திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளில், 1,110 மையங்களில், 3,343 ஓட்டுச்சாவடிகளில், தேர்தல் முன்னேற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது.ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, வாக்காளர் பட்டியல், துணை பட்டியல், கையேடு, விளக்க பதிவேடு, பேனாக்கள், நுால்கண்டு, பிளேடு, ரப்பர், அரக்கு, கத்தி, துணி, விரலில் வைக்கும் மை, அதற்கான பிளாஸ்டிக் குப்பி என, 21 வகையான பொருட்கள் தயார்செய்து 'பேக்கிங்' செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர் விவரம் அடங்கிய போஸ்டர், ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளின் பெயர் அடங்கிய போஸ்டர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர் ஏஜன்டுகளுக்கான 'பேட்ஜ்',பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கண்டறியும், 'பிரெய்லி வேட்பாளர் பட்டியல்' போன்ற பொருட்கள், ஓட்டுச்சாவடிக்கு தயாராகி வருகின்றன.கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பொருட்களை, ஓட்டுச்சாவடிக்கு தனித்தனியாக, பேக்கிங் செய்து, அதை கோணிப்பையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.மண்டல தேர்தல் அலுவலர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக, பயன்பாடின்றி இருப்பதால், முழுவதுமாக துாய்மைப்படுத்தி, தண்ணீரால் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.உள்ளாட்சி அமைப்புகள் மூலம், ஓட்டுச்சாவடியில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு, ரோட்டில் சுண்ணாம்பு மூலம் 'மார்க்' செய்யும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடியை சுற்றியுள்ள கட்சி சின்னங்கள் அழிக்கும் பணியும் துவங்கிவிட்டது.இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'ஓட்டுச்சாவடிக்கு தேவையான மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது.கலெக்டர் உத்தரவுப்படி, 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் முன்னதாக சாமியானா நிழல் பந்தல் அமைத்து, தேவையான இருக்கைகளும் போட்டு வைக்கப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE