உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசும் போது, அவர்கள் மீது, இ.பி.கோ., பிரிவுகளின்படி எத்தனையோ அவதுாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் வலுவிழந்து, காலாவதியாகி விடுகின்றன.'பேச்சுரிமை' என்பதை, நம் அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். அதனால் தான், அவர்கள் அத்துமீறி அநாகரிகமாக பேசுகின்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த அ.ராசா, நம் முதல்வரின் தாயைப் பற்றி, தவறாக பேசுகிறார் என்றால், அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?

முன்னாள், தி.மு.க., மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், 'அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவை, 'மம்மி' என்கின்றனர். பிரதமர் மோடியை, 'டாடி' என்கின்றனர். அப்படியானால், இந்த இரு தலைவர்களுக்கும் என்ன உறவு ?' என, இழிவாகப் பேசி இருக்கிறார். பேசக் கூடாததை எல்லாம் பேசி நாறடித்து விட்டு, எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத நிலை வரும்போது, வேண்டா வெறுப்பாக, மன்னிப்பு கோருகின்றனர்.அவதுாறு வழக்கு என்பது, இப்போது செல்லாக் காசாகி விட்டது. அதனால், அநாகரிக பேச்சு அதிகரித்து விட்டது.ராஜாஜியைப் பார்த்து, 'நான்சென்ஸ்' என, நம் நாட்டின் முதல் பிரதமர் நேரு ஒருமுறை கடிந்துக் கொண்டார். உடனே, நேரு மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்து, ௧ லட்சம் ரூபாய் நஷ்டஈடு வாங்கினார், ராஜாஜி. காரணம், அப்போது, நீதி பரிபாலனம் மிக நேர்த்தியாக நடந்தது.
இப்போது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வது எப்படி என்பது, அரசியல்வாதிகளுக்கு கைவந்தக் கலையாகி விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, 20 ஆண்டுகளாக இழுத்து அடிக்கப்பட்டதை, நாம் அறிவோம். அவதுாறு வழக்கு எல்லாம், இப்போது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே போடப்படுகின்றன. அதில், தீர்ப்பு ஏதும் கிடைப்பதில்லை; ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து, வழக்கை புதைத்து விட முடியும்.அதனால் தான், அரசியல் வியாபாரிகள் அநாகரிகமாகப் பேசுகின்றனர். அரசியல், சாக்கடையாக மாறிப் போய் ரொம்ப நாட்களாகின்றன. அதனால் தான், அரசியல் வியாபாரிகள் பேசும் பேச்சில், துர்நாற்றம் வீசுகிறது.

தரம் தாழ்த்திப் பேசும் இழிபிறவியின் உருவப் பொம்மையை எரிப்பதாலோ, செருப்பால் அடிப்பதாலோ, அவர் மனம் திருந்த போவதில்லை. இவரைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கும் கட்சித் தலைவருக்கு, தேர்தலில் சரியான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும். நீதிமன்றங்களால் தண்டிக்க முடியாத இந்த ஜென்மங்களுக்கு, மக்கள் மன்றத்தில் தான் தண்டனை கிடைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE