அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி: சசிகலாவை எதற்கு எதிர்க்கிறேன் என தெரியுமா... அன்றைக்கு என்னை எதிர்த்து வந்தவர் அவர். அமைச்சராக இருக்கக் கூடாது என, ஜெ.,யிடம் சண்டை போட்டவர். எனக்கும் சசிகலாவுக்கும் கடும் போட்டி இருந்தது. அந்த போட்டியில் அவர் ஜெயித்துவிட்டார். 'சீட்' கொடுத்த, ஜெ., என் பக்கம் இருந்தார். அவர் என்னை கைவிடவில்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்று விடுவேன் என்று நினைத்த சசிகலா, என்னை வேப்பனஹள்ளியிலிருந்து பென்னாகரம் தொகுதிக்கு மாற்றினார்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள அந்த முதிய பெண், அ.தி.மு.க.,வையும், ஜெ.,வையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ என்ற, 'டவுட்' வருகிறது. மேலும், ஜெ.,வை எதிர்த்து செயல்படக் கூடிய வகையில் அதிகாரம் பெற்றிருந்தாரோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: அரசியல் நோக்கங்களுக்காக, வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. சோதனை நடத்தினால், ஸ்டாலின், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைவர்; தளர்ந்து போவர் என, மத்திய அரசு தவறான கணக்கு போட்டுள்ளது. இது போன்ற பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அல்ல, தி.மு.க., 'மிசா' போன்ற கொடூர சட்டங்களையே பார்த்தவர் ஸ்டாலின்.
'டவுட்' தனபாலு: மிசாவை ஸ்டாலின் மட்டும் தான் சந்தித்தாரா... காங்., முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த அந்த சட்டத்தால், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்; பல கொடுமைகளுக்கு ஆளாகினர். அதை மறைத்து, மிசா சட்டம், ஸ்டாலினுக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது போல பேசுவது, வரலாற்றை திரிக்கும் முயற்சியோ என்ற, 'டவுட்' வருகிறது!
நடிகர் கமல் கட்சி வேட்பாளர், நடிகை ஸ்ரீபிரியா: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல், சினிமா படங்களில் நடிக்கும் போதே, உயிரைக் கொடுத்து நடிப்பவர். இப்போது அவர், இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் இந்த தொகுதியை, நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவார்.'
டவுட்' தனபாலு: சினிமா படங்களில் நடிப்பதால், புகழ், பணம், செல்வாக்கு போன்றவை நிறைய வருகின்றன. அதனால் அவர், படங்களில் நடிக்கும் போது, உயிரைக் கொடுத்து நடிப்பார். ஆனால், நேர்மையான அரசியலில், பத்து காசு கிடைக்காதே. ஏற்கனவே, அரசியலுக்கு வந்ததால், இத்தனை கோடி வருமானம் போச்சு என, அவர் புலம்பி வருகிறார். வெற்றி பெற்றுவிட்டால், இன்னமும் கூடுதலாக வருமானம் போய்விடுமே; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: என் மகள் வீட்டில், வருமான வரித்துறையினர், 30 பேர் புகுந்து சோதனை நடத்துகின்றனர். வருமான வரித்துறையை வைத்து, அ.தி.மு.க., தலைவர்களை மிரட்டியது போல, என்னை மிரட்ட முடியாது. வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்சுபவன் நானல்ல. நான், 'மிசா' கொடுமைகளை கூட அனுபவித்தவன். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்.
'டவுட்' தனபாலு: 'மிசா'வில் உங்களை 'உள்ளே' போட்டது யார்? அவங்களோட இப்ப கூட்டணி வச்சு தான் கரை சேர வேண்டி இருக்கு... அதை விடுங்க... வரித் துறையினர் என்ன, உங்க மகள் வீட்டுல அமர்ந்து, கால் மேலே கால் போட்டு காப்பி குடிக்கணும்ன்னு ஆசையா படுவாங்க... நீங்க பேசுறது வீரப் பேச்சு அல்ல... பயத்துல பேசுற பேச்சுன்னு, மக்களுக்கு, 'டவுட்' இல்லாம தெரியும்!lll
தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம்.,: தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் செய்த துரோகத்தின் பலனாகத் தான், கடந்த பத்தாண்டுகளாக, தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, வனவாசத்தை அனுபவித்து வருகின்றன. தமிழக மக்கள், தி.மு.க.,வை கைவிட்டு விட்டனர்; காங்கிரசை எப்போதோ கைகழுவி விட்டனர்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், தி.மு.க.,வும், காங்கிரசும் இனிமேல் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாதோ என்ற, 'டவுட்' வருகிறது. மேலும், தமிழினத்திற்கும், தமிழர்களுக்கும் அவ்விரு கட்சிகளும் துரோகம் செய்தனர் என்கிறீர்களே; அவை துரோகம் செய்யும் வரை, தமிழர்கள் அதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தனரோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!
பிரதமர் மோடி: தி.மு.க.,வினரும், காங்கிரசாரும், எதுவும் செய்யாமல், பொய் சொல்வதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். ஏனெனில், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை வேண்டும் என்பதற்காக எதுவுமே செய்யாத அவர்கள், இப்போது, பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு உலகத்தரத்தில் தரமான மருத்துவ வசதி அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தே தீரும்; அதில் எந்த மாற்றமும் இல்லை.
'டவுட்' தனபாலு: தி.மு.க.,வினரையும், காங்கிரசாரையும் சாடும் பிரதமர் மோடி, மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் குறிப்பிட்ட காலத்தில் கொண்டு வர முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்படியோ, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை பிரதமர் எழுப்பியுள்ளதால், அது, தமிழகத்தில், பா.ஜ.,வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE