
கட்சி கட்சி என்று கடந்த முப்பது ஆண்டுகளாக கட்சிக்காக உழபை்பவர்தான் சைக்கிள் வடிவேலு.தற்போது அ.மு.மு.க.,விற்கு வந்துள்ள இவர் நான்கரை கிலோ எடையுள்ள குக்கரை தலையில் துாக்கிக்கொண்டு ஊர் ஊராக டிவிஎஸ் 50 மொபட்டில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்,இவரது கதையை கொஞ்சம் பார்ப்போமா?
நமக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் உறாங்கட்டான் கிராமம்.அம்மா அப்பா விவசாய கூலிகள் எனக்கு படிப்பு வரலை பள்ளிக்கூடம் பக்கமே போகலை பதினைந்து வயசுல வீட்டைவிட்டு பிழைப்பை தேடி நாமக்கல் பக்கம் போனேன்.

அங்கே ஒரு ஒட்டலில் கிடைத்த வேலையைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது புரோட்டா மாஸ்டராக இருக்கிறேன் டெய்லி எனக்கு 600 ரூபாய் சம்பளம்.எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும் அவரைப் பார்ப்பதற்காக மதுரையில் நடந்த எம்ஜிஆர் மன்ற மாநில மாநாட்டிற்கு நாமக்கல்லில் இருந்து மதுரைக்கு சைக்கிளிலேயே போயிருந்தேன்.
எம்ஜிஆரை பக்கத்தில் போய் பார்க்கும் முயற்சித்த போது போலீசார் நடத்திய தடியடியில் மண்டை உடைந்தது,அதைப்பற்றி கவலைப்படாமல் கட்டுப்போட்டுக் கொண்டு போய் எம்.ஜி.ஆரை.,துாரத்தில் இருந்து பார்த்து மகிழ்ந்தேன்.அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து சொன்னேன் நன்றாக பேசினார் அவருக்காக வாழ்நாளெல்லாம் உழைப்பது என முடிவெடுத்தேன்.
அவர் போட்டியிட்ட தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை உடம்பில் வரைந்து கொண்டு, தலையில் இரட்டை இலை கீரிடம் அணிந்து வலம்வருவேன் ஒரு நாள் அதே கோலத்தில் ரோட்டில் போய்க்கொண்டு இருந்த போது என்னைக்கடந்த சென்ற ஜெயலலிதாவின் கார் திடீரென நின்றது என்னை காருக்கு அருகில் வரச்சொல்லி நலம் விசாரித்தார்.
அதன் பிறகு நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் என்னை மேடை ஏற்றி எனக்கு ஒரு புதுசைக்கிள் கொடுத்து ‛சைக்கிள் வடிவேலு' என்று பட்டமும் கொடுத்தார்.அதன் பிறகு அதிமுக போட்டியிட்ட பல்வேறு தேர்தல்களில் பிரச்சாரம் செய்தேன்.இதுவரை லட்சத்திற்கும் அதிகமான கிலோமீட்டர் துாரம் பயணம் செய்திருப்பேன் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை கிட்டத்தட்ட முப்பது வருடமாக சைக்கிளில் சென்றேன்
இப்போது வயதாகிவிட்டதாலும் (57) கால்கள் ஒய்ந்துவிட்டதாலும் பழைய டிவிஎஸ் 50 வாங்கிஅதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ஸ்பீக்கர் மூலமாக ஊர் ஊராகப் போய் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் புரோட்டா போடப் போய்விடுவேன் நான் இப்படித்தான் என்பதால் வேலை பார்க்கும் கடையிலும் சரி வீட்டிலும் சரி என்னை கண்டுகொள்ளமாட்டார்கள்.ஒரு பொண்ணு ஒரு பையன்.பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன் பையன் வேலைக்கு போகிறான் அவன் வீட்டை பார்த்துக் கொள்வான் என் விஷயத்தில் யாரும் தலையிடுவது கிடையாது.
ஜெயலலிதா எங்கே என்னை பார்த்தாலும் நலம் விசாரித்து கைநிறைய பணம் கொடுப்பார் ஒரு முறை என்னையும் என் மகளையும் வரவழைத்து பேசினார் மகள் படிப்பை முடித்ததும் வந்து பார் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார் மகள் படித்து முடிப்பதற்குள் ஜெயலலிதா இறந்துவிட்டார்
அம்மா போன பிறகு கட்சியில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை மகள் வேலை விஷயமாக கட்சிக்காரர்களை பார்த்து பார்த்து சலித்துப் போனேன் வேலை கிடைக்காத விரக்தியில் மகள் முழ்கிவிடக்கூடாது என்பதற்காக கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன்
எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் ஆகவே மரியாதை தராத அ.தி.மு.க.,வை விட்டுவிட்டு அ.ம.மு.க கட்சிக்கு போனேன்.அண்ணன் தினகரன் ‛வாப்பா வடிவேலு' என்று என்னை வரவேற்றதுடன் நாமக்கல் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் கொடுத்தார்.
இப்ப கடைக்கு ஆறு மாதம் லீவு போட்டுவிட்டேன் அ.ம.மு.க.,விற்கு ஒட்டு கேட்டு குக்கரை தலையில் துாக்கிக் கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் செய்கிறன் அண்ணன் தினகரனை முதல்வராக பார்த்துவிட்டுத்தான் மீண்டும் கடைக்கு திரும்புவேன்.கட்சிக்காரர்கள் கொடுக்கும் பணத்தில்தான் ஒடிக்கொண்டு இருக்கிறேன் . கிடைத்த இடத்தில் துாங்கி கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொள்வேன்.
இவர் போன்ற தொண்டர்கள்தான் ஒவ்வொரு கட்சிக்கும் மூலதனம் ஆனால் தேவை முடிந்ததும் அவர்கள் கறிவேப்பிலையாக துாக்கி எறியப்படுவதுதான் வேதனை.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE