தியாகதுருகம்: ரிஷிவந்தியம் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் பிரபு, நேற்று திருக்கோவிலுார் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.அப்போது அவர் பேசியதாவது;ரிஷிவந்தியம் தொகுதி, விவசாயம் தொழில் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. மனிதவளம் அதிகமாக உள்ளதால், படித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தருவதோடு சுய தொழில் செய்வதற்கு உரிய உதவிகள் செய்துதரப்படும்.இப்பகுதியில், சுற்று சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை அமைத்து அதில், வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன்.விளைநிலங்களில் மாற்று பயிர்களை ஊக்குவித்து அதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்துவேன். விவசாயம் சார்ந்து பால் உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டுவதற்கு தேவைான கறவை மாடுகள் வாங்க கடனுதவி மற்றும் அவைகளுக்கு தேவையான கால்நடை மருத்துவ வசதிகளுக்கு மருத்துவமனை அமைத்து கொடுப்பேன்.மக்கள் என்னை தேர்வு செய்தால், எனது தந்தை சிவராஜை போல் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.இதில், அ.ம.மு.க., மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் லஷ்மிகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணமூர்த்தி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE