ஓட்டுப் பதிவுக்கு, மூன்று நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில், ரஜினியின், 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு, 2020ம் ஆண்டுக்கான, 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்குவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில், இதற்குமுன் சிவாஜி கணேசனும், பாலசந்தரும் இவ்விருதை பெற்றுள்ளனர்.
'பால்கே விருதுக்கு ரஜினி தகுதி உள்ளவரா?' என, எவரும் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில், அவருக்கு இந்த விருதை வழங்குவதாக அறிவித்தது தான் பலரை, குறிப்பாக, தி.மு.க., கூட்டணி கட்சியினரை கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு ரஜினி மற்றும் அவரது ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காக, மத்திய அரசு இவ்விருதை அறிவித்துள்ளதாக, தி.மு.க., தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அதை மறுக்கிறார்.

'விருதுகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது தனிப்பட்ட வல்லுனர்கள் குழுவின் வேலை. அது எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை' என்கிறார் அவர். இது தெளிவான விளக்கம் தான் என்றாலும், அதை ஏற்கும் மன நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இல்லை. சந்தேகமாகவே பார்க்கின்றனர்.
அவர்களின் சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் விஷயம் எது என்றால், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ரஜினி ரசிகர்கள் போலவே, 'தலைவா' என, ரஜினியை குறிப்பிட்டுள்ளது தான். பிரதமரின் வாழ்த்து அட்டகாசமான வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், 'நாட்டுக்கே தலைவராக இருப்பவர் ஒரு நடிகரை, 'தலைவா!' என்று விளிப்பது, 'ஓவராக' இல்லையா?' என்கின்றனர், தி.மு.க.,வினர்.
ரஜினியும், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும், 'ட்வீட்'டில் அவரை, 'மை டியரஸ்ட் நரேந்திர மோடி' என்கிறார். 'மரியாதைக்குரிய மற்றும் என் மனதுக்கு பிரியமான' என்ற அடைமொழியை பிரதமருக்கு கொடுக்கிறார், 'சூப்பர் ஸ்டார்...'ஆனால், அரசியலுக்கே வராத ஒருவருக்கு விருது கொடுத்து, அதன் மூலம் தேர்தலில் அவரது ஆதரவை பெற வேண்டிய அளவுக்கு பிரதமரோ, மத்திய அரசோ எந்த நெருக்கடியிலும் இல்லை. மத்திய அரசு இந்த விருதை வழங்கி இருப்பதால், பா.ஜ., இடம் பெற்றுள்ள, அ.தி.மு.க., கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து, தனது ரசிகர்களை அந்த கூட்டணிக்கு ஓட்டுப் போட சொல்லும் அளவுக்கு ரஜினியும் அற்பமானவர் அல்ல. அவர் எட்டிப்பிடித்த சிகரங்கள் பால்கே விருதை காட்டிலும் உயரமானவை.
உண்மையில், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கட்சி தொடங்கி அரசியலில் குதித்து ஆட்சியை பிடிக்கும் திட்டத்துக்கு ரஜினி முழுக்கு போட்டுவிட்ட பிறகும், அவர் ஏதாவது சொல்லி நம் வாய்ப்பில் மண்ணை அள்ளி போட்டு விடுவாரோ என்ற பீதி தமிழக கட்சிகள் பலவற்றை ஆட்டிப் படைக்கிறது என்பதுதான்.'ஒரு தடவை சொன்னா நுாறு தடவை சொன்ன மாதிரி' என்கிற பிரபலமான வசனத்துக்கு சொந்தக்காரர், ஓட்டுப்பதிவு நெருங்கும் வேளையில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, நம் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து விடுவாரோ என, ஸ்டாலின் அஞ்சுகிறார்.

அந்த அச்சத்துக்கு காரணம் இருக்கிறது. தி.மு.க., கூட்டணியின், ஹிந்து விரோத அணுகுமுறைக்கு சவால் விடும் வகையில், தமிழகத்தில் ஆன்மிக அரசியலை கொண்டுவரப் போவதாக சொன்னவர் ரஜினி. பா.ஜ.,வின், ஹிந்துத்வா கொள்கையோடு ரஜினியின் ஆன்மிக அரசியலை சமமாக பாவிக்க முடியாது என்றாலும், தி.மு.க.,வின் கொள்கைக்கு அல்லது தி.மு.க., தலைமையின் அணுகுமுறைக்கு முற்றிலும் எதிரானது என்ற வகையில், ரஜினியின் ஆன்மிக அரசியல், அ.தி.மு.க.,வுக்கு உகந்தது என்றே கூறலாம்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தபோது தமிழகம் சந்தித்த, ஒரு தேர்தலில், 'வாய்ஸ்' கொடுத்ததை போல, இம்முறையும் ரஜினி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு, 'பால்கே' விருது அறிவிப்பால் எகிறி இருக்கிறது. அவ்வாறு ரஜினி, 'வாய்ஸ்' கொடுத்தால், இப்போது, தி.மு.க., கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை என ஆகிவிடும். அவரை எதுவும் பேச விடாமல் தடுப்பதற்காகவே, தி.மு.க.,வினர் முந்திக் கொண்டு இந்த கருத்துக்களை கூறுகின்றனர்.
அதே சமயம், ரஜினி யாருடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தும் நபர் அல்ல. எனவே, 'கடவுள் நம்பிக்கையுடன், கண்ணியம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் அமைதியான பாதையில் செல்லக்கூடிய நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள்' என்று பொதுவான, ஒரு அறிவுரையை தனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ரஜினி வழங்கக் கூடும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அப்படி சொன்னாலே அது, 'தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, சொல்வதற்கு சமம் தானே? என்று அக்கட்சியின் தலைவர்கள் கேட்கக்கூடும். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடுமா, என்ன.

ரசிகர்கள் கருத்து
சத்யநாராயண ராவ், ரஜினியின் அண்ணன்
ரஜினிக்கு பால்கே விருது தருவது, தமிழகத்துக்கு மட்டும் அல்ல; அவரது சொந்த பூமியான கர்நாடகாவுக்கும் பெருமையான விஷயம். தேர்தல் நேரத்தில் விருது அறிவித்ததால், எதிர்பார்ப்போடு கொடுத்த மாதிரி தோற்றம் ஏற்படத் தான் செய்யும். அதற்காக, ரஜினி ரசிகர்கள் அவ்வளவு பேரும் அதே எண்ணத்தோடு தான் இருப்பர் என சொல்ல முடியாது. ரஜினியும், ஒரு விருதுக்காக இன்னாருக்கு ஓட்டு போடுங்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டார். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசை. ஆகவே, நல்லவர்களை தேர்வு செய்ய ரஜினி ரசிகர்கள் ஓட்டளிப்பர்.
அர்ஜுன மூர்த்தி, தலைவர், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி
அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்த பின், ரஜினி தாமரை இலை மேல் தண்ணீராகத்தான் இருக்கிறார். யாரையும் அவர் எதற்காகவும் நிர்பந்தப்படுத்த மாட்டார். அதே போல, யார் நிர்பந்தித்தாலும், அவர் உடன்பட மாட்டார். மத்திய அரசும் அப்படித்தான் இருக்கிறது. விருது கொடுத்தெல்லாம், ஒருவரை நிர்பந்தம் செய்ய மாட்டார்கள். அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. தலைவருக்கு மரியாதை செய்த மத்திய அரசுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வோடு சில ரசிகர்களோ,தொண்டர்களோ பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்கக் கூடும். அதற்காக, தகுதியுள்ளவருக்கு கொடுத்த விருதுக்கு அரசியல் சாயம் பூச முயலுவது, விருதை அவமானப்படுத்துவது போலாகும்.
பால நமச்சிவாயம், ரஜினி ரசிகர் மன்ற ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்:
தலைவர் ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுக்க முயன்றவர். அந்த வழியில் தான் ரசிகர்களும் உருவாக்கப்பட்டனர். ஆன்மிக அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு ஓட்டுப் போடலாம் என்றுதான் காத்திருந்தோம். இந்த சூழ்நிலையில், தலைவரை கவுரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. அதற்கு சிறிய நன்றிக் கடனாக இந்த முறை பா.ஜ இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு ரஜினி ரசிகர்கள் ஓட்டளிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
அழகர் சாமி, மதுரை மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் துணை செயலர்
சம்பாதிக்கும் நோக்கம் கொண்ட ரசிகர்கள் தான், ரஜினி அரசியலுக்கு வர முடியவில்லை என்றதும், வேறு அரசியல் இயக்கம் தேடி ஓடி விட்டனர். இந்த சூழலில் ரஜினிக்கு பால்கே விருது அறிவித்திருப்பது, எங்களுக்கும் பெருமை. ஏற்கனவே இப்படி பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். பால்கே விருதுக்காக மட்டும் ரசிகர்கள் பா.ஜ.,வுக்கும் கூட்டணி கட்சிக்கும் ஓட்டளித்து விட மாட்டார்கள். நல்லவரா, ஆன்மிக வழி செல்பவரா என தேர்வு செய்து மனசாட்சிபடியே ஓட்டளிப்பார்கள்.
கல்லல் எம்.ரவிக்குமார், சிவங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்:
ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார் என்றதும், அதனால் ஏற்பட்ட பதற்றத்தில், எங்களை எதிரியாக பார்க்கத் துவங்கினர், சில கட்சியினர். எங்களை, 'சங்கி'கள் என்று விமர்சித்தனர். எங்கள் தலைவர் அரசியலுக்கு வராமல் ஒதுங்கினாலும், அவருக்கான மரியாதையைக் கொடுக்க முன்வந்த மத்திய, அரசை பாராட்டத்தான் வேண்டும். எதிர்பார்ப்பில்லாமல் நேர்மையாக விருது அறிவித்திருக்கும் பா.ஜ.,வை பாராட்டி, இம்முறை அவர்களுக்கே ஓட்டு போடுவோம்.
பாலக்கரை சக்தி வேல், திருச்சி மாவட்ட நிர்வாகி
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற பிறகு, என்னைப் போன்ற உண்மையான ரசிகர்கள் அவர் வழியிலேயே தொடர காத்திருக்கிறோம். ஆன்மிக கொள்கையோடு ஒத்துப் போகும் இயக்கங்களான அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்காக ஏற்கனவே பல இடங்களில் ரஜினி ரசிகர்கள் தேர்தல் வேலை பார்க்கின்றனர். அவர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக தலைவருக்கு பால்கே விருது வழங்கி இருக்கிறது மத்திய அரசு. இந்த முறை பா.ஜ.,வுக்குத்தான் ஓட்டளிப்போம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE