நாகப்பட்டினம்:''ரெய்டு வரும் அதிகாரிகள், எங்கள் வீடுகளில் காபி குடித்துவிட்டு, 'டிவி' பார்த்துவிட்டு போகும் போது, நாங்கள் ரெய்டு வந்ததால் உங்களுக்கு, '20' சீட் அதிகம்கிடைக்கும் என சொல்லிவிட்டு செல்கின்றனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் களுக்கு ஓட்டு சேகரித்து, ஸ்டாலின் பேசியதாவது:கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, 'மீனவர்களின் வாழ்வை மேம்படுத்த, இணையம் கிராமத்தில் துறைமுகம் கொண்டு வருவோம்' எனக் கூறியுள்ளார். நான் பல முறை அப்பகுதிக்கு சென்ற போது, 'துறைமுகம் வேண்டாம்' என, மக்கள் கோரிக்கை வைத்தனர். நானும் துறைமுகம் வராது என்று கூறினேன்.
நான் சென்று வந்த பின், அங்கு சென்ற முதல்வர் இ.பி.எஸ்., 'ஸ்டாலின் பொய் சொல்கிறார். அந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வரவேயில்லை' என கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டம், முதல்வருக்கு எப்படி தெரியாமல் போகும். நான் பொய் சொல்கிறேன் என்று, தேர்தலுக்காக முதல்வர் தான் பொய் சொல்கிறார்.
என் மகள் செந்தாமரை வீட்டில் ரெய்டு, சில தினங்களுக்கு முன், திருவண்ணாமலை
சென்றிருந்தபோது நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசில் ரெய்டு, எங்கள் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ரெய்டு என அதிகாரிகளை அனுப்புகின்றனர்.ரெய்டு வரும் அதிகாரிகள், எங்கள் வீடுகளில் காபி குடித்து விட்டு, 'டிவி' பார்த்து விட்டு, போகும் போது, நாங்கள் ரெய்டு வந்ததால் உங்களுக்கு, 20 சீட் அதிகம் கிடைக்கும் என சொல்லி விட்டு செல்கின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் போது, ரெய்டு செய்வது நியாயமா? நாங்களே தவறு செய்திருந்தால் கூட, ஒரு மாதத்திற்கு முன் ரெய்டு செய்திருக்கலாம். அல்லது தேர்தல் முடிந்து ரெய்டு செய்திருக்கலாம். இதையெல்லாம் பார்த்து பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை.
முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலகம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ஆகிய
இடங்களில் ரெய்டு நடத்தலாம். அவர்கள் பயந்து, உங்கள் கால்களில் வந்து விழுவர். நாங்கள் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவர்கள், 'மிசா'வை பார்த்தவர்கள். யாருக்கும் அஞ்ச மாட்டோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
சுங்கச்சாவடிகள்அகற்ற வாக்குறுதி
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னையில் பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்தார். சென்னை சோழிங்கநல்லுார் தொகுதி வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது:முன்பு கொரோனா வந்தபோது, சட்டசபையில் கேட்டேன். அதற்கு முதல்வர், 'இது அம்மா ஆட்சி; கொரோனா வராது' என்றார். வந்த பின், கொரோனா நிவாரணமாக, 5,000 ரூபாய் கொடுங்கள் என்றேன்; 1000 ரூபாய் தான் கொடுத்தார்.
மாநகராட்சி பகுதிக்குள் சுங்கச்சாவடி இருக்கக் கூடாது. அதை பற்றி, அரசு கவலைப்படவில்லை. நாம் மிகப் பெரிய போராட்டம் நடத்தினோம். தி.மு.க., அறிக்கையில், இதை பற்றி கூறியுள்ளோம். எனவே, வெற்றி பெற்றதும், மாநகராட்சிக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.