திருப்பூர்:சில மாதங்களாக, கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினமும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று, உறுதி செய்யப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், துவக்கத்தில், 10 முதல், 15 வரை மட்டுமே இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என எதிர்பார்த்த நிலையில், சில வாரங்களுக்கு முன், 20ல் இருந்து, 30 வரை அதிகரித்தது.தற்போது, அதுவே இரட்டிப்பாக எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.நேற்று முன்தினம் ஒரே நாளில், 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 19 ஆயிரத்து, 465, 18 ஆயிரத்து, 801 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 49 பெண்கள் உட்பட 226 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒரு பகுதியில், மூன்று பேர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அப்பகுதியை அடைத்து, அவ்வழியாக மக்கள் நடமாட்டத்தை தடுக்க, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது, அம்மாபாளையம் பாரதி நகர் மற்றும் கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், வீதிகள் அடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில், முக கவசம் அணியாமல் மக்கள் நடமாடுவது, தேர்தல் நேரத்தில், கூட்டங்களில் கலந்துகொள்வது, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமல், கும்பல் சேர்வது என இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், கொரோனா இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். இதுபோல பல பகுதிகளை அடைத்து, மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டிய சூழல், ஏற்படும்.சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தியும், கொரோனா தொற்று பாதிக்காமல் தவிர்க்க, விழிப்புணர்வில் மக்கள் காட்டும் அலட்சியம், 'எடுத்து சொன்னால் புரியாது, தொற்றால் பாதிக்கப்பட்டு, பட்டால்தான் தெரியும்,' என்ற மனநிலையையே வெளிப்படுத்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE