தேர்தல் நெருங்குவதால், மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நுாறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த தேவபாலன், 32, என்பவர், விழிப்புணர்வு அட்டையை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொள்வது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.பனியன் கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டே கிடைக்கும் நேரங்களில், அம்மாபாளையம், குமார் நகர் என சுற்று வட்டாரத்தில், 4 நாட்களில், 20 கி.மீ., வரை பயணம் மேற்கொண்டு, தனிப்பட்ட முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இது குறித்து அவர் கூறுகையில், 'மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல், உலகம் வெப்ப மயமாதல் பற்றி ஒவ்வொருவரிடம் தனிப்பட்ட முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். இம்முறை வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி வருகிறேன். வேலை முடிந்த பின், 7:00 ல் இருந்து, 8:30 மணி நேரம் போர்டை பிடித்து கொண்டு நடப்பேன். 'கூச்சமாக இல்லையா'னு பலர் கேட்பதுண்டு. 'நல்லது நாலு பேருக்கு எடுத்து சொல்ல எதற்கு வெட்கப்படணும்?' என்றார்.'இந்திய இயற்கை வளங்களை பாதுகாத்து, இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்தால், ஈராயிரம் ஆண்டுகள் இன்பம் பல பெற்று வாழலாம். இல்லம், உள்ளம் குளிர இலவசம் தேடி வாக்களித்தால் உன் மண் வாசனையை கூட சுவாசிக்க முடியாது. விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் காற்றை!வாய்க்கு வந்த வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு வாழத்துடிக்கும் எங்கள் மீது வரி சுமத்தி விடாதீர்கள்.வாக்களிக்கிறோம்! வாழவிடுங்கள் தமிழ்நாட்டில்! வாக்கு கேட்டு வாசல் தேடி வரவேண்டாம்; வாக்குசாவடி தேடி வாய்ப்பளிக்க நாங்கள் வருகிறோம், என, வாசகத்தை பொதுமக்களிடம் கூறியபடியே விடை பெற்றார் தேவபாலன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE