஆயிற்று. இன்னும், எந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மீதும் வழக்கு வரவில்லை யே; யாரும் கைதாகவில்லையே?


இல்லை, இல்லை, இல்லை... சிதம்பரம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாரே! இங்கே காங்கிரஸ் கட்சியிலேயே பெரிய தலைவர் அவர் தானே! சோனியா, ராகுல் இரண்டு பேர் மீதும் வழக்கு உள்ளது. அவங்க இருவரும் ஜாமினில் இருக்கிறார்கள். நீங்க எந்தக் காலத்தை பத்தி பேசுறீங்க? நீங்க எங்க வாழறீங்க? நீங்கள் நாலஞ்சு வருஷம் வெளிநாட்டுல இருந்துட்டு வந்தீங்களா? சிதம்பரமும், அவரோட பிள்ளையும், ஜெயிலுக்கு போயிட்டு வந்தாங்களே... இரண்டு பேருமே போயிட்டு வந்தாங்களே...ஆனால், '2ஜி' வழக்குல ஒன்றும் மேல்நடவடிக்கை இல்லையே?


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே, இந்த வழக்கில் பெரும்பாலான நடவடிக்கையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டார்கள். அதனால், நாங்கள் இப்போது, மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளோம். நாங்கள் அதில், புதிய ஆதாரங்களை கொடுக்கப் போகிறோம். நீங்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கையை முழுக்க புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களுடைய ஆட்சி காலத்திலேயே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மொத்த வழக்கையும், நீதிமன்றத்தில் புத்திசாலித்தனமாக முடித்து விட்டனர். இப்போது, நாங்கள் ஆதாரங்களைத் தேடி வைத்துள்ளோம். இதற்காக, உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளோம்.இன்னும் ஆறு மாதத்தில், ஏதேனும் நடவடிக்கையை எதிர்பார்க்கலாமா?


நான் எப்படி அதைச் சொல்ல முடியும். நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ஒன்றும், ஐ.மு.கூ., அரசு மாதிரி நீதிமன்றங்களை நடத்தவில்லை.அந்த காலத்தில், காங்கிரஸ், தன் இஷ்டம் போல, மாநில அரசுகளை கலைத்தது. அதுபோல தற்போது, பா.ஜ.,வும் செய்கிறது என்ற தோற்றம் உருவாகி உள்ளது. குறிப்பாக, புதுச்சேரி அரசு கையாளப்பட்ட விதம், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


காங்கிரசில் இருந்தவர்கள் பா.ஜ.,வுக்கு வந்தது உண்மை. ஆனால், நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. அப்போது, ஆட்சிக்காலம் முடிய, 20 நாட்கள் இருந்தது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதை முன்னாலேயே செய்திருக்க முடியுமே.

அப்போது, பொதுத் தேர்தலும் வந்தது. அவர்கள் தங்கள் கட்சியில் நின்றால், வெற்றி பெற முடியாது என்று தோன்றவே, புதிய கட்சிக்கு நகர்ந்தார்கள். அப்படி செய்வதை, தேர்தலுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னாலாவது செய்ய வேண்டாமா? அதன் அர்த்தம், நாங்கள் அந்த ஆட்சியைக் கலைத்தோம் என்பது இல்லை. அந்த நபர்கள் வெளியேறியதால், ஆட்சி தானாகவே கவிழ்ந்தது.சி.ஏ.ஏ., போராட்டம் நடந்த போது, முஸ்லிம்கள் தங்கள் பூர்வீகம் குறித்த உரிய ஆவணங்களை காட்டாவிட்டால், நாடு கடத்தப்படுவர் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. அந்த கருத்து உண்மையானது தானா?


கொஞ்சம் கூட அதில், உண்மை இல்லை. சி.ஏ.ஏ., யாருடைய குடியுரிமையையும், பறிக்கும் சட்டமில்லை. யாரும் எந்த ஆதாரமும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த எல்லா பொய்களையும், காங்கிரசும், தி.மு.க.,வும் தான் பரப்பின. நீங்கள் சி.ஏ.ஏ., சட்டத்தை முழுமையாக படியுங்கள். அதில், யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அதிகாரமில்லை; கொடுக்கும் அதிகாரம் தான் அதில் இருக்கிறது. யாருக்கேனும் புதிதாக குடியுரிமை வேண்டும் என்றால், அவர்கள் புதிதாக ஆதாரம் கொடுக்க வேண்டும்.மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தின் தொடர்ச்சியாக, ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை, மாநிலங்களிடம் இருந்து பறிக்க, மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்ற, குற்றச்சாட்டு உள்ளதே...


இது, முற்றிலும் தவறான கணிப்பு. நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். பிற்பட்டோர் பட்டியலில், ஜாதிகளைச் சேர்ப்பதற்கும், விலக்குவதற்கும் மாநிலங்களுக்கு முழு உரிமை உண்டு. இதை, மத்திய அரசும் முழு மனதோடு ஒப்புக்கொள்கிறது. நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பித்திருக்கும் பதில் மனுவை யார் வேண்டுமானாலும், 'டவுன்லோடு' செய்து படித்துப் பார்க்கலாம். இது, உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்ட விபரம். எங்கள் பா.ஜ.,வுக்குள் சொல்லப்பட்டது அல்ல. இது, சொலிசிட்டர் ஜெனரலின் வாதமாகும்.சி.ஏ.ஏ., காஷ்மீர், ராமர் கோவில் என, பா.ஜ.,வின் முக்கிய கொள்கைகளில் மூன்றை நிறைவேற்றி விட்டீர்கள். பொது சிவில் சட்டமும் அதில் ஒன்று. அது பற்றி சத்தமே இல்லையே. அதை கைவிட்டு விட்டீர்களா?


எங்கள் மீது, பல ஆண்டுகளாக இதுபோன்ற பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. நீங்கள், 1950ல் இருந்து சொல்லிக் கொண்டு இருந்தீர்கள்: அரசியல் சட்டப்பிரிவு, 370ஐ விலக்கவில்லையே என்று சொன்னீர்கள்; நாங்கள் விலக்கினோம். அதற்காக விமர்சிக்கிறார்கள். முந்தைய ஆட்சிகளில், கோவிலை அந்த இடத்திலேயே கட்டுவோம் என்றார்கள். ஆனால், எப்போது கட்டுவோம் என்பதை சொல்ல முடியாது என்றார்கள். நாங்கள் அதை கட்டவே ஆரம்பித்து விட்டோம். இப்போது, அதற்காக எதிர்க்கிறார்கள். கடைசியாக, இதையும் செய்து விட்டோமானால், அவர்களுக்கு நான் நினைவுபடுத்துகிறேன், அவர்களுக்குத் தான் பிரச்னை வரும். (சிரித்துக் கொள்கிறார்)ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், துாத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய்க்கான உள்ளூர் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டில் தாமிர உற்பத்தி இல்லாததால், அதன் விலை அதிகரித்து, சிறு, குறு தொழில் செய்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாக்கியத்திற்கு ஒரு முறை, 'ஆத்மநிர்பர்' எனச் சொல்லுாம் பிரதமரோ, மத்திய அரசோ, இதுபற்றி எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லையே...


இது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவாகியிருக்கும் பிரச்னை. ஒரு சில அரசியல் கட்சிகள், இதை ஒரு பிரச்னையாக உருவாக்கியுள்ளன. இதற்கு ஒரு சுமுகமான தீர்வை காண வேண்டும் என, எனக்குத் தோன்றுகிறது. இந்த வேலையை, அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியாது. அந்தப் பகுதி மக்களையும் இணைத்து, என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றனவோ, அதைப் பற்றி பேசி ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். அதன் பிறகே, இது பற்றி ஒரு முடிவு எடுக்க முடியும்.பா.ஜ., ஹிந்துத்வா கட்சி என சொல்லப்படுகிறதே, இதுவரை நீங்கள் ஹிந்துக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்? தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள், தங்களுக்கு ஏதும் சிறப்பாக செய்து தரப்பட்டதாக தெரியவில்லை என்றே சொல்கிறார்கள்!


பா.ஜ., இந்திய தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் பணியாற்றுகிறது; நாங்கள் கழிப்பறை கட்டும் போது, அது ஹிந்துவுக்கும் கிடைக்கும், இஸ்லாமியருக்கும் கிடைக்கும், கிறிஸ்தவருக்கும் கிடைக்கும். தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று திட்டமிடும்போது, அது அனைவரையும் தானே போய்ச் சேரும். பிரதமர் மோடி, 60 கோடி பேருக்கு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வழங்கியுள்ளார். அதன் பலன் அனைவரையும் சென்றடைகிறது. 13 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, காஸ் சிலிண்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்களின் பயன், அனைத்து தரப்பு மக்களையும், தான் சென்று சேருகிறது. நாங்கள் எல்லா தரப்பு மக்களுக்காகவுமே பணியாற்றுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு பிரச்னை எழும் போது, குரல் கொடுப்போம். அனைத்து மதத்தினரும், தங்கள் மதத்தை இடையூறு இல்லாமல் பின்பற்ற வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. அப்படி ஹிந்துக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், நாங்கள் கண்டிப்பாக குரல் கொடுப்போம். அப்படித்தான், வேல் யாத்திரையும் ஆரம்பிக்கப்பட்டது.கோவில்களையும், அவற்றை சார்ந்த சொத்துக்களையும், அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க திட்டம் இருக்கிறதா? இருக்கு எனில் எப்போது செய்து தருவீர்கள்? இல்லை எனில் ஏன்?


நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில், இதைப் பற்றி தெரிவித்துள்ளோம். கோவில் நிர்வாகத்தை, சமூகமும் சாதுக்களும் நிர்வகிக்க வேண்டும். அரசின் தலையீடு குறைய வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இது உடனடியாக செய்யக்கூடிய வேலையல்ல. மெல்ல மெல்ல தான், செய்யமுடியும். மேலும், இப்போது இருக்கும் ஏற்பாட்டுக்கு, மாற்று ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்.


latest tamil news

தமிழகத்தில், பா.ஜ., ஏன் அபாரமாக வளரவில்லை?


தமிழகத்தில், எங்கள் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க.,வோடு சேர்ந்து வளர்ந்து வருகிறோம். இந்த கூட்டணியில், எங்கள் இடம் ஒரு இளைய சகோதரரை போன்றது.நீங்கள் இதுவரை, கருத்து கணிப்புகள் பொய்யாகும்படி, தேர்தல்களில் சொன்னதை நிகழ்த்தி காட்டி இருக்கிறீர்கள். இந்த தேர்தல் பற்றிய உங்கள் ஆருடம் என்ன?


நான், மிக நிச்சயமாகச் சொல்கிறேன். இங்கே அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க.,வின் ஆட்சி உருவாகப் போகிறது. எங்களுக்கு நல்ல பெரும்பான்மை கிடைக்கும். உங்களுடைய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் பல்வேறு கருத்துக்களை, கிராமத்தில் உள்ளோர் நம்பவில்லை. நான், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும் வந்திருந்தேன், பின்பும் பல முறை வந்து விட்டேன். நான் சென்ற அனைத்து இடங்களிலும் தே.ஜ., கூட்டணிக்கும் பா.ஜ.,வுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து, வருமான வரித் துறையை மத்திய அரசு ஏவுகிறதா?


நீங்கள் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து, வெளியிட்டுள்ள விபரங்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்கள் கூட்டணியில் இருப்போருக்கும், இந்த ரெய்டுகள் நடந்திருக்கின்றன. தேர்தல் ஆணையம், எங்கெல்லாம் ரெய்டு நடத்தச் சொல்கிறதோ, அங்கெல்லாம் வருமான வரித்துறை ரெய்டு நடத்துகிறது. அதனால், இது அரசியல் சாராத நடவடிக்கை.சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்க, இங்குள்ளவர்களின் ஆலோசனைப்படி நீங்கள் தீவிர முயற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. அது ஏன் சாத்தியப்படவில்லை?


நான் அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை.உங்கள் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., ஏராளமான இலவசங்களை அறிவித்துள்ளது. இதில், பா.ஜ.,விற்கு உடன்பாடு இருக்கிறதா? தமிழக பொருளாதாரம் இருக்கும் நிலையில், அதையெல்லாம் கொடுப்பது சாத்தியமா?


அ.தி.மு.க., வெறுமனே இலவசங்களைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. கல்வியை பற்றியும், தொழில் வளர்ச்சியை பற்றியும் உள்கட்டமைப்பு பற்றியும் சொல்லியிருக்கிறது. சென்னைக்கான குடிநீர் பற்றியும் சொல்லியிருக்கிறது. வெறுமனே இலவசங்களை மட்டுமே, அ.தி.மு.க., கொடுப்பதாக அறிவித்திருந்தால், உங்கள் கேள்வியில் நியாயம் உண்டு.மற்ற விஷயங்களையும் செய்து விட்டு, இலவசமும் தருவோம் என்று, அ.தி.மு.க., சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?


ரஜினிக்கு, தாதா சாகேப் பால்கே விருது கொடுத்துள்ளீர்கள்.இது, தேர்தல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டதா?


இதை எப்போது கொடுத்தாலும் அதுதானே! அதற்காக, திரைத்துறைக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளவருக்கு கவுரவம் செய்யாமல் இருக்க முடியுமா? நான் ரஜினிகாந்தை வாழ்த்துகிறேன். தமிழில் மட்டுமல்ல, பல மொழி திரைத்துறைகளுக்கு, அவர் பங்களிப்பு செய்துள்ளார். அவருடைய திரைப்படங்கள், புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். அவருடைய பங்களிப்பை மக்களுக்கும் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.மோடி, எவ்வளவுக்கு எவ்வளவு தமிழகம் வருகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு தி.மு.க.,வுக்கு ஓட்டு அதிகரிக்கிறது என்று சொல்கிறாரே ஸ்டாலின்?


சரி, நல்ல விஷயம் தானே! மோடி வந்து கொண்டு தானே இருக்கிறார். ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மோடி, அ.தி.மு.க., - பா.ம.க., ஆகிய எங்களுடைய கொள்கை, வளர்ச்சி. எங்கள் இலட்சியம், தமிழகத்தை வல்லரசாக ஆக்குவதும், ஒவ்வொரு கிராமத்திற்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்பது தான். அவர்களுடைய இலட்சியம், உதயநிதியை முதல் அமைச்சர் ஆக்குவது. தமிழக மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமா? உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கு ஓட்டளிக்க வேண்டுமா என்பதை. இவ்வாறு அமித் ஷா பேட்டி அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
04-ஏப்-202106:54:33 IST Report Abuse
Sai உத்தரகாண்ட் முதல்வரை OVER NIGHT மாற்றிவிட்டு அமீத் சாஸ்திரி இந்தியாவை 200 ஆண்டுகள் அமெரிக்கா அடிமைப் படுத்தியிருந்ததுன்னு சொன்ன அவரது சிஷ்யர் திரிவேத்ரசிங் ராவதை போட்டதை இந்த உலகமே பாராட்டுகிறது
Rate this:
Cancel
Lenin Kalimuthu - London,யுனைடெட் கிங்டம்
03-ஏப்-202104:09:21 IST Report Abuse
Lenin Kalimuthu அரசியல் திருடர்கள் திமுக, பாஜக போன்ற ஆண்ட கட்சிகள் அனைவருமே. இவ்வளவு பேசும் அமித் ஷா மகனுக்கு கிரிக்கெட் போர்டில் என்ன வேலை ???
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
03-ஏப்-202103:07:02 IST Report Abuse
Amal Anandan ஸ்டாலினால் உதய நிதியை BCCI தலைவராக ஆக்கமுடியாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X