புதுடில்லி : விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பானவழக்கில், தவறு செய்த கேரள போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 1994ல், மாலத்தீவைச் சேர்ந்த ரஷீதா என்பவரை, ராக்கெட் இன்ஜின் வரைபடங்களை ரகசியமாக பெற்று, பாகிஸ்தானுக்கு விற்க முயன்ற குற்றச்சாட்டில், கேரள போலீசார் கைது செய்தனர்.ரஷீதாவுக்கு வரைபடங்களை கொடுத்து உதவியதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய, 'கிரயோஜெனிக்' ராக்கெட் என்ஜின் திட்ட இயக்குனர், விஞ்ஞானி நம்பி நாராயணன், 75, துணை இயக்குனர் சசி குமரன், மாலத்தீவைச் சேர்ந்த பவுசியா ஹசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.ஐ., விசாரணையில், குறிப்பிட்ட ராக்கெட் தொழில்நுட்பம் எதுவும், சம்பவம் நடந்ததாக கூறப்படும்போது இல்லை என்பதும், கேரள போலீசார் உள்நோக்கத்துடன் வழக்கை ஜோடித்து, நம்பி நாராயணனை கைது செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த வழக்கில், 'நிரபராதி நம்பி நாராயணனை, சட்ட விரோதமாக, 50 நாட்கள் சிறையில் வைத்து, மன உளைச்சல், கவுரவ பாதிப்புக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக, கேரள அரசு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தவறு செய்த உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, டி.கே.ஜெயின் தலைமையிலான இக்குழு, இரண்டரை ஆண்டுகளாக விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளதால், கேரள முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் நடுக்கத்தில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE