''ஒவ்வொரு கிராமத்துக்கும் ஐந்து முறையாவது சென்று, மக்களை சந்தித்து, குறைகளை தீர்த்துள்ளேன். மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்வர்,'' என, சூலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி கூறினார்.கடந்த இடைத்தேர்தலில், அதிகமாக செலவு செய்ததால், மீண்டும் போட்டியிட 'சீட்' கிடைத்ததா?இல்லை. எம்.எல்.ஏ.,வாக இருந்த இரு ஆண்டுகளில், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். கட்சியினர் மத்தியில் வரவேற்பு இருந்தது. 10 மாதங்கள், 'கொரோனா' தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அதனால், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.சட்டசபையில் என்ன பேசியிருக்கிறீர்கள்? தொகுதிக்கு என்ன வசதிகள் செய்துள்ளீர்கள்?நொய்யல் சீரமைப்பு குறித்து பேசினேன். அதற்கு, ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு -- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரினேன்; குழு அமைக்கப்பட்டு, கேரள அரசுடன் பேச்சு நடக்கிறது. சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 3.5 கோடி நிதி பெற்று தந்துள்ளேன்.சுல்தான்பேட்டை மேற்குப்பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கவில்லையே?அப்பகுதியில் உள்ள, 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பலன்பெறும் வகையில், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சூலுாரில், உங்கள் கட்சிக்குள் கோஷ்டிகள் அதிகமாக இருப்பதால், உங்களுக்கு 'சீட்' கிடைத்ததா?கட்சியில் கோஷ்டிகள் இல்லை. எனக்கு 'சீட்' கொடுக்க வேண்டும் என, பல நிர்வாகிகள் தலைமைக்கு பணம் கட்டினர். அதிலிருந்தே, எங்கள் ஒற்றுமையை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் மகனின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதே?தவறான குற்றச்சாட்டு. அவர், எதிலும் தலையிடுவது இல்லை.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், உங்கள் சகோதரி உள்ளிட்ட சில அ.தி.மு.க., ஊராட்சி தலைவர்கள் தி.மு.க., வுக்கு தாவியுள்ளார்களே?அவர்கள் கட்சியில் இருந்த கருப்பு ஆடுகள். அவர்கள் சென்றதால், எந்த இழப்பும் இல்லை. விசுவாசமானவர்களால், கட்சி மேலும் வளர்ச்சியடையும்.முதல்வர் வாக்குறுதி அளித்த விசைத்தறி கடன் தள்ளுபடி என்னாச்சு?விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்த முதல்வர், இதையும் செய்வார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளதால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, கடன் வாங்கி செலவு செய்வதாக தகவல் வருகிறதே, உண்மையா?பூர்வீக சொத்தாக, 60 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. அதில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்கிறேன். நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்வதும் உண்டு.மீண்டும் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்ய திட்டம்?ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை கொடுப்பேன். சூலுார், பல்லடம் தொகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஜவுளி சந்தை அமைக்கவும், பாப்பம்பட்டி பிரிவில் மேம்பாலம், சூலுாரில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் துவக்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும், சூலுாரில் கலை அறிவியல் கல்லுாரி துவக்கவும் நடவடிக்கை எடுப்பேன். கருமத்தம்பட்டியில் மேல்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டையில், கொப்பரை கொள்முதல் சந்தை அமைப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE