காரைக்குடி : ''-ஊழலில் ஊறித்திளைத்த காங்., தி.மு.க., கட்சிகளை நாட்டை விட்டு ஒழிக்க வேண்டும்'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி., நட்டா பேசினார்.
காரைக்குடி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்த ஜே.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்தை நாங்கள் மதிக்கிறோம். உலகில் தமிழ் பழமையான, தொன்மையான மொழி என்பதில் பெருமை கொள்கிறோம். ஐ.நா., சபையில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர், வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி பேசினார். நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை, இந்தியாவின் தேசிய நீரோட்டத்துடன் இணைக்க அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி முயற்சிக்கிறது. இதனால் தி.மு.க., காங்., கூட்டணியை 2011, 2016 தேர்தல்களில் தோற்கடித்தது போல் மூன்றாவது முறையாகவும் தோல்வியடைய செய்ய வேண்டும். தி.மு.க., காங்., ஊழலில் ஊறித்திளைத்த கட்சிகள். 2ஜி என்பது மாறன் குடும்பத்தையும், 3ஜி என்பது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரையும், 4ஜி என்பது காங்.,கில் நேரு முதல் தற்போதைய காந்தி குடும்பத்தையும் குறிக்கிறது.இவர்கள் நம்மை மதவெறி சக்தி என்கின்றனர். ஆனால், காங்., கட்சியோ புத்தி ரீதியாக திவால் ஆகிவிட்டது.
கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்., கூட்டணி அமைத்துள்ளது. அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மதவெறி கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு நம்மை மதவாத கூட்டணி என்கிறது. இவர்கள் இந்த நாட்டைவிட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.காங்., கட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். இதனை எதிர்த்து தி.மு.க., கத்தி கொண்டே இருந்தது. பிரதமர் மோடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினார். காங்., ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களை அழித்தனர்.
அந்த பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே பிரதமர் மோடி மட்டுமே. பாதிரியார் அலெக்சிஸ் ஏமனுக்கு கடத்தி சென்றபோது, அவரை பத்திரமாக மீட்டு கொடுத்தது மோடி அரசு தான். கருப்பர் கூட்டம், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய போது தி.மு.க., கண்டிக்கவில்லை.மத்திய அரசில் நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முதல் பெண் நிர்மலா சீதாராமன். ரயில்வே பாதைகளை மேம்படுத்தவும், மின்மயமாக்கவும் ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டுத்தொழிலுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.காரைக்குடியில் போட்டியிடும் ராஜா தேசிய செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றியவர். உற்சாகம் தரும் விதமாக அவர் இங்கு, போட்டியிடுகிறார். அவரை உயர்த்திட வேண்டும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து ஊழல் கட்சிகளான காங்., தி.மு.க.,வை விரட்டி அடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE