சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சளை, அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.சின்னசேலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கனியாமூர், ராயர்பாளையம், ஈசாந்தை, கல்லாநத்தம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஓராண்டு பயிரான மஞ்சள், விவசாயிகளின் முக்கிய பணப்பயிராகும். சாகுபடி துவங்கியதில் இருந்து, அறுவடை வரை மஞ்சளை மிக கவனத்துடனே விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.ஆண்டுதோறும் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்து, மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். தற்போது மஞ்சள் அறுவடை பணிகள் துவங்கியுள்ளதால், மஞ்சளின் தோகையை அறுத்து பின்னர் நிலத்திலிருந்து கிழங்கை வெட்டியெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளது.அதன்பின், மஞ்சளை வேகவைத்து மெருகூட்டி பின், ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும்.சில ஆண்டுகளாக மஞ்சளுக்கு சரியான விலை கிடைக்காமல் தவித்த விவசாயிகளுக்கு, தற்போது, ஓரளவு கட்டுப்படியான விலை கிடைக்கிறது. ஒரு குவிண்டால் மஞ்சள், சராசரியாக, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.எனவே, சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், இப்பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE