'ரொம்ப ஆண்டு காலமாவே, முதல்வர் ஆக வேண்டும்ங்கிற கனவுல தான், ஐ.ஏ.எஸ்., பதவியையே உதறிட்டு கட்சி ஆரம்பிச்சீங்கன்னு, உங்களுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்.,எல்லாரும் சொல்றாங்களே...' என, கூறத் தோன்றும் வகையில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேச்சு: இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்பு கொண்டு, தன் சார்பாக, முதல்வர் வேட்பாளராக என்னை அறிவிக்கப் போவதாக கூறினார். அதில் நான் நாட்டம் காண்பிக்கவில்லை.
.'சுஷ்மா சுவராஜின் மகளா, கொக்கா; சும்மா கேட்டுவிட்டு போய் விட மாட்டோம்...' என்பதை தெளிவாக உணர்த்திய, மறைந்த, பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி அறிக்கை: உங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக, என் தாய் குறித்தும், 'பா.ஜ., என் தாயை கைவிட்டு விட்டது; கட்சி கொடுத்த அழுத்தத்தால் தான் அவர் இறந்தார்' என்றும், வாய்க்கு வந்தபடி பேசுவதை தவிர்க்க வேண்டுகிறேன். உங்கள் பேச்சில் உண்மையில்லை; பா.ஜ., எங்களுக்கு எவ்வளவோ செய்துள்ளது.
'உங்கள் கட்சியும், கூட்டணியும் தான், தமிழக மக்களுக்கு பயனளிக்காத; வெத்துவேட்டு கூட்டணி என்கின்றனரே, அ.தி.மு.க.,வினர்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு:
பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., வைத்துள்ள கூட்டணி, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு வேண்டுமானால் பலனளிக்குமே தவிர, மாநில மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை.
'இவ்விரண்டும் உங்கள் விருப்பம். உங்களை தலை துாக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான், பா.ம.க.,வின் விருப்பம்...' என, பதிலடி கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு: அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க., ஜாதிவெறியை துாண்டி வருகிறது; பா.ஜ., மத வெறியை துாண்டி வருகிறது. இந்த கட்சிகளை தலையெடுக்க விடாமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.
'அடுத்த முறை பேசும் போது, 'ஹிந்திக்காரர்கள் சாப்பிடும், சப்பாத்தி, பூரி, புல்கா, ஷவர்மா, கபாப், தந்துாரியை தி.மு.க.,வினர் சாப்பிடலாமா' என, கேட்பீர்கள் போலிருக்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு: ஹிந்தியை எதிர்க்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஹிந்தி பேசும் பிரஷாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து எப்படியும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்கிறார். லோக்சபா தேர்தலில், 38 இடங்களில் வெற்றி பெற்றீர்கள்; என்ன செய்தீர்கள்?
'எல்லாரும் சொல்வது இதைத் தான்... கொஞ்சம் மாற்றி, 'மானே, தேனே' போன்ற வார்த்தைகளையும் சேர்த்து சொன்னால், குணா பட பாடல் போல, மக்கள் மனதில் நிற்குமே...' என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல் பேச்சு: நான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதன்மை தொகுதியாக, ஏன், நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.
'ஆட்சிக்கு வரப் போவது இல்லை; அதனால், அடித்து விட வேண்டியது தானே...' என, சிரித்த படியே கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேச்சு: நாங்கள் ஆட்சிக்கு வந்தால், போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்படும். பெண் போலீசார் மட்டுமே கொண்ட தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்படும்.
'மத்தியில், பா.ஜ., ஆளும், எட்டாண்டுகளாக அவ்வாறு ஆகவில்லையே... புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டாம்...' என, காட்டமாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் 'பொலிட் பீரோ' உறுப்பினர் பிரகாஷ் காரத் பேச்சு: இந்தியாவை, ஹிந்து நாடாக்க வேண்டும் என்ற கொள்கையை உடைய, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சொல்படி நடக்கிறது, மத்தியில் ஆளும் பா.ஜ., இவர்களின் சதித் திட்டத்தால், சிறுபான்மையின மக்கள், இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக மாறி விடுவர்.
'கடந்த, 27 ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் உங்களுக்கு, இந்த தேர்தலில் ஏற்பட்டது போன்ற அவமரியாதை, எந்த தேர்தலிலும் நடக்கவில்லை. முதலில் அதை சரி செய்யுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்.
'தமிழக மக்கள் செய்த தேர்தல் பாவம் தான், உங்களைப் போன்றோர் எல்லாம் பிரசாரம் செய்வது...' என, ஜாலியாக கூறத் தோன்றும் வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நடிகை நமிதா பேச்சு: ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர் தரப் போகுது, தமில்நாடு. அதை வெச்சு, எல்லாரும் நல்லா பிரியாணி பண்ணி சாப்பிடு. செரியா... வெஜிடபிள் பிர்யாணி செஞ்சா, நம்மளுக்கு கொடுத்து, சாப்பிடச் சொல்லு.
'அப்படியே, 'உல்டா'வாக சொல்கிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணைப் பொதுச்செயலர் நடிகை ராதிகா பேச்சு: மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக, அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என பொய் வாக்குறுதிகளை அளிக்கும் ஆட்கள் அல்ல நாங்கள். அதுபோல, ஓட்டுக்காக, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தலைகாட்டும் அரசியல்வாதியும் அல்ல.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE