புதுடில்லி : ஆள்கடத்தல் தொடர்பாக, பஞ்சாப் அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை, விவசாயிகள் போராட்டத்துடன் இணைத்து செய்திகள் வெளியிடப் பட்டதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் தலைமை செயலருக்கு, சமீபத்தில் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:பீஹார் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த, 58 பேர், நல்ல சம்பளம் கொடுப்பதாக கூறி, பஞ்சாப் எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள், மோசமான சூழ்நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை எல்லை பாதுகாப்பு படை மீட்டுள்ளது.
இது போன்ற ஆள் கடத்தல் நடவடிக்கைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.இதையடுத்து, உத்தர பிரதேசம், பீஹாரிலிருந்து ஆட்களை கடத்தி வந்து, டில்லி - பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஈடுபட வைக்கப்பட்டுள்ளதாக, பஞ்சாப் அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஆள் கடத்தல் பற்றி, பஞ்சாப் அரசுக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகள் போராட்டத்தை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. 'இல்லாத ஒரு தகவலை எழுதியுள்ளதாக கூறி, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது' என, கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE