''எ ன்னை தேடி வருவோருக்கு முடிந்தளவு உதவி செய்வது, ஏற்கனவே தேர்தலில் நின்ற அனுபவம், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு வெற்றியை தேடித்தரும்,'' என, சூலுார் தொகுதி கொ.ம.தே.க., வேட்பாளர் 'பிரீமியர்' செல்வம் கூறினார்.அவரளித்த பேட்டி:கடந்த, 2011ல் சூலுார் தொகுதியில், கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் போட்டியிட்டபோது இருந்த எழுச்சி, தற்போது உள்ளதா?அன்றைய காலகட்டத்தை விட, தற்போது அதிக எழுச்சி இருக்கிறது.கொ.ம.தே.க., போட்டி என்றதும், அ.தி.மு.க., வெற்றி உறுதி என்கிறார்களே, ஏன்?அப்படியில்லை. தி.மு.க., - காங்., - கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள், எங்கள் கூட்டணியில் உள்ளன. அவர்களின் கடுமையான ஒதுதுழைப்போடு வெற்றி பெறுவது உறுதி.சூலுார் தொகுதியை விரும்பி கேட்டீர்களா அல்லது திணிக்கப்பட்டதா?நாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளின் பட்டியலில் சூலுாரும் இருந்தது. அதனால், விரும்பித்தான் பெற்றோமே தவிர, அவர்கள் திணிக்கவில்லை.கூட்டணி இல்லை என்றால், என்ன செய்திருப்பீர்கள்?கூட்டணி தான் திருப்தியாக அமைந்துள்ளதே. அதனால், இந்த கேள்விக்கே இடமில்லை.கொ.ம.தே.க.,வில் இருந்து கொண்டு, தி.மு.க., துண்டுடன், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்பது நெருடலாக இல்லையா?நெருடலுக்கு இடமில்லை. கடந்த லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் எங்கள் வேட்பாளர் சின்னராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.சூலுார் என்றால் நீங்கள் தான் வேட்பாளரா? வேறு யாரும் 'சீட்' கேட்கவில்லையா?எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் 'சீட்' கேட்டிருந்தனர். ஏற்கனவே போட்டியிட்ட அனுபவம் இருந்ததால், எனக்கு வாய்ப்பு கிடைத்தது.உங்கள் சமுதாய மக்களின் ஓட்டே, உங்களுக்கு முழுமையாக கிடைக்காது என்கிறார்களே?அப்படியில்லை. எங்கள் கட்சி எம்.பி., சின்ராஜின் செயல்பாடுகள், எளிமையான அணுகுமுறை எங்கள் சமுதாய மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், சமுதாய மக்களின் ஓட்டு சிதறாமல் இம்முறை எங்களுக்கு கிடைக்கும்.தேர்தல் செலவுக்கான பணத்துக்கு என்ன செய்கிறீர்கள்?கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்களாகவே செலவு செய்கிறார்கள்.தொகுதியை மேம்படுத்த என்ன 'பிளான்' வைத்திருக்கிறீர்கள்?விசைத்தறியும், விவசாயமும் தொகுதியின் பிரதான தொழில்களாக உள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களை விற்க, சோமனுாரில் ஜவுளி சந்தை கொண்டு வருவேன். விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு கிடைக்க ஏற்பாடு செய்வேன். தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்துவேன். குளம், குட்டைகளை துார்வார நடவடிக்கை எடுப்பேன். கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர பாடுபடுவேன்.உங்களுக்கு ஏன் ஓட்டளிக்க வேண்டும்? அதற்கு ஏதாவது ஒரு காரணத்தை மட்டும் கூறுங்கள்?நான் லஞ்சம் வாங்க மாட்டேன். ஊழல் செய்ய மாட்டேன். அனைத்து மக்களும் என்னை எளிதில் அணுகலாம். பிரச்னைகளை தீர்க்க முதல் ஆளாய் நிற்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE