தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி, ராஜகோபாலாச்சாரி, காமராஜ், பக்தவத்சலம் காலத்திற்கு பின், திராவிட ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கலாசார சீரழிவு கொஞ்சமல்ல.
தி.மு.க., 1949ல் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டு, பிரசாரத்திற்கு, எம்.ஜி.ஆர்., என்ற பெரும் நடிகரை பயன்படுத்தியது. எம்.ஜி.ஆர்., பெயரைச் சொன்னால் மக்கள் கூடுவர்; ஓட்டுகள் கிடைக்கும் என்று அவரை பயன்படுத்திக் கொண்டனர்.எம்.ஜி.ஆர்., புகழால், 1957 தமிழக சட்டசபை தேர்தலில், 15 இடங்களில் வெற்றி பெற்றனர். அவரை பயன்படுத்தியே, அண்ணாதுரை தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அப்போது, எம்.ஜி.ஆர்., ஒரு விளம்பரப் பதாகையாக மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர்., மஹா புத்திசாலி. தன்னை சினிமாவிலும், அரசியலிலும் வளர்த்து, கட்சிக்கு இணையாக தன் ரசிகர் மன்ற கட்டமைப்பை வளர்த்ததால், அது பிற்காலத்தில் வலிமை மிக்க அரசியல் கட்சியானது.
கடந்த, 1967ல், ராஜாஜியோடு பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து, அண்ணாதுரை வெற்றி பெற்று முதல்வரானார். கூட்டணி மந்திரி சபை அமைத்தார். அதாவது, தேர்தல் நேரத்தில், 1965ல் ஏற்பட்ட மாணவர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், எம்.ஜி.ஆர்., குண்டடி பட்டதையும் சாதகமாக்கி, காங்கிரஸ் தான் இவற்றிற்கு காரணம் என்றும், ரூபாய்க்கு, 3 படி அரிசி தருகிறேன் என்றும் பொய்யான பரப்புரையால், தி.மு.க., வெற்றி பெற்றது.
ரூபாய்க்கு, 3 படி அரிசி போடாமல், ஓராண்டுக்குள் வாயில் புற்றுநோய் ஏற்பட்டு அண்ணாதுரை இறந்தார். அதன் பிறகு மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆர்., உதவியுடன், கருணாநிதி முதல்வரானார். அமைச்சர் பதவியை எதிர்பார்த்த எம்.ஜி.ஆரை, கருணாநிதி ஏமாற்றினார். 1972ல் பொதுக் குழுவில், கணக்கு கேட்ட எம்.ஜி.ஆரை, கருணாநிதி, கட்சியை விட்டு நீக்கினார். அன்றே எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க., என்ற கட்சியை தன் ரசிகர்களை கொண்டு ஆரம்பித்தார். கருணாநிதி அரசு, எம்.ஜி.ஆருக்கு பல தொல்லைகளைக் கொடுத்து, அவரது சினிமாவை வெளியிட முடியாமல் செய்தது.
அப்போதைய, தி.மு.க., ஆட்சி பல ஊழல்களை செய்தது. அதை வெளிச்சம் போட்டுக் காட்டிய, எம்.ஜி.ஆர்., டில்லிக்குச் சென்று பிரதமர் இந்திராவிடம், தி.மு.க., ஊழல் பட்டியலைக் கொடுத்து வந்தார். இதற்கு உறுதுணையாக அன்றைய, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம், மோகன் குமாரமங்கலம் இருந்தனர். இந்தியாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. ஊழல் மிக்க, தி.மு.க., ஆட்சியை இந்திரா கலைத்து, ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைத்தார்.
அதுபோல, 1977ல், பிரதமர் இந்திரா ஆதரவில், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்தார். 1977 முதல், 1980 வரை, எம்.ஜி.ஆர்., ஊழலற்ற அதிகாரிகளின் ஆலோசனையால், நல்ல சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார்.இந்திரா, 1977 தேர்தலில் தோற்ற பின், ஜனதா கட்சி என்ற பதவி வெறி பிடித்த தலைவர்களால், கூட்டணி ஆட்சி ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த மக்கள், மீண்டும் நிரந்தர ஆட்சி வேண்டி, இந்திராவை பிரதமராக்கினர். எம்.ஜி.ஆர்., தனக்கு உதவிய இந்திராவை மறந்து, ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு ஆதரவாக இருந்தார். இது, இந்திராவுக்கு, எம்.ஜி.ஆர்., மீது கோபத்தை உண்டாக்கியது.
இந்த அரசியல் சூழ்நிலையில் கருணாநிதி, இந்திராவிடம் கெஞ்சி, எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கலைத்தார்.கருணாநிதி விடாப்பிடியாக, இந்திராவை அட்டையாகப் பிடித்து, அப்போது வந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்து, வெற்றியும் பெற்றார். அதன் பிறகு, எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கலைத்து, சட்டசபை தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி வைத்து, தோல்வி கண்டார். ஆனால், எம்.ஜி.ஆர்., தனியாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்.
இதில், எம்.ஜி.ஆர்., கற்ற பாடம், நிதி பற்றாக்குறை. அதனால், வீடு, சத்யா ஸ்டூடியோ போன்ற சொத்துகளை அடமானம் வைத்து, தேர்தலுக்கு நிதி சேர்த்தார். எந்த தொழிலதிபரும் உதவ வில்லை. நிதி இல்லாமல் கட்சியையும், தேர்தலையும் சந்திப்பது தற்கொலைக்கு சமம் என்பதை, அப்போது அவர் புரிந்து கொண்டார்.
ஆட்சியை கவிழ்த்ததால் மக்களுடைய அன்பும், செல்வாக்கும் அவருக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தது. அந்த நேரத்தில், கட்சியை வலுப்படுத்த பணம் வேண்டும் என்ற உறுதியில், சாராயக் கடைகளையும், மதுபான ஆலைகளையும் நடத்தும் உரிமையை, கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார். அதே நேரத்தில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளை தனியாருக்கு தாரை வார்த்தார். அன்றிலிருந்து, மருத்துவ, இன்ஜினியரிங் கல்லுாரிகள் ஆளும் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. இதனால், புற்றீசல் போல் சுயநிதி மருத்துவ, தொழில்நுட்ப கல்லுாரிகள் அரசியல்வாதிகளிடம் நிறைய வந்து விட்டன.
ஒரு சீட்டுக்கு, அந்த காலத்தில் பல லட்சங்கள் என்று விலை போயிற்று; இன்று பல கோடி ரூபாய். இதில் பெரும்பகுதி, கட்சி வளர்ச்சி நிதிக்கு செலவிடப்பட்டது. அடுத்து, சாராய ஆலை நடத்தும் உரிமையை, தனக்கு நெருக்கமான சேலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, எம்.ஜி.ஆர்., கொடுத்தார். அதன் பின், சாராயக் கடைகளை தன் கட்சிக்காரர்கள் நடத்தும்படி கொடுத்தார். இதனால், ஏழ்மையில் வறண்ட கட்சிக்காரர்கள், வளம் கொழித்து தொழிலதிபர்களாகவும், கல்வித் தந்தைகளாகவும் ஆகினர்.
இந்த நேரத்தில், மத்தியில் ஆண்ட பிரதமர் இந்திராவின் நட்பை பெற, ஜெயலலிதாவை, டில்லிக்கு, எம்.பி.,யாகவும், அரசியல் துாதுவராகவும் எம்.ஜி.ஆர்.,அனுப்பினார்.ஜெயலலிதா அங்கு இருக்கும் அதிகார மையத்தை, தனக்கு சாதகமாக்கி, கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து வராமல் பார்த்துக் கொண்டார். நல்ல ஆங்கில அறிவும், பேச்சுத் திறமையும் அவரை, டில்லி அரசியல் வட்டாரத்தில் புகழ் பெறச் செய்தன. அதுபோல, தி.மு.க.,வினரும் டில்லி அதிகார மையத்தோடும், அரசியல் தலைவர்களோடும் நட்புடன் பழகினர். இது, எதிர்காலத்தில் தேசியக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து, அமைச்சரவையில் இடம் பிடிக்க உதவியது.
கடந்த, 1980 முதல், 84 வரை எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சாராய வியாபாரம் ஒருபுறம்; தனியார் மருத்துவ, தொழில்நுட்ப கல்லுாரிகள் வியாபாரம் மறுபுறம் என்று கட்சிக்காரர்கள் நடத்தி, கட்சியையும், தங்களையும் வளமாக்கினர். பின் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., அரசியல்வாதிகளும், சாராய ஆலை, தனியார் மருத்துவக் கல்லுாரி அதிபர்களாயினர். இதில் வரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை, 60:40 என்ற சதவீதத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் கப்பம் சென்றது. தமிழக இளைஞர்கள், முதியவர்கள் என்று பாரபட்சமில்லாமல், 'குடிமகன்'களாக மாற்றிய பெருமைக்குரிய எம்.ஜி.ஆர்., திடீரென உடல் நலம் குன்றி, சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார். இதற்கு, இந்திரா மிகவும் உதவியாக இருந்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில், தமிழகத்தில் நடந்த ஆட்சியில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது அதிகாரத்தை சுவைத்தனர். இந்த காலகட்டத்தில் இந்திரா, காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கினார்; அதே சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார்.ராஜிவ், தன் முழு ஆதரவோடு, உடல்நலம் குன்றி பேச முடியாத, எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்.
இந்த காலகட்டத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் அவரால் தகுந்த கவனம் செலுத்த முடிய வில்லை. அவருக்கு வந்த பக்கவாத நோயும் சரியாகாத நிலையில், ஜெயலலிதா ஆட்சிக்கு வர விரும்பி, ராஜிவ் உதவியை நாடினார். ஆனால், ராஜிவ் உதவ மறுத்து விட்டார். அதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை ஓரங்கட்டினார்.பிறகு, எம்.ஜி.ஆர்., திடீரென்று மரணம் அடைந்தார்.
இந்த நேரத்தில் கட்சி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்த குழப்பமான சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க, பேரம் பேசிய ஜானகி ஆட்சியை, கோபமான ராஜிவ் கவிழ்த்தார். கடந்த, 1989ல் வந்த தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியைக் கண்டது. கூட்டணி வைத்து வெற்றி பெற்ற ஓராண்டுக்குள், கருணாநிதி ஆட்சியும் கலைக்கப்பட்டது.
ராஜிவ், பார்லிமென்டை கலைத்ததால், பொது தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தலும் வந்தது. ஜெயலலிதா - ஜானகி இணைந்து, அ.தி.மு.க., ஒரு அணியாகி காங்கிரசோடு கூட்டணி வைத்தது. சென்னைக்கு பிரசாரத்திற்கு வந்த ராஜிவ், விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அந்த பரபரப்பு நிலையில் ராஜிவ் மரணம் அனுதாப அலையாக மாறியது; டில்லியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; நரசிம்ம ராவ் பிரதமரானார்.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஜெயலலிதா அபார வெற்றி பெற்று தலையும் காலும் புரியாமல், 'இந்த வெற்றி மக்கள் எனக்காகவே கொடுத்தனர்' என்ற இறுமாப்போடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து, எங்கும், எதிலும் ஊழல் என்று செயல்பட்டார்.இதற்கு துணை நின்ற சூத்திரதாரி, சசிகலா என்ற பெண். இந்த செயல்களுக்கெல்லாம் இருவரும் தண்டனை பெற்றனர் என்பது வேறு கதை.
இதில் ஒரு முக்கிய உண்மை, 20 ஆண்டுகள் இந்த வழக்கு நடந்து வந்தது. பல குற்றச்சாட்டு களுக்கு கோர்ட் படியேறி அலைந்தனர். அப்படி இருந்தும் ஊழல் நின்ற பாடில்லை. அது போல, அதிகார துஷ்பிரயோகம் நின்றபாடில்லை. இதற்கு பின், 1996 தேர்தலில் ஜெயலலிதா துாக்கி எறியப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்த்.
'இந்த, அ.தி.மு.க., ஆட்சி அதாவது ஜெயலலிதா ஆட்சி நீடித்தால், இறைவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்று குரல் கொடுத்தார். அந்த குரல் நல்ல பலனை கொடுத்தது. இதை தனக்கு சாதகமாக்கிய கருணாநிதி, மூப்பனாரோடு கூட்டணி அமைத்தார். இதில் முக்கிய பங்காற்றியவர்கள் துக்ளக் சோ. இந்த கூட்டணி, தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் தோற்ற ஜெயலலிதா மீது பல வழக்குகள் தொடுத்து, அவர் கோர்ட்டுகளுக்கு ஏறி இறங்கி அலைந்தார்.
எப்பவும் போல, 1996 முதல், 2001 வரை கருணாநிதியும், தன் வாரிசுகளோடு ஊழல், துஷ்பிரயோக ஆட்சியை நடத்தினார். கடந்த, 2001 தமிழக தேர்தலில் ஜெயலலிதா, சோ மூலமாக கெஞ்சிக் கூத்தாடி மூப்பனாரோடு கூட்டணி வைத்து, வெற்றி பெற்றார். டில்லியில், ஜெயலலிதா கவிழ்த்த வாஜ்பாயை, தி.மு.க., ஆதரித்து கூட்டணி அமைத்து, வெற்றி பெற்றது.
கருணாநிதி, மருமகனையும், எடுபிடிகளையும் மத்திய அமைச்சராக்கினார். ம.தி.மு.க., - பா.ம.க.,வினரும் மத்திய அமைச்சர்களாகினர். இந்த இந்திய அரசின் அதிகார மையத்தில் பங்கு பெற்ற, தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., வளம் கொழுத்த கட்சிகளாகின.இந்த காலகட்டத்தில் மாநிலத்தில், அ.தி.மு.க.,வும், டில்லியில் வளம் கொழிக்கும் முக்கிய இலாகாக்கள், தி.மு.க.,விடமும் இருந்தன.
இதில், திராவிடத் தலைவரின் உறவினர் உலகப் பணக்காரராக உலா வந்தார். 'கான்ட்ராக்ட், கமிஷன், கலெக் ஷன்' என்ற தாரக மந்திரம், தமிழகத்தில் இருந்து, தேசியக் கட்சிகளுக்கு, திராவிடக் கட்சிகள் கற்றுக் கொடுத்தன. இதன் பலனாக, இரண்டு சிறிய கூட்டணிக் கட்சிக்கு வேண்டிய பலமான நிதி ஆதாரம் சேர்ந்து விட்டது.இதனால், சிறிய கட்சியின் தலைவர்கள் வளமாக உயர்ந்து, மத்திய அரசு அதிகாரத்தை சுவைத்து விட்டனர்.
மத்திய அமைச்சரவையில் மாறன் இடம் பெற்று, தி.மு.க.,வின் நிதி நிலைமையை வானளவு உயர்த்தி விட்டார்.கருணாநிதி, தனக்கு உதவிய மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பை, தன் சிறுமதியால் தடுத்து, தேவகவுடாவை பிரதமராக்கினார்; இது, உலகறிந்த உண்மை.
திராவிடக் கட்சிகளின் தாரக மந்திரம், காலை பிடிப்பது. எழுந்தவுடன் உதவியவரை எட்டி உதைப்பது. இதைத் தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும் காலம் காலமாக மற்ற கட்சியினரை நடத்தினர்.டில்லியில், பா.ஜ., உடன் கூட்டணியில் இருந்து கொண்டே, காங்கிரசோடு கூட்டணி வைக்க, சோனியாவை கருணாநிதி சந்தித்தார். இந்திராவுடன் நெருங்கி எடுத்த படங்களை காட்டி, மதுரையில் இந்திராவை தாக்கி காயப்படுத்திய நிகழ்வை, மறைத்து நெருக்கமானார்.
கடந்த, 2004 பொது தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இதனால், டில்லியில் கருணாநிதியின் செல்வாக்கு உயர்ந்து, வளம் மிகுந்த துறைகளான தொலை தொடர்பு, சாலைப் போக்குவரத்து, கப்பல், சுற்றுப்புற சூழல் என்று முக்கியமானவற்றை பெற்றுக் கொண்டார். டில்லியில், தி.மு.க., பங்கு பெற்ற நேரத்தில் நம்பிக்கை அற்றவர் என்ற அவப்பெயர் சுமத்தப்பட்ட ஜெயலலிதா, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், ஒரு செல்லாக்காசாக ஆக்கப்பட்டார்.
கடந்த, 2006ல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, தி.மு.க.,வுக்கு, 87 இடங்களும்; காங்கிரசுக்கு, 38 இடங்களும் கிடைத்தன. காங்கிரசை செல்லாக் காசாக்கி, 'மைனாரிட்டி' ஆட்சியை கருணாநிதி நடத்தினார். கோஷ்டிகளாக செயல்பட்ட காங்கிரஸ்காரர்களை, ஆட்சியின் பக்கமே அண்ட விடாமல் வைத்திருந்தார். ஐந்தாண்டுகள் மைனாரிட்டி, தி.மு.க., ஆட்சியில் கணக்கு வழக்கற்ற ஊழல்கள் நடந்து, கட்சிக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறினர்.
மைனாரிட்டி ஆட்சி என்று கத்திய ஜெயலலிதா, 2011ல் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை கைப்பற்றினார். அதே விஜயகாந்தை எட்டி உதைத்து, செல்லாக் காசாக்கி, அவரின் கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். கருணாநிதியும், விஜயகாந்தின் கல்யாண மண்டபத்தை இடித்ததோடு அல்லாமல், மீதி கட்சிக்காரர்களையும் தன் கட்சி பக்கம் இழுத்துக் கொண்டார்.
இதன் பிறகு ஜெயலலிதா, 2011 முதல், தான் உடல் நலம் குன்றி இறக்கும் வரை முதல்வராக இருந்தார். இந்த கால கட்டத்தில் சசிகலாவும், அவரது குடும்பத்தினரின் ஆதிக்கமும் மிகுந்திருந்தது. அமைச்சர்களையும், கட்சித் தலைவர்களையும் கொத்தடிமைகளாக வைத்ஐ இருந்தனர். கடந்த, 2016 தேர்தலில், தி.மு.க.,வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, மரணத்தால் விடுவிக்கப்பட்டார்; சசிகலா சிறை சென்றார். இதனால் திடீர் முதல்வரானார், இ.பி.எஸ்., அப்போது, சசிகலா பிடியில் இருந்த, அ.தி.மு.க., பழனிசாமி, பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் வந்தது. இதற்கு பின்புலமாக, டில்லி அதிகார மையம் இன்று வரை இருக்கிறது. 2018ல் கருணாநிதி மரணம் அடைந்தார். எந்த அதிகார சக்தியாலும், பண பலத்தாலும் இறைவன் அளித்த வியாதியிலிருந்து, உலகில் உள்ள நவீன மருத்துவ வசதிகளால் கூட காப்பாற்ற முடியாது என்பதற்கு, இந்த இருவரின் மரணம் உதாரணம்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.எழுத்தாளர் மறைந்த ஜெயகாந்தன், 'தி.மு.க., என்பது ஓர் அரசியல் இயக்கம் அல்ல; அது மனித மரியாதைக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நம் கலாசாரத்திற்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவின் அறிகுறி' என்றார். அது உண்மையே.
கடந்த, 1949ல் தன்னிடம் இருந்து பிரிந்து சென்று, தி.மு.க., கட்சியை துவக்கியது பற்றி, ஈ.வெ.ரா., 'நல்லவர்கள், நாணயமானவர்கள், நேர்மையானவர்கள், உண்மையானவர்கள் தவிர, பிற அனைவரும் அந்த கட்சியில் சேரலாம்' என்றார்.
மக்கள், இலவச பொருள்களுக்கும், உழைக்காமல் கிடைக்கும் மானியத்துக்கும், மாதம், 1,000 ரூபாய்க்கும் மனித மரியாதையை இழப்பதால், தமிழகத்தின் சமுதாய வளர்ச்சியும், கலாசாரமும், நாகரிகமும் சீரழிகிறது. வள்ளுவர் இதைப் பற்றி,தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பைத் தரும்என்கிறார்.இதன் பொருள்: ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரை தேர்ந்தெடுப்பது, அவர்களது அடுத்த தலைமுறையினரையும் பெரும் துன்பத்தில் தள்ளிவிடும் என்பதே!
---ஈ.வெ.ரா., விசுவாசி