மருத்துவமனையில் பரூக்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, 85, சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானார். வீட்டில் தனிமையில் இருந்த அவரது உடல்நிலையை, தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதற்காக, டாக்டர்கள் பரிந்துரைப்படி, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று, அவர் அனுமதிக்கப்பட்டார்.
18 - 45 வயதினருக்கு தடுப்பூசி
புதுடில்லி: எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் உதய் சங்கர், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கொரோனா தடுப்பூசிகளை, 18 - 45 வயதிற்கு உட்பட்டோருக்கு செலுத்தும் பணிகளை, விரைந்து துவங்க வேண்டும். ஏனெனில், தற்போது அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவோர், இந்த வயதினராக உள்ளனர்' எனக் கூறப்பட்டு உள்ளது.
வேட்பாளர் சுட்டுக்கொலை
கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோரக்பூர் மாவட்டம் நாராயண்பூரில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் பிரிஜேஷ் சிங், 52, நேற்று முன்தினம், பிரசார கூட்டம் முடிந்து வீடு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மூவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் ஒருவர் கைது
ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சியில், கடந்த மாதம் ரயிலில் சென்ற இரு கன்னியாஸ்திரிகள் மீது, சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த இருவரை, சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் அடுத்ததாக, அஜய் சங்கர் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் கூறி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE