புதுச்சேரி: பாகூரை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.பாகூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் போட்டி யிடுகிறார். மக்கள் தேவையறிந்து செய்யும் இவரது பிரசார பாணி, தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், பெண்கள், இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.அவர் அளித்த பேட்டி:அரசியல் எனக்கு புதிதல்ல.இதே தொகுதியில் எனது தந்தை ராமநாதன் இரண்டு முறை தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றவர்.எனது சகோதரர் ராதாகிருஷ்ணன் இரண்டு முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர்.என் தந்தையின் மக்கள் சேவையை நான் தொடர வேண்டிய அரசியலுக்கு வந்து தி.மு.க., வேட்பாளராக பாகூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.புதுச்சேரியின் நெற்களஞ்சியமாக உள்ள பாகூர் தொகுதியில் விவசாயத்திற்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது என் நோக்கம். நிலத்தடி நீர் பாதுகாக்க வேண்டும். பாகூர் ஏரியை சிறந்த உயிரியல் சுற்றுலா தளமாக்குவேன். பாகூர் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். பாரபட்சமில்லாத வளர்ச்சி என்பது எனது குறிக்கோள்.பாகூரில் நவீன பஸ் நிலையம் அமைத்துத் தருவேன். இந்த தொகுதியில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நவீன விளையாட்டு பயிற்சி பள்ளி கொண்டு வருவேன். இங்குள்ள மேல் நிலை, உயர் நிலை பள்ளிகளின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.இலவச மனைப்பட்டா பெற்றுத் தரவும், முன் மாதிரியான சுகாதார நிலையங்கள் அமையவும், மகளிர் கல்லுாரி அமைத்துத் தர முயற்சி செய்வேன். அனைத்து சாலைகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க செயல்திட்டம் தீட்டுவேன்.பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வழி செய்வேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பேன். தனியார் தொழிற்பேட்டையை புனரமைத்து புதிய தொழிற் சாலைகள் வர ஏற்பாடு செய்வேன். இணைய வசதியுடன் நுாலகங்கள், மகளிருக்கு புதிய தொழிற் பயிற்சி மையங்களை ஏற்படுத்தித் தருவேன். மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன் வைத்து பல்வேறு புதிய திட்டங்களை தீட்டுவேன்.ஒவ்வொரு மாதமும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி மக்களின் குறைகளை களைவேன். பாகூரில் எம்.எல்.ஏ., அலுவலகம் அமைத்து மக்களை தொடர்ச்சியாக சந்திப்பேன். பாகூர் தொகுதியை புதுச்சேரியின் முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இவற்றை செய்ய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE