''மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை செங்கல் சூளைகள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. பழங்குடி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது,'' என்கிறார், நாவலாசிரியர் மேதில் சுதாகரன்.ஆனைகட்டி, வடக்கலுார் பகுதியில், 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர் மேதில் சுதாகரன். சுற்றுச்சூழல் மற்றும் சமூகப்பணியில் ஆர்வம் கொண்ட இவர், ஆனைகட்டி பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு என, ஒரு இலவச பள்ளியை நடத்தி வருகிறார். இப்பள்ளியில், 40 பழங்குடி குழந்தைகள் இலவசமாக படித்து வருகின்றனர்.இவர், அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியும், மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு அழிக்கப்படுவதை மையமாக வைத்தும், 'சாண்டல் யுட் கேர்ள்' என்ற ஆங்கில நாவலை எழுதி இருக்கிறார்.இன்றைய நவீன வாழ்க்கை முறை, பழங்குடி மக்களின் இயல்பான வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும், செங்கல் சூளைகளின் பெருக்கத்தால், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதையும், இந்த நாவலில் மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.நாவலாசிரியர் மேதில் சுதாகரனிடம் பேசிய போது...ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழ் இலக்கியங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. இலக்கிய ஆர்வத்தில் இந்த நாவலை எழுதி இருக்கிறேன். கடந்த, 15 ஆண்டுகளாக ஆதிவாசி மக்களுடன் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளையும், சேவையையும் அவர்களுக்கு செய்து வருகிறேன். இங்கு பழங்குடி குழந்தைகளுக்காக ஒரு இடத்தை வாங்கி, இலவச பள்ளியை நடத்துகிறேன்.இம்மக்களுடன் இருப்பதால், பழங்குடிகளின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவத்தை நாவலாக எழுதி இருக்கிறேன். நகர மக்களின் வாழ்க்கை முறை பழங்குடி கிராமங்களை அதிகம் பாதித்துள்ளன. அவர்களின் இருப்பு, இன்றைக்கு கேள்விக்குறியாகி வருகிறது. பழங்குடிகளின் நிலங்களை பண ஆசை காட்டி, நகரவாசிகள் வாங்கி சொந்தமாக்கி வருகின்றனர். இதனால், அவர்களின் கூட்டு குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு வருகிறது.செங்கல் சூளைகள் பெருகி வருவதால், மண்ணுக்காக, ஆதிவாசி நிலங்களை வாங்குகின்றனர். 50 அடி முதல், 100 அடி வரை பள்ளம் தோண்டி மண் அள்ளுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை செங்கல் சூளைகள் விழுங்கி வருகின்றன. இந்நிலை நீடித்தால், பழங்குடி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். அங்கு இருப்பவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். மேற்கு மலைத்தொடர்கள் பள்ளம், படு குழியாக மாறி வருகிறது. வன விலங்குகள் வாழ முடியாது. இதையே நாவலில் பதிவு செய்து இருக்கிறேன்.இயற்கை இயற்கையாக இருக்கும் வரை மனிதர்களுக்கு வாழ்க்கை இருக்கும். இது, அழிந்து விட்டால் மனிதர்கள் மயானங்களில்தான் வாழ நேரிடும், என, எச்சரிக்கிறார் இந்த எழுத்தாளர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE