பாய துவங்கியது பணம்! சிக்காமல் தப்பும் கட்சியினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பாய துவங்கியது' பணம்! சிக்காமல் தப்பும் கட்சியினர்

Added : ஏப் 03, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பண வினியோகத்தை, வேட்பாளர்கள் துவக்கியுள்ளனர்; 'ரகசியமாக' இதை மேற்கொள்வதால், 'கையும் களவுமாக' சிக்காமல் இருக்கின்றனர். வாக்காளர்களும், இதுகுறித்து 'மூச்சு விடாமல்' இருப்பதால், பண வினியோகம் களை கட்டுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, காங்கயம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க.,
 'பாய துவங்கியது' பணம்! சிக்காமல் தப்பும் கட்சியினர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பண வினியோகத்தை, வேட்பாளர்கள் துவக்கியுள்ளனர்; 'ரகசியமாக' இதை மேற்கொள்வதால், 'கையும் களவுமாக' சிக்காமல் இருக்கின்றனர். வாக்காளர்களும், இதுகுறித்து 'மூச்சு விடாமல்' இருப்பதால், பண வினியோகம் களை கட்டுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, காங்கயம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதர தொகுதிகளில், அ.தி.மு.க., அல்லது தி.மு.க., வேட்பாளர்கள் யாராவது ஒருவர் களத்தில் இருக்கிறார்.பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது. ஞாயிறு, விடுமுறை தினம். வாக்காளர்கள் அனைவரும் வீடுகளில் இருப்பர். உள்ளூர் கட்சிப்பிரமுகர்கள், வீடு, வீடாக சென்று, வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதில் மும்முரம் காட்ட உள்ளனர்.ஆதரவான வாக்காளர்களை, கட்சிப்பிரமுகர்களால், எளிதில் இனம் காண முடியும். அதேசமயம், 'இவர்கள் நமக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்' அல்லது 'இவர்கள் ஓட்டு போடுவார்களா' என்ற எண்ணம் எழுந்தால், அத்தகைய வாக்காளர்களுக்கு, கூடுதல் நேரம் செலவிட்டு, அவர்கள் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று, கட்சி மேலிடங்கள் அறிவுறுத்தியிருக்கின்றன.'பட்டுவாடா' தாமதம்மாவட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள் பெரும்பாலானோர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை, கடந்த தேர்தலில், வழக்கமாக்கினர். இது, வாக்காளர்களுக்கு, இந்த முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இருப்பினும், இந்த முறை, எதிர்பார்த்தது போல, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது என்பது எளிதாக இல்லை.குறிப்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., இருதரப்புமே, கண்கொத்திப் பாம்பாய் எதிரெதிர் அணியினரை கண்காணிக்கின்றனர். தங்களையும் எதிரணி கண்காணிக்கிறது என்பதையும் தெரிந்து வைத்துள்ளனர்.இந்த முறை தேர்தலின்போது, திருப்பூரில்தான், வருமான வரித்துறை, முதலில், தனது கிடுக்கிப்பிடியை மேற்கொண்டது. 'சி-விஜில்' செயலியில் புகார் பதிந்து, நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துவிடும் என்பதால், அதிகாரிகள் உஷாராக உள்ளனர்.தேர்தல் கமிஷனும், வருமான வரித்துறையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதால், இந்த முறை, பணப் பட்டுவாடாவை ஒவ்வொரு கட்டமாக துவங்க முடியவில்லை.இன்றும், நாளையும் இருப்பினும், இன்று மற்றும் நாளை, பணப்பட்டுவாடாவில் கவனம் செலுத்த பிரதான கட்சியினர் துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே உள்ளூர் பிரமுகர்களிடம் வழங்கப்பட்ட பணம் அல்லது கடந்த சில நாட்களுக்குள் வழங்கப்பட்ட பணம், வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது. நேற்றுமுன்தினமும், நேற்றும், பல வாக்காளர்களுக்கு பணம் 'ரகசியமாக' வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு, இருதரப்புமே, பணம் வழங்கியிருக்கிறது.இந்நிலையில், இன்றைக்கு பெரும்பாலான வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தாக வேண்டும்; அல்லது நாளைக்குள்ளாவது முடிக்க வேண்டும் என்று கட்சி பிரமுகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியுள்ள தொகுதி களில், இரு கட்சியினருமே, பணத்தை வாரியிறைக்கின்றன. அதிகபட்சமாக, பத்து முதல் இருபது வீடுகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால், கையும் களவுமாக சிக்காதவாறு, கட்சியினர் உஷாராக உள்ளனர்.இருதரப்பினருமே பணம் வழங்கும் இடங்களில், பரஸ்பரம் புகார் சொல்வதை தவிர்ப்பதால், அதிகாரிகளுக்கு புகார்கள் செல்வதில்லை. மேலும், வாக்காளர்களும், பணம் வழங்குவது தொடர்பாக புகார் அளிப்பதில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X