உடுமலை;குடியிருப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் செல்லும் ரோட்டில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கரட்டுப்பதி மலைவாழ் கிராமம். இக்கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.போதிய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இல்லாததால், வசிக்கும் வீடுகளை கூட பராமரிக்க முடியாத நிலையில் அம்மக்கள் உள்ளனர். கற்கள் மற்றும் சிமென்ட் இல்லாமல், செம்மண்ணை குழைத்து, வைக்கப்பட்ட சுவர்கள், மழையினால், அரிக்கப்பட்டு, பரிதாப நிலையில் உள்ளது.மேற்கூரையில், 'ஆஸ்பெஸ்டாஸ் சீட்' அமைக்கப்பட்டுள்ளதால், கோடை காலத்தில், வீட்டிற்குள் அதிக வெப்பம் காரணமாக தங்க முடிவதில்லை. பல வீடுகளின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து வசிக்க முடியாத அவல நிலையில் காணப்படுகிறது.இந்த வீடுகளை பராமரிக்கவும், புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரவும் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குடியிருப்பில், போதிய அளவு தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டத்தில், போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை.கழிப்பிடம் கட்ட வசதியில்லாததால், திறந்த வெளிக்கழிப்பிடத்தையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE