சென்னை: ஆயுள் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான கணவருக்கு வர வேண்டிய, 19 லட்சம் ரூபாயை பெற்றுத் தருவதாக, 2.13 கோடி ரூபாய் சுருட்டிய டில்லி ஆசாமிகளை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, மந்தைவெளி திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதா, 67; கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது கணவர் ஸ்ரீதரன்; ஐ.ஆர்.எஸ்., அதிகாரி. மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களின் இரு மகள்கள், பெங்களூரில் வசிக்கின்றனர்.சந்தேகம்சுதா, மந்தைவெளியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இவரது கணவருக்கு, ஆயுள் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து வர வேண்டிய தொகையை பெற்றுவிட்டார். எனினும், காப்பீடு நிறுவனத்திடம் இருந்து, இன்னும், 19 லட்சம் ரூபாய்க்கு மேல் வர வேண்டி இருப்பதாக, இவருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.இந்நிலையில், அந்தத் தொகையை பெற்றுத் தருவ தாக, காப்பீடு நிறுவன அதிகாரிகள் போல பேசிய மர்ம நபர்கள், சுதாவிடம் இருந்து, வங்கிக் கணக்கு வாயிலாக, 2.13 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளனர்.இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சுதா புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், புகாரை விசாரித்தனர்.சுதாவுக்கு ஹிந்தி அத்துப்படி. இவரிடம், மோசடி ஆசாமிகள் ஹிந்தியில் பேசி, 2.13 கோடி ரூபாய் சுருட்டி இருப்பதால், வட மாநில கும்பலின் கைவரிசை தான் என்பதை, போலீசார் உறுதி செய்தனர். மோசடி ஆசாமிகள், சுதாவிடம் பேசப் பயன்படுத்திய, 'சிம் கார்டுகள்' அனைத்தும், போலி ஆவணங்கள் வாயிலாக வாங்கப்பட்டதைக் கண்டறிந்தனர்.வங்கிக் கணக்கு துவங்கவும், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால், இவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மோசடி ஆசாமிகள், தங்கள் கூட்டாளிகளின் வங்கிக் கணக்கிற்கு, 10 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர்.பாராட்டுவிசாரணையில், அந்த நபர், டில்லியைச் சேர்ந்தவர் என, தெரியவந்தது. இதையடுத்து, பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார், டில்லியில் முகாமிட்டு, அந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.அப்போது, சுதாவிடம் பணம் சுருட்டியது, டில்லி, விகாஸ் நகர், அமன்பிரசாத், 29; பிரதீப்குமார், 29 மற்றும் டில்லி, உத்தம் நகரைச் சேர்ந்த மனோஜ்குமார், 44; ஹீமன்சு தாஹி, 25; குபீர் சர்மா, 27; ராம்பால், 30, ஆகியோர் என்பது தெரியவந்தது.ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். மோசடி பணத்தில், பிரதீப்குமார், டில்லியில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அமன் பிரசாத்தும் வீடு வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசாரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE