சென்னை : ''கொளத்துார் தொகுதியில், ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது,'' என, கொளத்துார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிராஜாராம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:சென்னை, கொளத்துாரில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் இருவர் மீது, தி.மு.க., பகுதி செயலர் ஜ.சி.எப்., முரளி தாக்குதல் நடத்தி உள்ளார். தி.மு.க.,வினர், நேற்று முதல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது குறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால், வாங்க மறுக்கின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தால், 'நீதிமன்றம் செல்லுங்கள்' என்கிறார்.கொளத்துாரில், 2011 சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் விதிமுறைகளை மீறி, 30 லட்சம் ரூபாய் அதிகமாகசெலவு செய்தார். இது குறித்து, சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதற்கான அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு, தற்போது மேல் முறையிட்டுக்காக, உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால், இரண்டு மாதம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விபரங்களை, ஸ்டாலின் தன் வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.ஸ்டாலின் வாயைத் திறந்தாலே, பொய் சொல்கிறார். கட்சிக்குதான், அவர் முதல்வர் வேட்பாளர். பொதுமக்களுக்கு, 'ஜோக்கர்'. விரைவில், '2011 தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது' என்று, தீர்ப்பு வெளியாகும். எனவே, இந்த தேர்தலில், அவர் வெற்றி பெற்றாலும், செல்லாததாக கருதப்படும். இதனால்தான், தன் மகனை, சேப்பாக்கம் தொகுதியில் நிற்க வைத்துள்ளார்.மேலும், ஸ்டாலின் குறித்த முக்கியமான விஷயத்தை, இன்று வெளியிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE