ஓமலுார்: ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 70 வயது கடந்தாலும், எம்.ஜி.ஆர்., போல், 'கெட்டப்'பை மாற்றி நடிக்கிறார்,'' என, முதல்வர் பழனிசாமி., பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலுார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர்மணியை ஆதரித்து, முதல்வர்
பழனிசாமி., பேசினார். அப்போது, மழை பெய்ததால், 'நல்ல சகுனம். இயற்கையும், மக்களும் சாதகமாக உள்ளனர்' என்றார்.தொடர்ந்து, அவர் பேசியதாவது:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தந்தை தயவால் பதவிக்கு வந்தவர். மக்கள் கஷ்டம், ஸ்டாலினுக்கு தெரியாது. விவசாயி என்றால் தரம் தாழ்த்தி பேசுவது, கொச்சைப்படுத்தி பேசுவது வழக்கம். அவர், அரச குடும்பத்தில் இருந்து வரவில்லை.கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதுகூட, தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு தரவில்லை. ஸ்டாலினை அவர் நம்பவில்லை. 70 வயது கடந்தாலும், எம்.ஜி.ஆர்., போல்,'கெட்டப்'பை மாற்றி ஸ்டாலின் நடிக்கிறார்.
கடந்த, 1989ல் நானும், ஸ்டாலினும், முதன் முதலாக, சட்டசபை உறுப்பினரானோம். அவருக்கு கிடைத்த பதவியை சரியாக பயன்படுத்தி இருந்தால், முன்னுக்கு வந்திருக்கலாம். குடும்பத்தை
மட்டும்தான் பார்த்தார். மக்களை கவனிக்கவில்லை.அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டர் கூட முன்னுக்கு வரலாம். அ.தி.மு.க., கூட்டணி தலைவர்கள் அனைவரும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். 2010ல் காங்., ஆட்சியில் தான், 'நீட்' கொண்டு வந்தனர். ஜெயலலிதா எதிர்த்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தந்தோம். அடுத்த ஆண்டு, 600 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஏழை மாணவர்களையும்
காப்பாற்றியது அ.தி.மு.க., அரசு தான்.ஜாதி, மத சண்டை இல்லாத மாநிலம் தமிழகம். இது தொடர, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE