திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் 'எட்டாத உயரத்துக்கு' பிரச்னைகளும் மலிந்து கிடக்கின்றன. இத்தொகுதி களில், வெற்றி பெறும் வேட்பாளர், இவற்றுக்கு தீர்வு கண்டால், வாக்காளர்கள், அவரை வாழ்த்தி வரவேற்பர்.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு தொகுதிகள் உள்ளன. நாளை மறுநாள் (6ம் தேதி), ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தொகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. வெல்லும் வேட்பாளர், இப்பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.பல்லடம்அண்ணா நகர் துவங்கி, பனப்பாளையம் பிரிவு வரை மேம்பாலம் அமைத்தல், தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்தல், வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்குதல், மின் மயானத்தை விரைவில் கட்டமைத்தல், இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்துதல், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல்.காமநாயக்கன்பாளையம், வெங்கிட்டாபுரம் உட்பட பி.ஏ.பி., திட்டம் இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவை பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறியாளர் பெற்ற கடன் தள்ளுபடி செய்தல், அரசு மானியத்தில் தீவனங்கள் வழங்குதல், காடா துணிக்கென தனிச்சந்தை போன்ற கோரிக்கைகளை தொழில்துறையினர் முன்வைக்கின்றனர்.திருப்பூர் தெற்குமுறையான உள்கட்டமைப்பு வசதியின்மையால், பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கிறது. அமைக்கப்பட்ட மேம்பாலமோ பயனுள்ளதாக இல்லை. பல்லாங்குழி சாலைகள், அள்ளப்படாத குப்பை என அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் வேகமாக நடைபெற்றாலும், குடிநீர், போக்குவரத்து நெரிசல் உட்பட பொதுமக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
திருப்பூர் வடக்குநான்காவது குடிநீர் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். திருப்பூர் தெற்கில் உள்ள பிரச்னைகளே, வடக்கிலும் இருக்கின்றன. சுகாதாரம், குடிநீர் பிரச்னை பல இடங்களில், மேலோங்கி இருக்கின்றன.கிராமங்கள் அதிகம் நிறைந்த தொகுதி. அதேசமயம் நகரத்துக்கு இணையாய் வளர்ச்சி காண்பதால், அடிப்படை வசதிகள் தொலைநோக்குணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் தேவை.அவிநாசிஅவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுவதாக கூறப்படுவதெல்லாம், பேச்சளவிலேயே உள்ளது.கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை; பஸ் வசதியை அதிகரிக்க வேண்டும். சேவூரை தனி ஒன்றியமாக்க வேண்டும். திருமுருகன்பூண்டியில் சிற்பத்தொழில் மேம்படுத்த நடவடிக்கைகள் தேவை. தொகுதி முழுக்க குடிநீர் வினியோகத்தில் குளறுபடி உள்ளது.தாராபுரம்அமராவதி ஆறு, தாராபுரத்தின் அடையாளம். இதற்கு நீராதாரமாக உள்ள அமராவதி அணை துார்வாரப்பட வேண்டும். விவசாயத்தொழில் அருகி வருகிறது. விளைநிலங்கள், வீட்டுமனைகளாக உருவாகி கொண்டிருக்கின்றன.
தட்டுப்பாடற்ற குடிநீர், இங்கு, இன்னும் கானல் நீர்தான். அரசு மருத்துவ மனையில் உரிய வசதி இல்லை; தரம் உயர்த்தப்படுதல் கட்டாயம். அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கிராமங்களில், அடிப்படை வசதிகள் இன்மை, போதுமான பஸ் வசதியை ஏற்படுத்துதல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.
காங்கயம்வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். பி.ஏ.பி., நீர் போதுமான அளவு வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய், கொப்பரை உற்பத்தி ஆலைகளுக்கு சலுகைகள் தேவை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். சுற்றுச்சாலை அமைக்கப்பட வேண்டும்.
இப்பகுதி சந்தைகளில், அடிப்படை வசதிகள் தேவை.அனைத்து பகுதிகளிலும், குடிநீர், சாக்கடை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்போகும், புதிய எம்.எல்.ஏ.,க்கள் யாரோ, அவரையே 'நிஜ' வெற்றியாளராக மக்கள் வாழ்த்தி வரவேற்பர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE