நீலகிரியில் முத்தான மூன்று; அதிர்ஷ்டசாலிகள் யாரு? குளுகுளு பகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் முத்தான மூன்று; அதிர்ஷ்டசாலிகள் யாரு? 'குளுகுளு' பகுதியில் 'அனல்' பறக்கும் பிரசாரம்

Added : ஏப் 04, 2021
Share
ஊட்டி தொகுதியில், 2016 தேர்தலில் காங்., கட்சி, அ.தி.மு.க.,வை, 10 ஆயிரத்து 418 ஓட்டுகள்வித்தியாசத்தில் வென்றது.தற்போதைய தேர்தலிலும் காங்., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான, கணேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் களத்தில் உள்ளார். இங்கு தி.மு.க.,- அ.தி.மு.க., நேரடியாக களத்தில் இல்லாததால், 'கடும் போட்டி இருக்காது,' என்ற நிலை இருந்தது. ஆனால், பா.ஜ., வேட்பாளராக போஜராஜன்

ஊட்டி தொகுதியில், 2016 தேர்தலில் காங்., கட்சி, அ.தி.மு.க.,வை, 10 ஆயிரத்து 418 ஓட்டுகள்வித்தியாசத்தில் வென்றது.தற்போதைய தேர்தலிலும் காங்., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான, கணேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் களத்தில் உள்ளார். இங்கு தி.மு.க.,- அ.தி.மு.க., நேரடியாக களத்தில் இல்லாததால், 'கடும் போட்டி இருக்காது,' என்ற நிலை இருந்தது. ஆனால், பா.ஜ., வேட்பாளராக போஜராஜன் அறிவிக்கப்பட்டதால், சூழல் மாறியது. அ.தி.மு.க.,- பா.ஜ., கட்சியினர், முக்கிய தலைவர்களை பிரசாரத்துக்கு அழைத்து வந்து, வாக்காளர்களின் ஓட்டுகளை பெறும் வகையில், வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.குறிப்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'படுகர் மக்களை எஸ்.டி., பட்டியலில் சேர்ப்பது; தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிலோவுக்கு, 30 ரூபாய்; மூடப்பட்ட, எச்.பி.எப்., தொழிற்சாலை வளாகத்தில், ஐ.டி.,பார்க்; சுற்றுலா மையமான ஊட்டி சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்,' என, உறுதியளித்தார். இந்த அறிவிப்புகள், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதை முறியடிக்கும் வகையில், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கணேஷ், தனது கட்சியினருடன், தி.மு.க.,- காங்., ஓட்டு வங்கி சிதறாமல், தனது வெற்றியை தக்க வைக்க, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இரு கட்சிகளின் ஓட்டுகளை, அ.ம.மு.க.,- ம.நீ.ம.,- நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் பிரிப்பதால், வெற்றிக்கான போட்டி களம் 'சூட்டை' கிளப்பியுள்ளது.குன்னுார் குன்னுார் தொகுதி, தி.மு.க., கோட்டையாக இருந்தது. 2016ல், 3,710 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இம்முறை தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் போட்டி களத்தில் உள்ளார். அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலாளர் வினோத்துக்கு 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. வினோத் தொகுதிக்கு புதியவர்; ராமச்சந்திரன் உள்ளூர்காரர் என்ற வகையில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மறுபுறம், ஜெ.,வின் 'சென்டிமென்ட்' வாழ்விடம் கோடநாடு உள்ள பகுதி என்பதால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ., சாந்திராமு, ஆளுங்கட்சி வேட்பாளருடன், களப்பணியாற்றி வருகிறார். தொகுதியில், அ.தி.மு.க.,- தி.மு.க.,வுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், மீண்டும் வெற்றி வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் பழனிசாமி, குன்னுாருக்கு நேரடியாக வந்து பிரசாரம் செய்தார்.'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வராமல் போனாலும், எங்கள் ஓட்டு வங்கி சிதற வாய்ப்பில்லை' என்ற நம்பிக்கையில் தி.மு.க.,வினர் உள்ளனர். அ.ம.மு.க.,- ம.நீ.ம.,- நாம் தமிழர் கட்சிகளும் கிராம ஓட்டுகளை பிரிக்கும் என்பதால், இறுதி கட்ட பிரசார சப்தம் கிராமங்களில் ஒலிக்கிறது.கூடலுார் கூடலுார் தொகுதியில், 2016ல், 13 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க.வை, தி.மு.க., வென்றது. இம்முறை, தாயகம் திரும்பிய வேட்பாளர்கள், தி.மு.க.,-அ.தி.மு.க., கட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு, சிறுபான்மையின மக்கள்; தாயகம் திரும்பியோர் ஆகியோரின் ஓட்டு வங்கி வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில செயலாளராக உள்ள, அ.தி.மு.க., வேட்பாளர் பொன்.ஜெயசீலன், கடந்த இரு ஆண்டுகளாக, தோட்ட தொழிலாளர் நன்மைக்காக பணிபுரிந்து வருகிறார். இதனால், தாயகம் திரும்யோரின் ஓட்டுகள் பிரியும் நிலை உள்ளது.தற்போதைய தி.மு.க., வேட்பாளர் காசிலிங்கத்துக்கு ஆதரவாக, நீலகிரி எம்.பி., ராஜா வந்த போது, அவர் முதல்வர் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு நிலவியதால், பிரசாரத்தில் வேகம் இல்லை. அதை பயன்படுத்தி, முதல்வர் பழனிசாமி நேரடியாக பிரசாரம் செய்தது, அக்கட்சியினரை குஷிப்படுத்தியது. எனினும், கூடலுார் தொகுதி 'வெற்றி' என்பது, தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக்கின், 'கவுரவ' பிரச்னை என்பதால், அக்கட்சியினர், இறுதிகட்ட கள பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். நாம் தமிழர்- தே.மு.தி.க., ஆகியவை ஓட்டுகளை நிச்சயம் பிரிக்கும்.இத்தகைய சூழ்நிலையால், நீலகிரி தேர்தல் வரலாற்றில், முதன் முறையாக, மூன்று தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X