'இவர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ப்பதற்குள், நமக்கு பாதி உயிர் போய் விடும் போலிருக்கிறது' என, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அந்த மாநிலத்தின் முக்கிய காங்., பிரமுகரான சச்சின் பைலட் ஆகியோர் பற்றி, கோபத்துடன் பேசுகின்றனர், காங்., மேலிட பிரதிநிதிகள்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. கெலாட், முதல்வர் பதவியில் அமர்ந்ததில் இருந்தே, சச்சின் பைலட், அவருடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் தகராறு பெரிதாகி, சச்சின் பைலட், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிக்க தயாரானார். ராகுலும், பிரியங்காவும், அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.
ஆனாலும், கெலாட்டுக்கும், சச்சினுக்கும் இடையேயான தகராறு, தொடர்ந்தபடி தான் இருக்கிறது. ராஜஸ்தானில், விரைவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கஉள்ளது. இதில், 'கெலாட்டும், சச்சினும் இணைந்து பிரசாரம் செய்தால், எளிதாக வெற்றி பெறலாம்' என, காங்., நிர்வாகிகள் கருதினர். இதையடுத்து, மேலிட தலைவர்கள், இருவரையும் ஒன்றாக பிரசாரம் செய்ய வைக்க, பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களுக்கு இருவரும் இணைந்து வந்தாலும், ஆளுக்கு ஒரு பக்கம், முகத்தை திருப்பியபடி அமர்ந்திருக்கின்றனர். இதைப் பார்த்த காங்., தொண்டர்கள், 'இருவரும், இப்படி எலியும், பூனையுமாக மேடையில் அமர்ந்திருப்பதற்கு பதில், பிரசாரத்துக்கு வராமலே இருந்திருக்கலாம்' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.
இது சரிப்பட்டு வராது!
'இவ்வளவு பிடிவாதமாக இருந்தால், எப்படி அரசியல் செய்ய முடியும்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலைப் பற்றி பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள். காங்கிரசுக்கு, தற்போது முழுநேர தலைவர் இல்லை. சோனியா, தற்காலிக தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால் அதிருப்தி அடந்த, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியாவுக்கு கடிதம் எழுதினார்.
'ஒரு மிகப் பெரிய அரசியல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் இருப்பது, அதன் எதிர் காலத்துக்கு நல்லது அல்ல. விரைவில் தேர்தல் நடத்தி, முழுநேர தலைவரை நியமியுங்கள்' என, அதில் கூறியிருந்தனர். குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள், இந்த கடிதத்தை எழுதியிருந்தனர்; இது, சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும், நாட்கள் செல்ல செல்ல, சோனியாவின் கோபம் குறைந்தது.
கட்சியின் மூத்த தலைவரான அம்பிகா சோனியை, இதற்காக நியமித்து, அதிருப்தி தலைவர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். இதையறிந்த ராகுல், 'பேச்சு நடத்த வேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும்' என கூறி, இறங்கி வர மறுத்து விட்டார். 'ராகுலுக்கு, எங்கள் மீதான கோபம், இன்னும் குறையவில்லை. ஆனால், அரசியலில் இது சரிப்பட்டு வராது. பிடிவாதத்தை தளர்த்தாவிட்டால், எதிர்வரும் தேர்தல்களில் மண்ணை கவ்வ வேண்டியது தான்' என, புலம்புகின்றனர், அதிருப்தி தலைவர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE