கள்ளக்குறிச்சி : ஓட்டு சேகரிப்பின் போது கள்ளக்குறிச்சி தொகுதி காங்., வேட்பாளர் காரை சோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வைத்த போலீசாரை கண்டித்து கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி தொகுதி காங்., வேட்பாளர் மணிரத்தினம், தியாகதுருகம் கரிம்ஷா தக்காவில் உள்ள ஜாமியா பள்ளி வாசலில் இஸ்லாமியர்களிடம் ஓட்டுகள் சேகரிப்பதற்காக நேற்று பகல் 1.15 மணியளவில் தனது காரில் சென்றார். உடன், தியாகதுருகம் தி.மு.க., மணிமாறன் மற்றும் காங்., மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ் மற்றும் கட்சியினர் என மொத்தம் மூன்று கார்களில் சென்றனர்.அப்போது, பள்ளி வாசல் நுழைவு வாயில் தெருவில், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார், வேட்பாளர் மணிரத்தினம் மற்றும் மணிமாறன் ஆகியோருக்கு சொந்தமான கார்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உடன், அவர்கள் சோதனை மேற்கொள்ளுமாறு போலீசாரிடம் தெரிவித்து விட்டு அருகே உள்ள பள்ளிவாசலுக்கு நடந்து சென்று ஓட்டு சேகரித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்தபோது, சோதனை மேற்கொண்ட போலீசார் தங்களது உயர் அதிகாரிகள் வர வேண்டும் என்று கூறி நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர்.பின்னர், அங்கு வந்த டி.எஸ்.பி., ராமநாதன் மீண்டும் கார்களில் சோதனை செய்தார். நீண்ட நேரம் காத்திருக்க வைத்து ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி போலீசாருடன் கட்சியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து போலீசாரை கண்டித்து பகல் 2 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று வேட்பாளர் மணிரத்தினம் கூறியதையடுத்து, பகல் 2.15 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE