சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லையால் இறந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை கூறிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக.,வின் முக்கியத் தலைவர்கள் சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி வருகின்றனர்.
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ‛ஸ்டாலின் பதவியேற்ற 5 நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளுங்கள். அதிகாரிகள் தடுத்தால் அவர் இருக்கமாட்டார்,' என பேசியது சர்ச்சையானது.
அதேபோல், திமுக எம்.பி., ஆ.ராசா சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து இழிவாக பேசி பலரது கண்டனத்திற்கு உள்ளானார். இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கண்டித்த தேர்தல் ஆணையம் ராசாவிற்கு 48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

அதேபோல், திமுக எம்பி., தயாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இணைத்து தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‛சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் பெயரை நாங்கள் (திமுக) நியாபகம் வைத்திருப்போம். எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா?,' என போலீஸ் அதிகாரியையே மிரட்டும் தோனியில் பேசியிருந்தார்.
இப்படியாக திமுக.,வினர் தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டுவதும், தங்கள் பேச்சில் சர்ச்சையை கிளப்புவதையும் வாடிக்கையாக கொண்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஏப்.,1) தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்து பேசிய உதயநிதி, ‛மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய இருவரும் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்தே போயிட்டாங்க,' என பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சு, மறைந்த தலைவர்கள் மீதும், பிரதமர் மோடி மீதும் அபாண்டமாக பழிபோடுவதாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE