சென்னை : 'தி.மு.க., ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; அராஜக ஆட்சி துவங்கும்; தமிழகம் அமளிக்காடாக திகழும்.
எனவே, அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.அவர்களின் அறிக்கை:கடந்த, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெ., அரசு அறிவித்த, மக்கள் நலத் திட்டங்களால், அனைத்து தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளோம். எங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பை, சிறிதும் குறைவின்றி, எங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம். ஜெ., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தி.மு.க., துாண்டுதலின்படி, எண்ணற்ற போராட்டங்கள், பல்வேறு அமைப்புகள் வழியே நடந்தன.
அவற்றை சமாதானமான முறையில் பேசி, அதற்கு தீர்வு கண்டோம். ஆட்சிக்கு, எதிரிகளின் இடையூறு ஒரு புறமும், துரோகிகளின் இடையூறு மறுபுறமும் இருந்தது. இரண்டு துரோகத்தையும் வென்றெடுக்க, தமிழக மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும், தோள் கொடுத்தனர். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை, ஜெ., அரசு வழங்கி இருக்கிறது.தி.மு.க.,வில், தொடர்ந்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல் நடந்து வருகிறது.
அ.தி.மு.க.,வில் அதுபோன்ற நிலை இல்லை. கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்போர் யார் வேண்டுமானாலும், கட்சியிலும், ஆட்சியிலும், பொறுப்புக்கும், பதவிக்கும் வர முடியும். இதுபோன்ற நிலை, தி.மு.க.,வில் இல்லை. தி.மு.க., ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; அராஜக ஆட்சி துவங்கும்; குடும்ப ஆட்சி தலைதுாக்கும்; தமிழகம் அமளிக்காடாக திகழும்; கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது; நிர்வாக சீர்கேடு ஏற்படும்; அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்து காணப்படும்.
எனவே, தமிழக மக்கள், அமைதியான, ஜாதிக் கலவரம் இல்லாத, அனைத்து சமுதாய மக்களும் நிம்மதியுடன் வாழ, அ.தி.மு.க., வுக்கு ஆதரவு கொடுங்கள். கூட்டுறவு வங்கிகளில், ஆறு சவரன் வரை, அடகுவைத்து பெற்ற கடன், தள்ளுபடி செய்யப்படும். அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் பணிச் சுமையை குறைக்க, இலவசமாக, 'அம்மா வாஷிங் மிஷின்' வழங்கப்படும்.தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும், அனைத்து வாக்குறுதிகளையும், முழுமையாக நிறைவேற்றும் அரசாக, ஜெ., அரசு தொடர்ந்து செயல்படும். எனவே, வரும் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஆதரவு அளியுங்கள். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE