காரணம் என்ன? மேற்கு வங்கத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரஸ்| Dinamalar

காரணம் என்ன? மேற்கு வங்கத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரஸ்

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (12)
Share
அசாமில் ஆளும், பா.ஜ.,விடம் இருந்தும், கேரளாவில் இடதுசாரிகளிடம் இருந்தும் ஆட்சியை கைப்பற்ற, கடும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை எதிர்த்து, ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், மேற்கு வங்கத்தில், மூத்த காங்., தலைவர்கள் யாரும் இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களில்
மேற்கு வங்கம், காங்கிரஸ், ராகுல், பிரியங்கா, பிரசாரம், மம்தா, திரிணமுல், திரிணமுல் காங்கிரஸ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இடதுசாரிகள், கேரளா, அசாம், தேர்தல்

அசாமில் ஆளும், பா.ஜ.,விடம் இருந்தும், கேரளாவில் இடதுசாரிகளிடம் இருந்தும் ஆட்சியை கைப்பற்ற, கடும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை எதிர்த்து, ராகுல் உள்ளிட்ட காங்., தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், மேற்கு வங்கத்தில், மூத்த காங்., தலைவர்கள் யாரும் இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் காங்., மேற்கு வங்கத்தில் மட்டும் அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து, அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை நடக்கிறது.


கூட்டணி


மேற்கு வங்கத்தில், கடந்த மாதம், 27 மற்றும் ஏப்., 1ல், இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு இன்னும், ஆறு கட்ட ஓட்டுப்பதிவுகள் மீதமுள்ளன.அசாமில், இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம், கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கு, நாளை மறுதினம், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.காங்., மூத்த தலைவர்கள் ராகுல் மற்றும் பிரியங்கா, மேற்கு வங்கத்தில் இதுவரை ஒரு பொதுக் கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.

மேற்கு வங்கத்தை காங்., புறக்கணிக்க காரணம் என்ன என்று களத்தில் விசாரித்தபோது, காங்., தலைவர்கள் சில காரணங்களை முன் வைத்தனர்.கேரளாவில், ஆளும் இடதுசாரி அரசை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் காங்., மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.எனவே, நாளை மறுதினம் கேரள ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின், மேற்கு வங்கத்தின் நான்காம் கட்ட தேர்தலில் இருந்து, தங்கள் பிரசாரத்தை காங்கிரஸ் துவக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ராகுலும், பிரியங்காவும், மேற்கு வங்க பிரசாரத்தை தற்போது வேண்டுமென்றே தவிர்த்து வருவதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியவாத காங்., ஆகிய கட்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. காங்., தனித்து விடப்பட்டுள்ளது.


வழி வகுக்கும்

வருங்காலத்தில், பிரதமர் தேர்வுக்கு மம்தாவின் ஆதரவு தேவைப்படலாம் என்றும், காங்., தலைமை நினைப்பதாக தெரிகிறது. எனவே, மம்தா மீதான கடுமையான விமர்சனங்களை, காங்., முன்னெச்சரிக்கையாக தவிர்த்து வருவதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மால்டா, முர்ஷிதாபாத், மத்திய மற்றும் வடக்கு வங்கம் ஆகிய பகுதிகள், காங்., கோட்டையாகக் கருதப்படுகின்றன.

இங்குள்ள தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட தேர்தலுக்கு பிறகே ஓட்டுப்பதிவு நடக்கஉள்ளதால், அங்கு ராகுல் பிரசாரம் செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.கேரளாவில் இடதுசாரிகளை கடுமையாக திட்டி பிரசாரம் செய்துவிட்டு, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை ஆதரித்து, காங்., தலைவர்கள் பிரசாரம் செய்தால், அது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், மேற்கு வங்கத்தில் காங்., தற்போது அடக்கி வாசிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X