சென்னை:'தேர்தல் நேரத்தில், வருமான வரி சோதனை நடத்துவதை, தடுத்து நிறுத்த வேண்டும்' என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, புகார் அனுப்பி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். பா.ஜ., அரசு வருமான வரித்துறையை, ஆயுதமாக பயன்படுத்துகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல், சோதனை நடத்தப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி., மற்றும் பா.ஜ., அறிவுரைப்படி, வருமான வரித்துறை செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில், எங்கள் பணிகளை முடக்குவதற்காக, பா.ஜ., வருமான வரித்துறையை பயன்படுத்துகிறது.தேர்தல் நேரத்தில், வருமான வரித்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சோதனை நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.அதிகாரிகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என, பா.ஜ.,வுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சபரீசன் இல்லத்தில், ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ''எங்களுக்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. சபரீசன் வீட்டில், வீட்டு செலவுக்கு வைத்திருந்த, 1.36 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. ''எதிர்பார்ப்போடு வந்த அதிகாரிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்,'' என்றார்.